அவருக்காக அவர் வாழவில்லை.
தீபாவளி பண்டிகையை அப்பா உற்சாகமாக கொண்டாடுவார். காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பட்டாசு வெடிப்போம். அப்பாவுக்கு சரவெடி மிகவும் பிடிக்கும். சிவகாசியில் உள்ள அப்பாவின் நண்பர்கள் பட்டாசு அனுப்பி வைப்பார்கள். 12 மணி வரை பட்டாசு வெடிப்பார். அப்பா ஜாலியான மனிதர். அனைவரிடமும் அன்பாக பழகுவார். யாரிடமும் எதையும் எதிர்பார்த்து பழகமாட்டார். அப்பா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 300 படங்களுக்கும் மேலாக நடித்து உள்ளார்.
வல்லவன் ஒருவன், இருவல்லவர்கள், சி.ஐ.டி. சங்கர், நீலகிரி எக்ஸ்பிரஸ், காலம் வெல்லும், துணிவே துணை போன்ற படங்கள் அவரது வீர தீரத்தை பறை சாற்றும். சேலம் ரோட்டரி கிளப் கூட்டத்தில் ரசிகர் மன்றம் அப்பாவுக்கு 'ஜேம்ஸ் பாண்ட்' பட்டத்தை வழங்கினார்கள். அன்று சிந்திய ரத்தம் படப்பிடிப்பு ஏற்காட்டில் நடந்தபோது என்னை குதிரையில் அமர வைத்து ஓட்டினார். எனக்கு பயமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. அதன் பிறகு குதிரையில் ஏறவே இல்லை.
அனைத்து நடிகர், நடிகைகளுடனும் நட்புரிமையோடு பழகுவார். எம்.ஜி.ஆர்., சிவாஜியோடு அப்பாவுக்கு நெருக்கமான உறவு இருந்தது. சிவாஜி சார் 2 முறை வீட்டுக்கு வந்து இருக்கிறார். அப்பாவை 'சங்கரா' என்றுதான் கூப்பிடுவார். சினிமாவில் அனைத்து கெட்டப் பழக்கமின்றி ஒழுக்கத்தோடு வாழ்பவர் நடிகர் சிவகுமார் என்று பாராட்டுவார். கலைஞர் கருணாநிதியுடனும் அப்பாவுக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் வசனம் எழுதிய வண்டிக்காரன் மகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
ஒரு நாளைக்கு '3 ஷிப்ட்' முறையில் அவர் சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்தபோது நான் மணிப்பாலில் டாக்டருக்கு படித்துக்கொண்டு இருந்தேன். அவருடன் நான் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதுதான் என் வாழ்க்கையில் உள்ள ஒரே குறையாகும். அவருடன் பணியாற்றிய சினிமா நண்பர்கள் அவரைப் பற்றி என்னிடம் கூறும் தகவல்கள் பிரமிப்பாக உள்ளது.
2000-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி குவைத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்க அப்பா சென்று இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்துவிட்டார். மற்றவர்களுக்காக அவர் வாழ்ந்தார். அவருக்காக அவர் வாழவில்லை. இது ஒன்றுதான் குறை.
- டாக்டர் விஜய்சங்கர்
Comments