எழுத்தாளர் விக்கிரமன் பிறந்தநாள் இன்று
எழுத்தாளர் விக்கிரமன் பிறந்தநாள் இன்று
"கல்கிக்குப் பிறகு வரலாற்று நாவல்களில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்தவர் விக்கிரமன்" என்கிறார் ஜெயகாந்தன். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இவரை 'முத்தமிழ் அன்பர்' என்று பாராட்டுகிறார். இவரது சிறுகதைத் திறனைப் பாராட்டி 'சிறுகதைச் சேக்கிழார்' என்று பட்டம் சூட்டியுள்ளார் சிலம்பொலி செல்லப்பன். 'எழுத்தாளர்களின் எழுத்தாளர்' என்று போற்றப்படும் விக்கிரமனை 'சரித்திர நாவலாசிரியர்' என்ற தலைப்பிற்குள் அடைத்துவிட முடியாது. சரித்திர நாவல்களுக்கு இணையாக சமூகச் சிறுகதை, நாவல், கட்டுரை, வரலாற்றுப் பயணக் குறிப்பு என்று நிறைய எழுதியிருக்கிறார். கவிதை, நாடகம், சிறுவர் கதை, பேச்சு, இதழ் பதிப்பு என எழுத்துத் துறையில் இவர் கையாளாதவையே இல்லை. கல்கியின் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக எழுதிய 'நந்திபுரத்து நாயகி' விக்கிரமனின் ஆளுமையைப் பறைசாற்றியது. 'காஞ்சி சுந்தரி', 'உதயசந்திரன்', 'ராஜராஜன் சபதம்', 'கோவூர் கூனன்', 'சித்திரவல்லி' என முப்பதுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புதினங்களை எழுதியிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இவரது 'விக்கிரமனின் சிறுகதைக் களஞ்சியம்' எழுபது சிறுகதைகளைக் கொண்டது. இவற்றுக்குப் பிரபல எழுத்தாளர்கள் எழுபது பேர் அறிமுக உரை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய 'தமிழ் நாட்டில் தெலுங்கு மன்னர்கள்' என்ற ஆங்கில நூலும் குறிப்பிடத் தகுந்த ஒன்று. தமிழறிஞர்கள், சான்றோர்கள் பற்றி இவர் தினமணி இதழில் எழுதிய கட்டுரைகள் பாராட்டுப் பெற்றவை.
நன்றி: தென்றல்
Comments