பாய் வீட்டு கல்யாண தால்ச்சான்னா அது இப்படிதாங்க செய்யணும்.
பாய் வீட்டு கல்யாண தால்ச்சான்னா அது இப்படிதாங்க செய்யணும்.
பாய் வீட்டு விசேஷங்களில் நெய் சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள இந்த தால்ச்சா வைப்பார்கள். சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். வெள்ளை சாதத்தில் இந்த தால்சா போட்டு கொஞ்சம் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால், அட்டகாசமாக இருக்கும். சூப்பரான தால்சா ரெசிபி சுவையாக எப்படி செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முதலில் ஒரு குக்கரில் கடலைப்பருப்பு 1/4 கப், துவரம்பருப்பு 1/4 கப், சேர்த்து ஒரு முறை தண்ணீரில் அலசிவிட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை தேவையான அளவு ஊற்றி மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பச்சைமிளகாய் – 5, பருப்புக்கு தேவையான அளவு உப்பு போட்டு, 5 விசில் விட்டு பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். விசில் வந்ததும் பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து, ஒரு கரண்டியை வைத்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ளுங்கள். இந்த பருப்பு அப்படியே இருக்கட்டும்.
கடலைப்பருப்பு ரொம்பவும் குழையக் குழைய வேக வைக்கக்கூடாது. பார்ப்பதற்கு ஆங்காங்கே இந்த கடலை பருப்பு தெரிய வேண்டும். அப்போதுதான் ருசி கூடுதலாக இருக்கும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 1, ஏலக்காய் – 2, லவங்கம் – 3, நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1, சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, நீளமாக வெட்டிய கத்தரிக்காய் – 2, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2, இவைகளை சேர்த்து நன்றாக வதக்குங்கள்.
தக்காளி பழம் நன்றாக வதங்கிய பின்பு, 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி வரமிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், மல்லித் தூள் – 1 1/2 ஸ்பூன், சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, சிறிய நெல்லிக்காய் அளவு புளி கரைசலை அதில் ஊற்றி, ஒரு நிமிடம் போல பச்சை வாடை போக கொதிக்க வைத்து விட்டு, அதன் பின்பு குக்கரில் வேக வைத்திருக்கும் பருப்பை கடாயில் ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து விட்டு, 2 நிமிடம், 2 கொதி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விட்டால், சுடச்சுட சூப்பரான தால்ச்சா தயார். சும்மா சொல்லக் கூடாதுங்க. நாம வைக்கிற சாம்பாரா விட, இதோட சுவை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். இது ரொம்பவும் தண்ணியாக இருக்க கூடாது. கூட்டு பாத்திற்க்கு கொஞ்சம் திக்காக இருந்தால் தான் சுவை தரும்.
Comments