பேராசிரியர் அன்பழகன்
பேராசிரியர் அன்பழகன் காலமான தினம்!
மிகுந்த மொழிப்பற்று, இனப்பற்று, எழுத்துப்பணி, இயக்கப்பணி, மக்கள்பணி ஆகியவை அன்பழகனின் தனித்த அடையாளமாக இருந்தாலும், ம் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தோழன் என்பதே அவரின் பெருமைமிகு அடையாளமாக கடைசிவரை இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அடுத்த யார் முதல்வராக வருவது என்பதில் தி.மு.கழகத்தில் இருவேறு கருத்துகள் நிலவின. கருணாநிதி தலைமையிலும் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையிலும் இருவேறு அணிகள் பிரிந்தன. அதில் தன் கல்லூரி நண்பர், தன், தமிழ் இலக்கிய மன்றத் தோழர் நெடுஞ்செழியனின் பக்கம் செல்லாமல் கருணாநிதியின் பக்கம் நின்றார் அன்பழகன். அண்ணாவுக்குப் பிறகு இயக்கத்தை வழிநடத்த, தன்னைவிட, நெடுஞ்செழியனை விட, மற்ற எல்லோரையும்விட கருணாநிதிதான் சரி என்பதை அப்போதே அறிந்திருந்தார் அன்பழகன். அதைப் பின்னாளில் தான் கலந்துகொண்ட பல கூட்டங்களில் வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார் அவர். எம்.ஜி.ஆர் தி.மு.க கழகத்தை உடைத்து தனிக்கட்சி ஆரம்பித்தபோது, நம்பிக்கைக்குரிய பலர் அவருடன் செல்ல 'நண்பேண்டா' என கருணாநிதியின் கரம் பற்றி நின்றார் அன்பழகன்.
அதனால்தான், தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னால்,
'மனிதன்
அன்பழகன்
சுயமரியாதைக்காரன்
அண்ணாவின் தம்பி
கலைஞரின் தோழன்'
இப்படித்தான் அறிமுகப்படுத்திக்கொள்வேன் எனக் கூறி, தன் வாழ்நாள் முழுவதும் அதன்படி வாழ்ந்தும் காட்டினார் அன்பழகன்.
கருணாநிதியும் அன்பழகனின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர், எம்.எல்.ஏ சீட், அமைச்சர் பதவி என்பதையெல்லாம் தாண்டி, "திராவிட இயக்க ஆரம்ப காலத்தில் எங்களைப் போன்ற மாணவர்களை எல்லாம் வழிநடத்திய பேராசியர் அன்பழகன்'' என ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார் கருணாநிதி. "தி.மு.க, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பற்றி பேசுவதை விட்டு, அப்போதைய அரசியல் சூழல்களைப் பற்றி மட்டும் பேசி, அதன் போக்கிலேயே கட்சி வளைந்தபோதெல்லாம் கட்சியை கொள்கையின் பக்கம திருப்பி, இப்போதும் எங்களுக்கெல்லாம் ஒரு ஆசிரியராகச் செயல்படுவர் அன்பழகன்'' என அதே மேடையில் சொல்லிப் பெருமைப்பட்டார் கருணாநிதி. "நாங்கள் உங்களுக்காகப் பேசுகிறோம்... பேராசிரியர் எங்களுக்காகப் பேசுகிறார்... அதன் அர்த்தம் என்னவென்றால்... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எங்கள் உரையில் இருக்கும். நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பேராசிரியரின் உரையில் இருக்கும்” என பல மேடைகளில் பேசியிருக்கிறார் கருணாநிதி.
அப்பேர்ப்பட்ட அன்பழகன் இதே நாளில் (2020) காலமானார்.
news share by
Mr. Rajagoplan
Comments