சொன்மதுரப் பாலவ நத்தம் வேள் பாண்டித் துரைத்தேவன்

 பாண்டித்துரைத் தேவர் மார்ச் 21, 1867ல் பிறந்த இவர்


 மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.

பாண்டித்துரைத் தேவர் பாலவநத்தம் ஜமீந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்க்கலாவிநோதர் என்றும், செந்தமிழ்ப் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும், செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்பட்டவர். மூவேந்தரும் போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தருங் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பாருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கிவரும் காலக்கட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்குப் பரிசில் கொடுத்தும், செந்தமிழ் என்னும் வாசக இதழை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினைத் திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலராவார்


தேவர் மரபில் தோன்றிய பொன்னுசாமித் தேவருக்கு மூன்றாவது மகனாக 1867-ஆம் ஆண்டு பங்குனி 21-ஆம் நாள் பிறந்தார். பொன்னுசாமித் தேவரவர்கள் இராமநாதபுர மன்னருக்கு அமைச்சராகயிருந்தவர்.இவர் சிறுவராக இருக்கும் போதே தந்தையை இழந்தமையால், சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்தார். 

சேஷாத்திரி ஐயங்காரால் மேற்பார்வை செய்யப்பட்ட தேவரின் சொத்துகள் எல்லாம் இவர் பதினேழு வயதை அடைந்ததும் இவரிடமே கையளிக்கப்பட்டன. இச்சொத்துகளில் பாலவநத்தம் ஜமீனும் அடங்கும். இளம் வயதில் தமிழில் நல்ல தேர்ச்சியும் ஆர்வமும் பெற்றிருந்த தேவர், அதன் வளர்ச்சிக்காகதீ தன் உடல், உயிர், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார் என்றால் மிகையாகாது. இக்காலகட்டத்தில் தேவரின் நெருங்கிய உறவினராகிய இராமநாதபுர ஜமீந்தார் பாஸ்கர சேதுபதி அவர்கள் இவரின் தொண்டுகளுக்குத் துணை புரிந்தார் என்பர்.அக்காலத்தில் அரிய தமிழ் நூல்களைக் கண்டெடுத்து, அவை அழியாவண்ணம் அச்சிட்டு வந்த சாமிநாதையருக்கு உதவும் பொருட்டு தேவர் அவர்கள், அவரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவியும் செய்தார். 


தனது ஆசிரியர்களில் ஒருவரான இராமசாமிப்பிள்ளை என்றழைக்கப்படும் ஞானசம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார்.

 பிற மதத்தவரின் சைவ எதிர்ப்புப் போக்கை மறுக்கும் பொருட்டு கோப்பாய் சபாபதி நாவலர் மூலம் மறுப்பு நூல்கள் வெளியிட்டார். மேலும் தண்டியலங்காரம் போன்ற சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களின் நூல்கள் பதிப்பிக்கும் பொருட்டு தேவர் அவர்கள் உதவி புரிந்திருந்தார். குமாரசுவாமிப்புலவர்


, தேவரால் தொகுக்கப்பட்ட சைவமஞ்சரிக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம் இவரின் சிறப்பை நன்கு புலப்படுத்தும்.

சைவமஞ்சரி சிறப்புப்பாயிரத்தை கீழே காட்டுதும்:-

திக்குலவும் புகழாளன் பிரபுகுல சிகாமணியாய்ச் சிறந்த சீலன் 
அக்கிரகண் ணியன்பொன்னு சாமியெனு நரபால னருளும் பாலன் 
நக்கனடி யாவர்பாலன் பேறுளத்தன் வெண்ணீறு நண்ணும் பாலன் 
தக்கபொரு   ணிலவுகலை வினோதனுயர் சற்சங்க சனானு கூலன் .

