டாக்டர் துரைராஜ்.

 வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவங்கள் எத்தனை எத்தனையோ உண்டு அந்த சம்பவங்களோடு தொடர்பு உடையவர்கள் தற்போது வெகு சாதாரணமாக இருந்து வருகின்றனர்.


அவர்களின் ஒருவர்தான் டாக்டர் துரைராஜ்.
தற்போது 92 வயதாகும் டாக்டர் துரைராஜ் ஒரு காலத்தில் சென்னையின் முன்னனி அறுவை சிகிச்சை நிபுணர்.
தேனி மாவட்டம் சுக்காங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த துரைராஜ், மிகவும் சிரமப்பட்டு எம்பிபிஎஸ் படித்து பின் எம்.எஸ்.முடித்து டாக்டரானாவர்.
ஒரு மருத்துவ மாணவரை உருவாக்க அரசு நிறைய செலவு செய்கிறது ஆகவே என்னை மருத்துவராக்கிய அரசாங்கத்திற்கு நான் என் கடமையைச் செய்வேன் என்று கடைசி வரை தனியாக வைத்தியம் பார்க்காமல் அரசு மருத்துவ மனை நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்த்தவர்.பல்வேறு ஊர்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் அன்றைய காலகட்டத்தில் இன்றைக்கு போல நவீன வசதிகள் இல்லை என்றாலும் சிறந்த மருத்துவம் இருந்தது ,நம்பிவரும் ஏழை எளிய மக்களுக்கு ஆத்தமார்த்தமான சேவை வழங்கவேண்டும் என்பதில் தான் மட்டுமின்றி தன்னைச்சுற்றியிருந்தவர்களுக்கும் அந்த சிந்தனையை விதைத்தவர்.
எம்ஜிஆர் தர்ம சிந்தனையுடன் ஒரு சிறிய இலவச மருத்துவமனை நடத்தினார் என்பது பலருக்கு தெரியாது அந்த மருத்துவமனையில் எம்ஜிஆரின் குடும்ப டாக்டரும் எனது நண்பருமான பி.ஆர்.சுப்பிரமணியன் தனது ஒய்வு நேரத்தில் மருத்துவ சேவையை வழங்கினார்.
என்னையும் அழைத்தார் நான் தனியார் கிளினிக்கில் வைத்தியம் பார்ப்பது இல்லை என்ற என் கொள்கையை சொன்னேன் இங்கே சம்பளம் எல்லாம் கிடையாது இது சேவை அடிப்படையிலானது எம்ஜிஆரின் நல்ல உள்ளத்திற்காக நாமும் சேர்ந்து ஒய்வு நேரத்தில் உழைப்போம் என்றார்.
சரி என்று ஒத்துக்கொண்டு அங்கே கொஞ்ச காலம் பணியாற்றினேன் அவ்வப்போது எம்ஜிஆர் அங்கு வந்து செல்வார் அவருக்கான மருத்துவ ஆலோசனையை என்னிடம் கேட்டுப்பெறுவார் அந்த ஆலோசனைகள் அவருக்கு நல்ல பலன் தரவே என்னை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.
இந்த நிலையில் 1967 ம் ஆண்டு ஜனவரி 12 ம்தேதி மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் சுடப்பட்டார்.எம்.ஜி.ஆரைச் சுட்ட எம்.கே.ராதா தன்னையும் சுட்டுக் கொண்டார் இருவரையும் கொண்டு வந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
எம்ஜிஆரின் குடும்ப டாக்டரான சுப்பிரமணியன், அறுவை சிகிச்சையில் நிபுணரான என்னை உடனே ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வரச்சொன்னார் அங்கே குண்டு பாய்ந்த நிலையில் ரத்தம் கொட்ட எம்ஜிஆர் படுத்துக் கிடந்தார் ஆனாலும் சுயநினைவுடன் இருந்தார் என்னைப் பார்த்ததும் தான் பிழைத்துவிடுவோம் என்ற நம்பிக்கை அவருக்குள் துளிர்த்தது போலும் அவரது கண்களில் அப்படி ஒரு ஓளி.
சிறிதும் தாமதமின்றி சிகிச்சையை துவங்கினேன் காதிற்குள் கீழ்ப்பகுதி வழியாக சென்ற குண்டு அவரது அடி நாக்கை பாதித்தபடி இருந்தது, மிகக்கவனமாக செயல்பட்டு அந்த குண்டை அகற்றி கட்டுப்போட்டேன், இனி உயிருக்கு பயமில்லை என்பதை அவருக்கு உணர்வு வந்தபிறகு சொல்லிவிட்டு வந்தேன்.அதற்கு பிறகு நாங்கள் இருவரும் சந்திக்கும் சந்தர்ப்பம் கடைசி வரை அமையவே இல்லை.
ஒருமுறை ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் அரசின் சிறு சலுகைக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்,கொஞ்சநாளில் அவர் நல்ல நிலைக்கு வந்து திருமணம் செய்து கொண்டார், குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார் அறுவை சிகிச்சை காரணமாக துண்டிக்கப்பட்ட நரம்புகளை சேர்த்து சிகிச்சை செய்தேன் அவருக்கு குழந்தையும் பிறந்தது இது அந்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது.
இப்படிப் பல சம்பவங்களை சொல்லலாம், ஈரானில் சில காலம் பணியாற்ற அரசாங்கமே அனுப்பிவைத்தது அங்கே இங்கே வாங்கியதைப் போல பல மடங்கு சம்பளம் சலுகை என்றாலும் பிறந்த மண்ணிற்கு சேவை செய்வதே பெருமை என்று இங்கே வந்துவிட்டேன்.
இப்போது ஒய்வு பெற்று கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகப் போகிறது,பிள்ளைகள் யாரும் மருத்துவத்தின் பக்கம் வரவில்லை அவரவருக்கு பிடித்த படிப்பை படித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர்நத பொறுப்புகளில் உள்ளனர், பேரப்பிள்ளைகளும் அப்படியே.
எனது வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் முக்கியமானது , சிறு வயதில் படிப்பிற்காக நிறைய நடந்திருக்கிறேன் இப்போதும் டிரைவரோடு கார் இருந்தாலும் நடப்பதே எனக்கு பிடிக்கும், சாப்பாடு துாக்கம் எல்லாமே நேரத்திற்கு நடக்க வேண்டும், நிறைய படிப்பேன் கம்ப்யூட்டரில் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வேன்.எனது சிறு வயது போட்டோ முதல் என் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
எளிய நேர்மையான அறம் சார்ந்த எனது வாழ்க்கை குறித்து மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக எனது சுயவாழ்க்கை வரலாறை எழுதலாம் என ஒரு யோசனை உள்ளது, அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன் என்று சொல்லிவிட்டு கம்ப்யூட்டரில் முழ்கிய டாக்டர் துரைராஜிடம், விரைவில் உங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் சந்திக்கலாம் என்று கூறி விடைபெற்றோம்.
-எல்.முருகராஜ்.
நன்றி: தினமலர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,