நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பம்

 நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 1952ஆம் ஆண்டு கமலம்மாளை திருமணம் செய்தது வைத்தார்கள். கமலம்மாள் சிவாஜியின் அக்கா மகளாவார். இவர்களுக்கு முதலில் பிறந்த பெண் சாந்தி. இவருடைய கணவர் பெயர் டாக்டர். கே. நாராயணசாமி. ஐ.ஐ.டி-யில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர்களுக்கு விஜயலட்சுமி, சத்யலட்சுமி என்ற பெயரில் இரண்டு பெண் குழந்தைகள். அவர்களுக்கும் கல்யாணமாகி குழந்தைகள் பிறந்தன. அடுத்து மூத்த மகன் ராம் குமார். சிவாஜியின் தங்கை பத்மாவதியின் மகள் கண்ணம்மாவைத்தான் அவருக்கத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள். துஷ்யந்த், தர்ஷன், ரிஷ்யன். துஷ்யந்த் மட்டும் 'ஜூனியர் சிவாஜி' என்ற பெயரில் 'சக்சஸ்' படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார்.


சிவாஜியின் தம்பி சண்முகத்திற்குப் பிறகு ராம்குமார்தான் சிவாஜி பிலிம்ஸ் வேலைகளை கவனித்து வந்தார். அதற்கடுத்தவர் 'இளைய திலகம்' பிரபு. அவரது மனைவி பெயர் புனிதவதி. இருவருக்கும் பிறந்த குழந்தைகள் ஐஸ்வர்யா, விக்ரம். விக்ரமிற்கு திருமணம் ஆகி
விட்டது.
சிவாஜியின் இளையமகள் தேன்மொழி. கணவர் டாக்டர் கோவிந்தராஜன். மூத்த மாப்பிள்ளை நாராயணசாமியின் தம்பி. குழந்தைகளுக்கு வைத்தியம் பார்க்கும் திறமை வாய்ந்த மருத்துவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். பிரியதர்ஷினி அமெரிக்காவில் இருப்பவர். குணால் இன்ஜினியரிங் படித்தவர்.
சிவாஜியின் தம்பி காலஞ்சென்ற சண்முகம். அவரது மனைவி அலமேலு. இவர் சிவாஜியின் மனைவி கமலம்மாளின் உடன் பிறந்த தங்கை. அவர்களுடைய இரண்டாவது மகன் கிரி. குடும்பத்தோடு சிவாஜி பெரியப்பா குடும்பத்துடன் இருக்கிறார். அவரும் சிவாஜி பிலிம்ஸ் வேலைகளை கவனித்து வருகிறார். கிரியின் மனைவி அனுராதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் ஸ்ரீமத், மற்றொருவர் சிவ்ஸ்ரீ. சண்முகத்தின் மூத்த மகள் முரளி குடும்பத்தோடு அமெரிக்காவில் இருக்கிறார். சிவாஜியின் அண்ணன் தங்கவேலு ஏற்கனவே காலமாகி விட்டார்.
சிவாஜியின் தங்கை பத்மாவதி. அவரது கணவர் பெயர் வேணுகோபால். அவர்தான் சாந்தி திரையரங்கை பல வருஷங்களாக நிர்வாகம் செய்து வந்தார். அவர்களுக்கும் பெண், பிள்ளை, பேரன், பேத்திகள் எல்லோரும் இருக்கிறார்கள். நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பார்கள். அப்படிப்பட்ட குடும்பம்தான் நாடே போற்றி மகிழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பமாகும். இவருக்கு ஏராளமான பேரன், பேத்திகள் உலகம் முழுவதும் நண்பர்கள் சுற்றத்தார் என்று பலர் இருக்கின்றார்கள். நடிகர் திலகம் தலைசிறந்த நடிகர் மட்டுமல்ல. மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தின் தலைவரும் ஆவார்.