பூதேவன் புகலியர்கோன் முதலறிஞர் தமிழ்நூலின் பொருள்க ளுள்ள
மீதேவன் பறமருவப் பதித்தேவன் றேவனெனும் வெளிறு நீங்கி 
நீதேவ னெனக்கொண்டு நிலத்தேவன் பகைகடந்து நெறிநின் றீசன்
மாதேவன் பதத்தேவன் மகிழ் பாண்டித்துரைத்தேவ மன்னன் மாதோ


மதுரை மாநகரில் தேவர் தங்கியிருந்த போது, அவ்வூர் அறிஞர்கள் "தமிழ்ச் சிறப்பு" பற்றிச் சொற்பொழிவாற்றும்படி வேண்டிக் கொண்டனர். இதற்கு இணங்கிய தேவர், உரைக்கு வேண்டிய ஆராய்ச்சி செய்யும் பொருட்டு, திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்களை ஈட்ட முயற்சித்த போது, அங்காடிகள், நூலகங்கள் மற்றும் அறிஞர்களின் மனைகளிலிருந்தும் பெற முடியவில்லை. இந் நிகழ்வு தேவரின் உள்ளத்தை மிகக் கடுமையாகப் பாதித்தது. பண்டைக்காலம் முதல் தமிழ்ச் சங்கங்கள் கூடிய மதுரை மூதூருக்கும், அங்கு வளர்ந்த தமிழுக்கும் ஏற்பட்ட துன்ப நிலையை எண்ணி இவர் உள்ளம் வேதனையுற்றது


. இந்நிலையை மாற்றும் நோக்குடன் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்ட தேவர் அவர்கள், தனது திட்டத்தை 1901-ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் அவையோர் முன் வேண்டுகோளாக முன்வைத்தார். அம் மாநாட்டில் நான்காம் தமிழ்ச் சங்கம் மதுரையில் நிறுவுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் பிலவ வருடம் ஆவணி மாதம் 13-ஆம் தேதி சித்திரை நட்சத்திரம் அமைந்த நன்னாளில் ஞாயிற்றுக்கிழமை, 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி அன்று நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுச் செயல்படத் தொடங்கியது. இத்தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராகத் தேவரே பொறுப்பேற்றுச் சங்கத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு அயராது செயல்பட்டார். தமிழ் சங்கத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை தமிழிலும் வடமொழியிலும் புலமை வாய்ந்தவரும், தன்னுடன் இளம் வயதில் கல்வி பயின்ற நாராயண ஐயங்கார் அவர்களிடம் ஒப்படைத்தார்.

மதுரை சேதுபதி உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான்காம் தமிழ்ச் சங்க தொடக்கவிழாவில், உ.வே.சாமிநாதைய்யர், ரா.இராகவைய்யங்கார், வை.மு.சடகோப ராமாநுஜாசாரியார், வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார், சோழவந்தான் அரசஞ் சண்முகனார், பின்னத்தூர் நாராயண சாமி ஐயர், திருமயிலை சண்முகம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தமிழேடுகள், அச்சிடப்பட்ட தமிழ்நூல்கள் ஆகியவற்றை தேடியெடுத்து பிறருக்கு பயன்படுமாறு தொகுக்கப்பெறுவதும், வெளிவராத அரிய பல தமிழ் நூல்களை அச்சிலேற்றி பரவச் செய்வதும், வடமொழி, ஆங்கிலம் முதலிய பிறமொழிகளில் உள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதும், தமிழைப் பரப்பும் ஏடு தொடங்குவதும், தமிழறிஞர்கள் சொற்பொழிவு நிகழ்த்துவதும், நல்லறிஞர்களால் எழுதப்பெற்ற நூல் உரையை வெளிக்கொண்டு வருவதும் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன.

மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிட வித்துவான் கழகம், சேதுபதி செந்தமிழ்கலாசாலை, பாண்டியன் புத்தக சாலை, தமிழ்ச் சங்க முத்திரா சாலை ஆகிய நான்கும் தமிழ்ச் சங்கத்தை தாங்கி நிற்கும் தூண்களாக பாண்டித்துரைதேவர் அவர்களால் நிறுவப்பட்டன.

