திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்

 

"பெருவெற்றி அடைய பின்னணி அவசியமில்லை"- திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்
திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சங்கராபரணம், வசந்த மாளிகை போன்று 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ‘திரை இசைத் திலகம்' கே.வி. மகாதேவன். அவரின் பிறந்தநாள் இன்று!

 அவர் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் உண்டு.


பிறரிடம் கருணை நோக்கு தேவை

கே.வி.மகாதேவனிடம் ஒரு பெரிய இசைக்குழு உண்டு. அந்த இசைக்கலைஞர்களை எப்போதுமே அவர் மிகக் கனிவுடன் நடத்துவார். அவர் இசையமைக்கும் சில திரைப்படங்களுக்குச் சில இசைக்கருவிகள் தேவைப்பட்டிருக்காது. என்றாலும்கூட தனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தன் குழுவில் உள்ள அத்தனை இசைக் கலைஞர்களுக்கும் ஆதரவு அளித்து வந்தார் அவர்.

நாம் பேச வேண்டாம், நம் சாதனைகள் பேசட்டும்

காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைத் தன் இசையமைப்பில் அளித்தவர் கே.வி.மகாதேவன். ஆனால், அவர் தன்னைப்பற்றி வெளி உலகத்துக்கு மிகமிகக் குறைவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். பேட்டிகளுக்கு அவர் ஒப்புக் கொண்டதில்லை என்றே கூறிவிடலாம்.


பெருவெற்றி அடைய பின்னணி அவசியமில்லை

கே.வி.மகாதேவன் தன் இளமைக்காலத்தில் நாகர்கோவிலருகே உள்ள கிருஷ்ணன்கோவில் என்ற இடத்தில் வளர்ந்தவர். அவர் தந்தை ஓர் ஆலயத்தில் பாடகராகப் பணிசெய்து சொற்ப ஊதியம் பெற்றவர். வறுமையான பின்னணியில் வளர்ந்தும்கூட மாபெரும் உயரத்தை அடைந்தவர் கே.வி.மகாதேவன். சிறுவனாக இருக்கும்போது திருவாங்கூர் அரண்மனையில் ஒரு முறை மிகச் சிறப்பாக அவர் பாடியதைக் கேட்டு மகிழ்ந்த மகாராஜா அவருக்கு ஒரு தங்கக் காசை அளித்தார். அதைத் தனது ஊக்குவிக்கும் சக்தியாக எடுத்துக்கொண்டு தன் திறமையை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டார் கே.வி.மகாதேவன்.

சிறப்பான நடத்தை எதிர்பாராத கோணங்களிலும் உதவும்

கே.வி.மகாதேவனின் சக காலத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை, திரையிசையில் அவருக்கு சமமாக ஆட்சி செய்யத் தொடங்கிய கால கட்டம் வந்தது. ஒரு முறை காலகாலமாக கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளியான படங்களில் நடித்த எம்ஜிஆர் தனது அடுத்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கச் சொல்லி அணுகினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ஆசைதான். ஆனால் அவர் தன் தாயிடம் இதுபற்றி கூறிய போது பளார் என்று அவரை அரைந்தாராம் அவரது தாய். "மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் கம்பெனிகளுக்கு நீயேன் இசையமைக்க ஒப்புக் கொள்கிறாய்? அது கூடாது" என்றாராம். (இதைத் தொடர்ந்து அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் விஸ்வநாதன்). அப்படி ஒரு நற்பெயரை சம்பாதித்து வைத்திருந்தார் கே.வி. மகாதேவன்.

எப்போதும் நம்மை முதன்மைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது

பல பிரபல திரை இசையமைப்பாளர்கள் தங்களது பெரும்பாலான பாடல்களுக்கு 'மெட்டுக்குப் பாட்டு' எனும் வகையில்தான் இசை அமைப்பது வழக்கம். அதாவது இசைக்குத் தகுந்தபடி பாடல் வரிகளை எழுத வேண்டும். ஆனால் இதில் கே.வி.மகாதேவன் நேர்மாறானவர். கிட்டத்தட்டத் தனது அனைத்துத் திரைப்பட பாடல்களுக்கும் வரிகள் எழுதப்பட்ட பிறகுதான் அவற்றுக்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார்.


thanks :vikatan.com

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,