அன்றாடம் நாம் சந்திக்கும் வலிக்கு நிவாரணமாகவும் இசை இருக்கும்"

 

வைரல், வியூஸ்... இசையின் வெற்றிக்கு இவைதான் அளவுகோலா?!” 




 ராக் வித் ராஜா’ என்ற இளையராஜாவின் லைவ் இசை நிகழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது தலைநகரம். சென்னை தீவுத்திடலில் 18.3.2022 (வெள்ளிக்கிழமை) ராக் வித் ராஜா ‘Rock with Raaja’ நிகழ்ச்சி நடைபெற்றது
அதற்கு முன், இளையராஜாவை அவரது ஸ்டூடியோவிலேயே சந்தித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவருக்கே உரித்த பாணியில் கம்பீரமாக பதிலளித்துள்ளார். ’தி இந்து’ ஆங்கிலத்தில் வெளியான அந்தப் பேட்டியிலிருந்து...

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல் ஸ்டூடியோவின் தோற்றம் இன்னிசையாக ஆன்மாவை வருடியது. சுவர்களில் இருந்த இசைக் கருவிகளின் மூரல் ஓவியங்கள் ரம்மியமாக இசைப்பதை இதயம் மட்டுமே உணர்ந்து கொள்ளும். இன்னொரு சுவரில் இசைஞானியின் உருவம் இசைக் குறியீடுகளால் உருவாக்கப்பட்டிருந்தது. 'இசை தான் ராஜா.. ராஜா தான் இசை' என்பது போல்…
 இது குறித்து அவர் பேசுகையில், "கடந்த இரண்டாண்டுகள் மக்களுக்கு ஓர் இருண்ட காலம் தான். ஆனால், அந்த இருண்ட காலத்திலும் அவர்களுக்கு எனது இசை துணையாக இருந்துள்ளது. இப்போது அவர்கள் அந்த இசை மழையில் நேரில் நனைய ஒரு வாய்ப்பாக ராக் வித் ராஜா இருக்கும். 'வரும் காலம் வசந்த காலம்..' என்ற நம்பிக்கையை இது அவர்களுக்குத் தரும் என நான் நம்புகிறேன். இதுவரை நிறைய லைவ் கச்சேரி செய்திருந்தாலும் கூட ராக் வித் ராஜா முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்" என்றார்.

ஆம், டிவி புரோமோக்களில் கூட என் 'பாட்டுக்கு ஆடத் தயாரா' என்று இளையராஜா புன்னகையுடன் கேட்பதிலிருந்தே அவர் இந்தக் கச்சேரி 'போட்டு வைத்த கலகல திட்டம்' என்னவென்று தெரிகிறது.

புரோமோ பற்றி 'ஆமாம் அதுதான் க்ளூ ஆனால் நான் மேற்கொண்டு சொல்ல முடியாது' என்று பேச்சைத் தொடர்ந்த இசைஞானி, "கடந்த சில ஆண்டுகளில் இசை பல மாற்றங்களை சந்தித்துவிட்டன. வைரல் என்கிறார்கள்... வியூஸ் என்கிறார்கள்... இசையின் வெற்றிக்கு இவைதான் அளவுகோலா?! என் பாடல்கள 4 தலைமுறைகளாக மக்களால் கொண்டாடப்படுகிறதே... அப்படியென்றால் அது வைரலா அல்லது ஒரு வாரம், 10 நாள் பிரபலமாக இருப்பது வைரலா? இப்போது இசையமைப்பாளர்களே இல்லை புரோகிராமர்கள்தான் இசைக்கின்றனர். புதிய குரல்கள் தினமும் வருகின்றன. ஆனால் எஸ்பிபி போலவும், ஜேசுதாஸ் போலவும் காலத்தைக் கடந்து நிற்கும் குரல்கள் எங்கே? அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. புதிய வரவுகள் கூடாது என்பதில்லை. நான் புதியவர்கள் திரைக்கு வருவதை ஊக்குவித்தேன். மணிரத்னம் என்னிடம் வந்தபோது உடனே ஓகே சொன்னேன். காரணம் சினிமாவில் புதியவர்கள் வர வேண்டும் என்று நான் விரும்பினேன்" என்றார்.

1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்ட இளையராஜா இப்போதும் சினிமாவில் பிஸியாகத்தான் இருக்கிறார். வெற்றிமாறன், சீனு ராமசாமி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இந்தோ ஆங்கிலப் படமான ’ஏ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ (A Beautiful Breakup) என்ற படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
: காயங்கள், வலிகளை குணப்படுத்தும் இசை... - அண்மையில் சீதாலட்சுமி என்ற பெண் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த இளையராஜாவின் கற்பூர பொம்மை பாடலைப் பாடியிருப்பார். அதேபோல் நோயுற்ற குழந்தை ஒன்று இசைஞானியின் திருவாசகத்தைக் கேட்டு மீண்ட செய்தியையும் நாம் படித்திருப்போம். இசையின் சக்தியா இல்லை இளையராஜா இசையின் சக்தியா என்று பேசப்பட்டதையும் நாம் அறிவோம்.
 இசையின் சக்தி பற்றி இசைஞானி கூறும்போது, "எல்லா சினிமாப் பாடல்களும் படத்தில் வரும் ஒரு நிலவரத்தைப் பொறுத்து உருவாக்கப்பட்டவையே. ஆனால் அதைக் கேட்பவர்கள் மீது அது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்ததே இல்லை. இசைக்கு குணப்படுத்தும் மகிமை இருக்கிறது. அன்றாடம் நாம் சந்திக்கும் வலிக்கு நிவாரணமாகவும் இசை இருக்கும்" என்றார்

நன்றி https://www.hindutamil.in/news


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி