ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்
ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்
இரண்டாம் வகுப்பு 'அ' பிரிவில்
யாரோ ஒரு மாணவன்
மறந்து விட்டுச்சென்ற
டிபன் பாக்ஸில்
சுற்றம் சூழ
விருந்துண்டு மகிழ்கின்றன
எறும்புகள்.
எட்டாம் வகுப்பு ' இ' பிரிவின்
அழிக்காத கரும்பலகையில்
படம் வரைந்து
பாகங்கள் குறிக்கப்பட்ட
தன்னைத் திடீரென்று பார்த்துத் திகைக்கிறது.
வழிதவறி வந்த
தவளை ஒன்று.
கருவுறாத தாய்மையின்
ஏக்கத்தோடு
திங்கட்கிழமைக்காகக்
காத்திருக்கும்
வெறுமையான வகுப்பறைகளுக்கு
ஆறுதல் சொல்லியபடி
அங்கும் இங்கும்
ஓடுகிறது ஓர் அணில்.
விடுமுறையை முழுமையாக அனுபவிக்கும்
விளையாட்டு மைதானத்தின்
நிம்மதியைக் கெடுப்பது போல்
பாலிதீன் பை ஒன்றை
கோல் போஸ்டில்
உதைத்துத் தள்ளுகிறது காற்று.
வழக்கமாகக் கேட்கும்
கைதட்டல் சத்தம் எதுவும் கேட்காததால்
வினோதமாகத்
திரும்பித் திரும்பிப் பார்க்கிறது
மைதான மூலை வாதாம் மரத்தில்
ஓய்வெடுக்கும்
மரங்கொத்தி ஒன்று.
எங்கிருந்தோ வந்த
வண்ணத்துப்பூச்சி எதையோ தேடுவது போல்
ஒவ்வொரு வகுப்பாகச் சுற்றிபச் சுற்றிப் பார்க்கிறது.
கரும்பலகைகளிலும்
சுவரில் தொங்கும் வரைபடங்களிலும்
வாரம் முழுவதும் நடந்த
பாடங்களின் சுவடுகள்...
உலகவரலாறு ஐன்ஸ்டைன் தத்துவம்
அயல் மகரந்தச் சேர்க்கை
திருக்குறள் மனப்பாடப்பகுதி என
ஒவ்வொன்றாகப் பார்த்து
ஆசிரியர்களின் ஓய்வறைக்குள்
அலுப்போடு நுழைகிறது.
அங்கே சுஜாதா மிஸ்ஸின்
ரோஸ் நிறக்குடையைப் பார்த்ததும்
சுறசுறுப்பாக
ஒரு வட்டம் போட்டு
அதன்மீது சென்று அமர்கிறது குதூகலமாக.
*
*
(ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம் "கவிதைத் தொகுப்பில் இருந்து...)
*
முகப்பு: Trotsky Marudu Maruthappan
Comments