ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம்...
- Get link
- X
- Other Apps
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம்...
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில், ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவக் கோயிலாகக் கருதப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆண்டாள், வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீரங்க அரங்கனைக் கைத்தலம் பற்றினாள் என்பது வரலாறு. எனவே ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகத் திருக்கல்யாணம் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி கோயிலுக்கு உள்ளேயே நடைபெற்றது. தற்போது கொரோனா விதிமுறைகள் தமிழக அரசால் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து கோயிலுக்கு முன்புறம் உள்ள ஆடிப்பூரக் கொட்டகையில் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
முதல்நாளில், விழா தொடக்கமாக ஆண்டாள் - ரங்கமன்னாருக்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதில் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் - ரங்கமன்னார் பக்தர்களுக்குக் காட்சியருளினர். பின் கருடாழ்வார் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, விழா நாள்களில் தினமும் ஆண்டாள் - ரங்கமன்னாருக்கு அதிகாலையில் சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு அலங்காரத்துடன் திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவத்தையொட்டி காலையில் கோயில் ரதவீதிகளில் செப்புத்தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
thanks: https://www.vikatan.com/
- Get link
- X
- Other Apps
Comments