தமிழ்த்தாயின் தன்னிகரற்ற கலைஞராக விளங்கிய சிவாஜிகணேசன் பல்வேறு தெலுங்குப் படங்கள், கன்னடப் படங்கள், மலையாளப் படங்கள், இந்தி என்று அனைத்து மொழியினரின் பாராட்டுக்களையும் பெற்று மாபெரும் கலைஞராக வலம் வந்தார். சிறிய வயதில் நடிகராக வேண்டும் என்று ஆர்வப்பட்டு கூத்து, நாடகத்துறை என்று நுழைந்து சினிமாவிற்குள்ளும் காலடி எடுத்து வைத்து தனது ஆற்றலை விரிவுபடுத்தி உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்த மகாகலைஞனாக சிறந்து விளங்கினார். தனது வாழ்க்கையின் இறுதி காலத்தில் தனது மனைவி, மகன், மகள், பேரக்குழந்தைகள் மற்றும் சுற்றத்தாரோடு அன்போடும் பாசத்தோடும் எல்லாக் குடும்பத்திற்கும் தலைவராக, குடும்பத்தலைவராக வாழ்ந்து வந்தார்.
எழுபத்தி நான்கு வயதான சிவாஜி ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டவர். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருதயத்தில் அவருக்கு பேஸ்மேக்கர் என்ற கருவி பொருத்தப் பட்டது. அதன் காரணமாக ஆண்டுதோறும் அவர் தனது இருதயத் துடிப்பைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதற்காக அவர் அடிக்கடி அப்பல்லோ மருத்துவமனைக்கு வருவதும் போவதுமாக இருந்தார். கடந்த 16.7.2001 அன்று அவர் மூச்சுத் திணறல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது நுரையீரலில் தண்ணீர் சேர்ந்துக் கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்படுவதைக் கண்டறிந்தனர். அதற்காக சிறுநீரகத்தை சுத்தப்படுத்தத் தேவையான டயாலிசிஸ் சிகிச்சை உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த சிகிச்சையை மேற்கொள்ள சிவாஜி மறுத்து விட்டார். இருதய நோய் நிபுணர் எம்.கே. ராமச்சந்திரன் சிறுநீரக சிகிச்சை மருத்துவர் மணி ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர்கள் குழுவே சிவாஜியை கவனிக்கத் துவங்கினர். ஆனாலும் அவரது உடல்நிலையில் மாற்றம் தென்படவில்லை.
இறுதியில் 21.07.2001 இரவு 7.46 மணியில் அனைத்து மொழிக் கலைஞர்களும் அதிசயித்து பார்த்து பிரமித்துப் போன நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூச்சு நின்று போனது. அருகிலிருந்து கவனித்து வந்த சிவாஜியின் மனைவி கமலம்மாள். மூத்த மகன் ராம்குமார், வெளிநாடு சென்றிருந்த இளைய மகன் பிரபு மற்றும் உறவினர்கள் இந்த செய்தி அறிந்து கதறி அழுதனர். தகவல் தெரிந்த நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், விஜய்காந்த், விஜய் உள்ளிட்ட திரையுலகினர் இரவோடு இரவாக மருத்துவமனைக்கு வந்தனர். அஞ்சலியைச் செலுத்தினர். ரசிகர் கூட்டமும் இரவே திரண்டு வந்தது.
அதிகாலையிலேயே நீண்ட கியூ வரிசையில் நின்று லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அன்று முதல் அமைக்கராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா, தி.மு.க தலைவரும் அன்று முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த கலைஞர் மு. கருணாநிதியும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சிவாஜியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். சிவாஜி கணேசன் மறைவையொட்டி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு இருந்தன.
2001 ஜூலை 23ந் தேதி அன்று சென்னை பெசன்ட் நகர் மின்சார சுடுகாட்டில் தகனம் நடந்தது. அரசு மரியாதையுடன் தமிழ்தாயின் தவப்புதல்வனுக்கு கலைத்தாயின் தலைமகனுக்கு 42 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் சோக இசை முழங்கினர்.
