தாய்பத்திரத்தை தவறாமல் கேட்டு வாங்குங்கள்:-

 தாய்பத்திரத்தை தவறாமல் கேட்டு வாங்குங்கள்:-

:::::::::::::::::::*::::::::::::::::::*::::::::::::::::*::::::::::::::::::



#சொத்து மீது நமக்கு இருக்கும் #உரிமை-யை நிலைநாட்டிக்கொள்ள ஆவணங்களே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றன. அதனால் சொத்து வாங்கும்போது அது சம்பந்தப்பட்ட அத்தனை ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது.


 அத்துடன் அந்த ஒரிஜினல் ஆவணங்களை கேட்டுப்பெறவும் வேண்டும். அதிலும் சொத்து நமக்குரியது தான் என்பதற்கு அத்தாட்சியாக நம்மிடம் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும் என்று இருக்கின்ற ஆவணங்களை மறக்காமல் வாங்கிவிட வேண்டும்.


உறுதி செய்ய:-


அப்படிப்பட்ட முக்கியமான ஆவணங்களுள் ஒன்று தான் தாய் பத்திரம். நாம் வாங்கும் சொத்துக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் கிரயப்பத்திரத்துக்கு முந்தைய பத்திரம் தான் தாய் பத்திரம் எனப்படுகிறது. இந்த தாய் #பத்திரம் மூலம் தான் சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவருக்கு அந்த சொத்து எப்படி வந்தது என்பதை உறுதி செய்ய முடியும்.


அதனால் தாய் பத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் இந்த தாய்பத்திரத்தின் வாயிலாக தான் கிரயப்பத்திரம் எழுதப்படும் என்பதால் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்களை தெளிவாக படித்து பார்த்து அவை சரியாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.


தாய்பத்திரம் அவசியம்

அதோடு கிரயப்பத்திரம் எழுதப்பட்டவுடன் அதில் வாங்கும் சொத்து பற்றிய விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதோடு விட்டுவிடக்கூடாது. அதோடு தாய்பத்திரத்தை மறந்துவிடக்கூடாது. அதில் இருக்கும் தகவல்கள் அடிப்படையில் தான் நமக்கு கிரயப்பத்திரம் பதிவு செய்யப்பட்டு விட்டதே என்று நினைத்துவிடவும் கூடாது.


ஏனென்றால் உங்களிடம் இருக்கும் கிரயப்பத்திரம் உண்மையானது தானா என்பதை தாய்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விவரங்கள் மூலமே உறுதிபடுத்த முடியும். அதனால் நீங்கள் வாங்கும் சொத்தை விற்பனை செய்ய நினைத்தால் தாய் பத்திரம் அவசியம் தேவைப்படும்.


 வங்கிக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கும் தாய் பத்திரத்தின் தேவையும் இருக்கும். இருந்தாலும் நீங்கள் வாங்கும் சொத்துக்கு தாய் பத்திரம் அப்படியே கிடைத்து விடும் என்று சொல்லமுடியாது.நகல் பத்திரம்

வீட்டுமனை வாங்குவதாக இருந்தால் பல மனைப்பிரிவுகளை உள்ளடக்கிய லே–அவுட்டில் இருந்து அந்த மனை உங்களுக்கு பிரித்து தரப்பட்டு இருக்கலாம்.


 அந்த மொத்த மனைப்பிரிவுக்கும் இருக்கும் ஒரே ஒரு தாய் பத்திரத்தை மனை வாங்கும் ஒவ்வொருவருக்கும் கொடுப்பது முடியாத காரியமாக இருக்கும். எனவே அப்படிப்பட்ட மனைப்பிரிவில், மனை வாங்குபவர்கள் தாய் பத்திரம் பெற இயலாது.


இருந்தபோதிலும் அதன் நகல் தாய்பத்திரத்தை கண்டிப்பாக வாங்கி விட வேண்டும். அப்போது தான் அந்த மனை உங்களுக்கு உரிமையுடையது என்பதை உறுதிபடுத்த ஏதுவாக இருக்கும். பட்டா உள்ளிட்ட ஆவணங் களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்போது அந்த மனை யாரிடம் இருந்து எப்படி உங்களுக்கு வந்தது என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கும் பட்சத்தில் நகல் தாய் பத்திரம் உதவிகரமாக இருக்கும்.


கேட்டு பெற வேண்டும்:-


அதுதவிர பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது மனை பற்றிய தகவல்கள் சரியானது தான் என்பதை உறுதிபடுத்தும் விதமாகவும் நகல் தாய் பத்திரத்தின் பயன்பாடு அமையும். 


ஆகையால் வாங்கிய சொத்துக்கு கிரயப்பத்திரம் கைக்கு வந்து விட்டது என்று இருந்து விடாமல் தாய்பத்திரத்தையும் கேட்டு பெறுவது நல்லது. அது சொத்தின் மீது நமக்கு இருக்கும் உரிமையை உறுதிபடுத்தும் சான்றாக அமையும்..



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,