தமிழறிஞர்களுக்காக உருவாக்கப்பட்ட வித்துவான் கழகமானது கடல் கடந்து வாழும் தமிழறிஞர்களையும் தன்பால் ஈர்த்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அ.குமாரசுவாமிப்பிள்ளை, ஆ.முத்துத்தம்பி பிள்ளை, நா.கதிரைவேற்பிள்ளை, கு.கதிரைவேற்பிள்ளை மற்றும் பிரெஞ்சு நாட்டு அறிஞர் பேராசிரியர் ஜீலியன்வில்சன், மலேசியா காரை.சிவசிதம்பரை அவர்களும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின்உ றுப்பினர்களாக இருந்து தமிழ்ச்சங்கம் அடுத்தக் கட்ட வளர்ச்சி நோக்கிச் செல்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்துக் கொடுத்தனர்.

சேதுபதி செந்தமிழ் கலாசாலையில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய மொழிப்பாடங்களோடு தேவாரமும், திருவாய்மொழியும் சேர்த்து கற்றுத் தரப்பட்டது. அம்மாணவர்களுக்கு பாண்டித்துரைத்தேவர் தம் சொந்த செலவில் இலவய உணவும், உடையும் வழங்கியதோடு, நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுப் பணமும், பதக்கங்களும் அளித்துச் சிறப்பித்தார்.

தமிழ்ச்சங்க முத்திராசாலையில் நிறுவப்பட்ட அச்சகத்தில் பல அரிய தமிழ்நூல்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் பதிப்புப் பணிக்கு பாண்டித்துரைத்தேவர் உறுதுணையாக விளங்கினார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை ஆகியவை பாண்டித்துரைத் தேவரின் பொருளுதவியோடு வெளிவந்தன.

ஞானாமிர்தம், சைவ மஞ்சரி, ஐந்திணையைம்பதுரை, இனியவை நாற்பதுரை, விவசாய ரசாயன சாஸ்திர சுருக்கம், யாப்பு அணியிலக்கணங்கள், வைத்தியசார சங்கிரகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் முத்திராசாலையில் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தன. தமிழர் மரபாகிய சித்த மருத்துவத்தை மீட்டெடுக்கும் வகையில் பாண்டித்துரைத்தேவர் அவர்களே வைத்தியசார சங்கிரகம் நூலுக்கு அணிந்துரை வழங்கியது போற்றத்தக்க ஒன்றாகும்.

1902ஆம்ஆண்டு டிசம்பர் 7ஆம் நாளில் இரா.இராகவையங்காரை ஆசிரியராகக் கொண்டு."செந்தமிழ் " இதழ் தொடங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து மு.இராகவையங்கார் இதழின் பொறுப்பாசிரியராக நீண்டகாலம் பணியாற்றி வந்தார். அவ்விதழில் தமிழின் பூர்வ வரலாற்றை எடுத்துரைக்கும் பல ஆய்வு கட்டுரைகள் நுண்மான் நுழைபுலம் மிக்க அறிஞர்களால் எழுதப்பட்டு வந்தன. முதல் இதழிலேயே "உயர்தனிச்செம்மொழி " எனும் தலைப்பில் சூரிய நாராயண சாஸ்திரி கட்டுரை எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

அவருக்குப் பின் மறைமலையடிகளாரின் பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, இரா.இராகவையங்காரின் சேது நாடும் தமிழும், சோமசுந்தர பாரதியாரின் தமிழ் நூல்களும் தமிழகமும், சேரர் பேரூர், மு.இராகவையங்காரின் வேளிர் வரலாறு, சாசனத் தமிழ்க்கவி சரிதம், தமிழரும், ஆந்திரரும் ஆகிய கட்டுரைகள் செந்தமிழ் ஏட்டை அலங்கரித்தன.

