காட்டுக்குப் புலிகள் நாட்டுக்குக் கவிஞர்கள்


 காட்டுக்குப் புலிகள் நாட்டுக்குக் கவிஞர்கள்

*

புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் "புலிகள் தினமா'கக் கொண்டாடுகிறது உலகம்.


மற்ற விலங்குகளுக்கு  இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்?


ஏனெனில் உலகச் சூழலியல் வட்டத்தின் மையமாகப் புலிகள் இருக்கின்றன. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அவற்றுக்கு உணவான மானும் கால்நடைகளும் அங்கு இருக்கவேண்டும். மான் இருந்தால் மானுக்கு உணவான புல் மற்றும் தாவரங்கள் அங்கு இருக்க வேண்டும். தாவரங்கள் வளர வேண்டுமென்றால் அங்கு நீர்நிலைகள் இருக்க வேண்டும். ஒரு காட்டில் நீர்நிலைகள் இருக்கின்றன என்றால் அங்கு தொடர்ந்து மழை பொழிகிறது என்று பொருள். ஓர் இடத்தில் தொடர்ந்து மழை பொழிகிறது என்றால் அங்கு வனச் சூழலும் , வானலாவிய உயர்ந்த மலைகளும் இருக்கின்றன என்று பொருள். 


இப்படி வளமான ஒரு சூழலுக்கு அடுத்தாற் போல்தான்

அதைச் சார்ந்து வாழும்  ஊர்களும் இருக்க முடியும். 


இந்த உலகில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் ஏன் ஒவ்வொரு உயிரும் அவற்றுக்குத் தேவையான உணவு, உடை ,உறைவிடம் ஆகியவற்றோடு நிம்மதியோடு வாழ இந்த  சூழலியல் சங்கிலி சமநிலையோடு இருந்தாக வேண்டியது அவசியம். அதைப் பாதுகாக்கிற  மையப் புள்ளியாக புலிகள் இருப்பதனால்தான் புலிகளுக்கு முக்கியத்துவமும் புலிகள் தினக் கொண்டாட்டமும்.


காட்டுக்குப் புலிகள் எப்படி அவசியமோ அப்படித்தான் நாட்டுக்குக் கவிஞர்களும். கவிஞர்கள்  இயற்கையின் அழகுகளைப் பாடுகிறவர்களாகவும், சமுதாயச் சமநிலையை நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். 


ஓடும் நதிகளும், உயர்ந்த மலைகளும், பூத்துக் குலுங்கும் செடிகொடிகளும், வான் நோக்கி வளரும் மரங்களும், துள்ளி ஓடும் மான்களும், துதிக்கை உயர்த்தும் யானைகளும், கர்ஜனை புரியும் சிங்கங்களும், 

பாடும் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும், தட்டான்களும்,  புல் பூண்டுகளும், புழு பூச்சிகளும் அவ்வளவு ஏன் சிறு கூழாங்கற்கள் கூட

அவர்கள் கண்களுக்கு அற்புதங்களாகவும் அதிசயங்களாகவும் தெரிகின்றன. அவற்றைத் தங்கள் கவிதைகளில் அழகியலோடு பாடி வைக்கிறார்கள். 


மேலும் அவர்கள்  உலகின் ஆதாரமான அறத்தைப் பாடுகிறார்கள். நீதியைத் தங்கள் கவிதைகளில் போற்றி வழிபடுகிறார்கள். அநீதிக்கு எதிரான குரலை எழுப்புகிறார்கள். 


கனிம வளங்களுக்காக ஒரு மலை உடைக்கப்படுகிறது என்றால் , மணல் கொள்ளைக்காக

ஒரு நதியின் சுரண்டப்படுகிறது என்றால் ,  மரங்களுக்காக ஒரு வனம் மொட்டையடிக்கப்படுகிறது என்றால் அவற்றுக்கு எதிராகக் குரல்  எழுப்புகிற முதல் மனிதனாகக் கவிஞன் இருக்கிறான். அவற்றைத் தன் சொந்த சொத்தாகவே அவன் நினைக்கிறான். 


அது மட்டுமல்ல

சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுகிறவர்களின் குரலாக அவன் இருக்கிறான். கண்ணீரைத் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் ஏந்த முடியாதவர்களுக்காகத் தன் சொற்களை ஆயுதமாக ஏந்துகிறான்.


விவசாயம் அழிக்கப்படும்போது

உழவர்களின் குரலாக மட்டுமல்ல.... எதிர்காலச் சந்ததியினருக்காக அவன் அறச்சீற்றம் கொள்கிறான். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் மலிந்து வரும் சூழலில் அவர்களின் சார்பாக அவன் கொதித்தெழுகிறான்.


வருங்காலத் தலைமுறைகளுக்காக வாதாடும் வழக்கறிஞன் அவன். சூரியனுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்திக்கிற சிந்தனையாளன் அவன். அவை ஒன்றோடு ஒன்று கொண்டிருக்கும் இயைபை உணர்ந்து அவை ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் காவலனாகத் தன்னைத் தானே  நியமித்துக் கொள்கிறான். அவை மீறப்படும்போது  நீதிபதியாகவும் மாறி வாழ்வியல் சட்டங்களை வகுக்கிறான். அவை அற  நூல்களாகி காலத்தின் கல்வெட்டுகளாக நிலைக்கின்றன.


ஆகவேதான் "பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்" என்றான்  நம் பாட்டன் மகாகவி பாரதியும். 


ஒரு கவிஞன் எழுதும் அழகியல் பாடல்கள் அவற்றை வாசிப்பவர்களின் இதயங்களில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன. ஆகவேதான்  கவிஞன் வாழ்கின்ற நாடு

வளமான பண்பட்ட சமுதாயமாக போற்றப்படுகிறது. 


ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைப் பாரம்பரியத்துடன் தொடரும் ஒரு சமுதாயமாக தமிழகம் இருந்து வருகிறது. அதுதான் அதன் வரலாற்றுப் பெருமை. அந்தச் சங்கிலி இன்றும் தொடர்கிறது.


ஆங்கில வழிக் கல்வி எனும் மொழிக் கொலையினையும் தாண்டி இந்தச் சங்கிலி உயிர்ப்புடன் தொடர்கிறது. ஆரம்ப நிலைகளில் கவிதை எழுதும் ஒரு கவிஞன் கூட மொழியைப் பாதுகாக்கிறவன் என்ற முறையில் போற்றப்பட வேண்டியவனே.


'உலகக் கவிதை நாள்' கொண்டாடப்படும் (மார்ச் 21) இன்று 'உலக வன நாளா'கவும் கொண்டாடப்படுவது எவ்வளவு பொருத்தம்! 


எண்ணங்களை விதைத்துக் கவிதை எழுதும் எழுத்துக் கவிஞர்களுக்கு உலகக் கவிதை நாள் வாழ்த்துக்களையும் விதையினை  ஊன்றி நிலத்தில் பசுமையை எழுதும் பசுமைக் காவலர்களுக்கு உலக வன நாள் வாழ்த்துக்களையும் என் இதயம் நிறையத்

தெரிவித்துக் கொள்கிறேன். 


அன்புடன் 


பிருந்தா சாரதி

*

உலகக் கவிதை நாள் 

உலக வன நாள்

#worldpoetryday

#internatonaldayofforests

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,