பொதுவாக முதலமைச்சராகவோ, மந்திரியாகவோ இருந்தவர்கள் மரணம் அடைந்தால்தான் அவர்களின் இறுதிச் சடங்கின்போது போலீசார் அணிவகுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை செய்வது வழக்கம். அரசில் எந்தப் பொறுப்பிலுமே இல்லாத ஈ.வெ.ரா. பெரியார் இறந்தபோதுதான் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடந்தன. அதற்குப் பிறகு நடிகர் திலகத்தின் இறுதிச் சடங்குதான் அரசு மரியாதையுடன் நடந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏ.வி.எம். ஸ்டூடியோவில் 'சக்சஸ்' என்ற வசனத்தை முதன் முறையாகப் பேசி நடித்து தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமான இடத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைவுபடுத்துகின்ற வகையில் நினைவுத் தூணை வைத்து கௌரவப்படுத்தியிருக்கின்றார்கள். ஏ.வி.எம் சரவணனும் அவரது மகன் எம்.எஸ்.குகனும். அதை கமலஹாசன் திறந்து வைத்தார். சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு கலந்துக் கொண்டனர். ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குள் படப்பிடிப்பிற்கு வரும் நடிகர் நடிகைகள் புதிய இயக்குனர்கள் நினைவிடத்தில் பூக்களைத் தூவி வணங்கிச் செல்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிவாஜி குடும்பத்திற்கு உதவுகின்ற வகையில் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்து 'சந்திரமுகி' படத்தை எடுக்க வைத்தார். அந்தப் படத்தை டைரக்டர் பி. வாசு இயக்கினார். தயாரிப்பாளர்கள் ஜீ. ராம்குமார், ஜீ. பிரபு இருவரும் இணைந்து அந்தப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியிருக்கின்றார்கள்.
நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த 'பராசக்தி' படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் சிவாஜி. அவரை நினைவுப் படுத்துகின்ற வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு 'சிவாஜி' என்று பெயரிட்டு மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் எம். சரவணன், எம்.எஸ். குகன் இணைந்து தயாரித்து வெளியிட்டனர். இந்தப் படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் உயர்ந்திருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் கலை ஆற்றலைப் போற்றுகின்ற வகையில் அவரது திருவுருவச் சிலையை புதுவை அரசு திறந்து வைத்து கௌரவித்திருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரையில் தமிழகத்தின் தலைசிறந்த மனிதரும், தன்னிகரில்லா இந்திய கலைஞருமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு முதல்வர் டாக்டர் கலைஞர் சிவாஜியின் நினைவு நாளான 21.7.2006 அன்று சிலை திறந்து வைத்தார். விழாவிற்கு முன்பாக சிவாஜிகணேசன் பற்றி முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் எழுதிய கவிதைப் பாடலை சீர்காழி சிவசிதம்பரம் மேடையில் உருக்கமாகப் பாடினார்.
விழாவில் நடிகர் பிரபு, கே. பாக்யராஜ், விஜயகாந்த், வைரமுத்து, கமலஹாசன், ரஜினிகாந்த், ஏ.வி.எம். சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி நன்றியுரை வழங்கினார். முதல்வர் டாக்டர் கலைஞர் சிறப்புரையாற்றி விழாவை முடித்து வைத்தார்.
சிவாஜியின் துணைவியார் திருமதி. கமலம்மாள் நேரில் வந்து இந்த விழாவில் கலந்துக் கொண்டார். ராம்குமார்,பிரபு சாந்தி நாராயணசாமி மற்றும் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்துக் கொண்டனர். மற்றும் அரசியல் பிரமுகர்கள், கலையுலக பெருமக்கள், பத்திகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
நன்றி:லக்ஷ்மன்ஸ்ருதி.காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,