பாண்டித்துரைத்தேவர் தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச்சங்கத்திலும் தொல்காப்பியரை பிராமணர் என்றும், வடமொழி உயர்ந்ததென்றும், ஆரிய நாகரிகமே சிறந்தது என்றும் வைதீக பிராமணப் புலவர்கள் பேசி வந்தனர். இக்கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த பாண்டித்துரைத்தேவர் மறைமலையடிகள் மூலம் பதிலடி தர விரும்பினார்.

25.5.1905இல், "மதுரைத் தமிழ்ச்சங்க நான்காம் ஆண்டு விழாவும் -தமிழர் நாகரிகப் போராட்டக் கொடி ஏற்றமும்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் உரையாற்றிய மறைமலையடிகள் ஆரிய நாகரிகத்திற்கும், பிராமணர்களுக்கும் தமிழர் கடமை பட்டிருக்கவில்லை என்றும், ஆரியர்களால் தான் தமிழும், தமிழரும் பாழ்பட நேர்ந்தது என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டிப் பிராமணர்களின் வாயடைத்தார். அப்போது அதைக் கேட்டு வெகுவாக இரசித்த பாண்டித்துரைத்தேவர் மறைமலையடிகளுக்குப் பாராட்டுரை வழங்கினார்.

 மேலும் தமிழகம் மற்றும் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து தமிழ் வல்லுநர்களை அழைத்துச் சங்கத்தில் அங்கத்தவராக்கி எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் தேவராவார்.தமிழன்னைக்கு மேல் கூறிய தொண்டுகள் மட்டுமல்லாது, செய்யுள் இயற்றித் தொண்டாற்றும் புலமையும் ஆற்றலும் தேவரவர்களிடம் இருந்தது, இதற்குச் சான்றாக சிவஞானபுர முருகன் காவடிச்சிந்து, சைவ மஞ்சரி, இராஜராஜேஸ்வரிப் பதிகம், பன்னூல் திரட்டு மற்றும் பல தனி நிலைச் செய்யுள்களும் பல சிறப்பாயிரங்களும் திகழ்கின்றன


. தமிழுக்கு மட்டும் அல்லாது பிற நற்பணிகளுக்கும் பொருளுதவி செய்யும், வழக்கம் உடைய வள்ளலாக வாழ்ந்த தேவரவர்கள், வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. தமிழின் உயர்வுக்காக உறங்காது உழைத்த உத்தமர், வள்ளல் பாண்டித்துரை தேவர், 1911-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாள் உயிர் துறந்ததை எண்ணித் தமிழ் உலகம் வருந்தியபோதும், அவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கம் நூறாண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தொண்டாற்றி வருவது தேவரவர்களின் உண்மைத் தமிழ்ப் பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்இனியுமோர் தமிழ்ச் சங்கம் காண்பேன் இருந்த முதலிடை கடைச் சங்கம் போலவே
எனச் சொன்ன பாண்டித் துரைத்தேவன் சொல்லை
இவ்வையம் அந்நாளில் நம்பவே இல்லை.
வியந்தது வையம் சென்றநாள் சிலவே விரிந்தது மதுரைத் தமிழ்ச்சங்க நிலவே
அயர்ந்த தமிழரின் ஆடலும் பாடலும் அறிவின் செயலும் மிளிர்ந்தன பலவே
புலவர் வகுப்பு மூன்று படைத்தான்
புன்மையின் மடமையின் என்பை உடைத்தான்
பல தமிழிலக்கிய மாசு துடைத்தான்
பாண்டித் துரைத் தேவன் புகழ்க்கொடி எடுத்தான் "
- பாவேந்தர் பாரதிதாசன்

.அந்நாளில் ஸ்காட்துரை என்ற பரங்கியர் திருக்குறளை எதுகை மோனையோடு திருத்தி வெளியிட்டார். "சுகாத்தியரால் திருத்தியும் பதுக்கியும்.பதிப்பிக்கப்பட்ட குறள்" என்ற தலைப்பில் வெளியான அந்த நூலை பாண்டித்துரைதேவரும் வாங்கிப் படித்தார். முதல் பாடலே முற்றும் கோணலாய் இருந்தது. அப்பாடலில்,

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

-என்பதற்குப் பதிலாக

"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி உகர முதற்றே உலகு"

-என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டு கோபமடைந்த பாண்டித்துரை தேவர் அந்த வெள்ளைப் பரங்கியரின் அறியாமைக்கும், செருக்குத்தனத்திற்கும் பாடம் புகட்ட விரும்பினார். அதன்படி மொத்தம் அச்சடித்த ஐநூறு பிரதிகளுள் விற்பனை செய்தது போக மீதமுள்ள முந்நூறு பிரதிகளை பணம் கொடுத்து வாங்கினார். பின்னர் ஆழக்குழி தோண்டி அந்தப்பிரதிகள் அனைத்தையும் போட்டு எரிக்கும்படி ஆணையிட்டார்.

இதைப் பாராட்டி பண்டிதர் அ.முத்துசாமிப் பிள்ளை என்பவர் பாடல் தீட்டினார். அது வருமாறு:

"வள்ளுவர் அருளிய மாண்புறு குறளைத் திருத்திய
வெள்ளையன் செய்கையை அறிந்து
வருத்தமுற் றதனை வாங்கித் தீக்கிரை ஆக்கியல் வெள்ளையற்(கு) அரும்பொருள் கொடுத்துப்
போக்கிய புண்ணியன் புவிபுகழ் கண்ணியன்"
1906இல் வ.உ.சிதம்பரனார் பரங்கியருக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஒரு இலட்சம் ருபாயை தனது பங்குத் தொகையாகப் பாண்டித்துரைத்தேவர் வ.உ.சி.க்கு அளித்தார். இதன் மூலம் அவரின் தமிழினப் பற்றும், இந்திய விடுதலைப் பற்றும் ஒரு சேர வெளிப்படுவதை உணரலாம்.

தமிழுக்குத் தீங்கு நேரும் போதெல்லாம் பாண்டித்துரைத்தேவர் குரல்கொடுக்கவும் தயங்கவில்லை. சென்னை பல்கலை.யில் பாடப்புத்தகத்திலிருந்து தமிழ்ப்பாடத்தை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தடுத்துநிறுத்துவதற்கு சூரிய நாராயண சாஸ்திரியும், பூரணலிங்கம் பிள்ளை அவர்களும் பாண்டித்துரைத்தேவரை நேரில் சந்தித்து உதவி வேண்டினர்.

உடனடியாக மதுரைத் தமிழ்ச்சங்கத்தைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி தனது எதிர்ப்பைக்.காட்டினார் பாண்டித்துரைத் தேவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் எதிர்ப்பினை புரிந்து கொண்ட சென்னைப் பல்கலை. தமிழை நீக்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தது.

ஆரியர் தமிழரை அழைத்த 'திராவிடர்' என்ற சொல்லுக்கு 'ஓடுதல்' என்றபொருளும் உண்டு என்பதை தாம் எழுதிய 'தமிழ்ப் பழஞ்சரிதம்' நூலில் பாண்டித்துரைத்தேவர் குறிப்பிட்டார். இதனை தொடர் கட்டுரையாக தமது 'செந்தமிழ்' ஏட்டிலே எழுதினார். அது பின்வருமாறு:

"தமிழணங்கு ஆந்திரம், கன்னடம், முதலிய சேய்களைப் பிறப்பியாது தனியிளமை பெற்று விளங்கிய காலத்திலே, அந்நங்கை தனக்கு ஆடலரங்கமாகக் கொண்ட பிரதேசம் வடவேங்கடந் தென்குமரியாயிடை யன்று.வடவியந்தென்குமரியாயிடையே அவ்வாறிளமை பெற்றிருந்த தமிழ் பின்பு ஆரியர் படையெடுப்புகளால் அலைப்புண்டு, தன் ஆடலரங்கைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. அன்றியும் அவ்வந்நியரது.கூட்டுறவை வெறுத்து அத்தமிழ் நங்கையோடி யொளியுமிடங்கள் பலவற்றில், தான்பெற்ற சேய்களை அங்கங்கே விட்டுப் பிரியவும் நேர்ந்தது. இவ்வாறு தமிழணங்கு தம்மையஞ்சியோடி ஒளிவது கண்ட ஆரியர் அந்நங்கைக்குத் 'திராவிடம்' என்னுங் காரணப்பெயரை வழங்கலாயினர்.
(திராவிடம் என்னும் மொழிக்கு வடமொழியில் ஓடுதலையுடையதென்பது பொருள்).

தமிழ்ப்பணியே தம் வாழ்நாள் பணியாக மேற்கொண்டிருந்த பாண்டித்துரைத்தேவர் ஒருநாள் தம் மாளிகையில் பலருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று மயக்கமுற்று கீழ விழுந்தார். அப்போது நினைவிழந்தவர் மறுபடியும் மீள வில்லை. அவர் 2.12.1911இல் தமிழ் மண்ணை விட்டு உயிர் நீத்தார். அப்போது அவருக்கு அகவை நாற்பத்தி நான்கு. அந்த அகவைக்குள் அவர் செய்த தமிழ்ப்பணிகள் நம்மை மலைக்க வைக்கிறது. மனம் சில்லிடவே செய்கிறது.

அந்நாளில் அவர் தமிழ்ச் சங்கத்தை தொடங்கிய போது , சங்கம் வைத்த பாண்டியருக்கு ஒப்ப இவரால் தமிழ்ச் சங்கத்தை செலுத்த இயலாது என்று பலரும் ஏகடியம் செய்தனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளி புகழ்க்கொடி நாட்டினார் பாண்டித்துரைத்தேவர்.

1921ஆம் ஆண்டு ஆம்பூர் உயர் நிலைப்பள்ளியில் பணியாற்றிய போது தமிழாசிரியர் தகுதி பெற மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தேர்வெழுதி தகுதி பெற்றேன். அப்போது எழுந்த தமிழ்வெறியினால் ஆங்கிலத்தை அறவே புறக்கணித்து தமிழராய்ச்சியில் ஆழ முழுகித் தமிழின் அடிமட்டத்தைக் கண்டதாக மொழிஞாயிறு பாவாணர் குறிப்பிடுவார்.
பாண்டித்துரைத்தேவர் உருவாக்கிய தமிழ்ச்சங்கம் இல்லையெனில் மொழி ஞாயிறு இல்லையென்பார் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்.

பாவணரும் தனது 'பாண்டித்துரை பதிகம்' பாடலின் மூலம் பாண்டித்துரைத் தேவரைப் போற்றி வணங்கத் தவறவில்லை. அவர் கூறியதையே இந்நாளில் நாமும் கூறிடுவோம்.

"தென்மதுரைப்பாண்டியன் தெய்வத் தமிழ்வாழி
நன்மதுரை நாலாஞ்சங் கம் வாழி -
சொன்மதுரப் பாலவ நத்தம் வேள் பாண்டித் துரைத்தேவன்
போலிமை யற்ற புகழ்!"

(பாண்டித்துரைத்தேவரின் திருவுருவச்சிலை மதுரைத் தமிழ்ச்சங்கம் சாலையில்
நிறுவப்பட்டுள்ளது)

விரிவாகப் படிக்க:
https://tamilthesiyan.wordpress.com/.../%e0%ae%a4%e0%ae...


தொகுப்பு

எழில்நிலவன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,