ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் அவர்களின் நினைவு தினம் இன்று

 ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் 

அவர்களின் நினைவு தினம் இன்று


(Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும்அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.

 இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடுகுவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்[

ஆக்கிங்கு ஐக்கிய அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றார். 2002 ஆம் ஆண்டில்பிபிசி நடத்திய பிரித்தானியாவின் 100 பெரும் புள்ளிகள் கணிப்பில் 25வதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979 முதல் 2009 வரை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். இவரது காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற புகழ்பெற்ற கட்டுரைத் தொடர் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்சு இதழில் 237 வாரங்களாக வெளிவந்து சாதனை புரிந்தது. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இவரது அறிவியல் நூல்கள் பலரையும் கவர்ந்தன.

 

 


1963-
ம் ஆண்டு முனைவர் பட்டப்படிப்பில் ஈடுபட்டிருந்த போது, 21 வயதில் இவருக்கு திடீரென பேச்சு குளறியது. நடை தடுமாற ஆரம்பித்தது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள், நரம்புகளின் இயக்கத்தை பாதிக்கக்கூடிய அரியவகை மூளை தண்டுவட நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இவர் உயிரோடிருப்பார் என்றும் கூறிவிட்டனர். 

 

ஆரம்பத்தில் மனசோர்வு ஏற்பட்ட போதிலும், தான் இறப்பதற்குள் முனைவர் பட்டத்தையாவது பெற்றுவிட வேண்டும் என்று கருதி, ஹாக்கிங், மிக கடுமையாக உழைத்து படித்து வந்தார். இந்த சமயத்தில் ஜேன் வில்டே என்பவரை காதல் திருமணமும் செய்துகொண்டார். மூன்று குழந்தைகளும் பிறந்தன.

 

சோதனை கூடங்களில் இருந்துகொண்டு ஆராய்ச்சிகள் செய்வதற்கு உடல்நிலை இடம் தராது என்பதால், கணக்கீடுகள் மூலம் இயற்பியல் கோட்பாடுகள் பற்றி ஆராய ஆரம்பித்தார். 

 

கருந்துளைகள், காலவெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார். தளராத தனது உழைப்பினால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பிறகு வந்த மிகவும் திறமையான, புகழ்மிக்க விஞ்ஞானியாக ஆனார் ஹாக்கிங். கருந்துளை பற்றிய இவரது ஆராய்ச்சி முடிவுகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

 

நட்சத்திரங்களுக்குள் இருக்கும் எரிபொருள் தீர்ந்து போனதும், அங்கிருந்து வெப்பமும், ஒளியும் உருவாவது நின்றுவிடும். பிறகு, காற்று போன பலூன் சுருங்குவதை போல, நட்சத்திரமானது தன்னுடைய ஈர்ப்பு விசையின் காரணமாக தனக்குள்ளேயே சுருங்க ஆரம்பித்துவிடும். இந்த உள்ளர்ப்பு சக்தி அளப்பரியதாக இருப்பதால், உயிரிழந்த நட்சத்திரம் தன்னை தானே முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டு, மிகச்சிறிய அளவிற்குள் நெருக்கமாகச் சுருங்கிவிடும். 

 

இத்தகைய நிலையே கருந்துளையாகும். உயிரிழந்த நட்சத்திரங்களின் கல்லறைகளே கருந்துளைகள். நம்முடைய பூமியின் அளவுகொண்ட நட்சத்திரம் கருந்துளையாகிவிட்டால் இரண்டு சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக சுருங்கிப் போய்விடும். சூரியனின் அளவுடைய நட்சத்திரம் கருந்துளையாகும் போது 3 கிலோமீட்டர் ஆரம் கொண்ட கருந்துளையாகிவிடும். ஒரு நொடிக்கு 2,99,792 கிலோமீட்டர் தூரம் பயணிக்ககூடிய சக்திமிக்க ஒளி உள்பட, இதன் அருகே செல்லும் எதுவுமே இதன் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க முடியாது. இத்தகைய கருந்துளைகள் வெவ்வேறு அளவுகளில் ஒரு கோடி முதல் 100 கோடி வரையிலும் நமது பால்வீதி மண்டலத்தில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

 

ஈர்ப்பு விசை மிக கடுமையாக இருப்பதால் கருந்துளைகளுக்கு உள்ளேயிருந்து எதுவுமே வெளியேறி வரமுடியாது என்று தான் கருதப்பட்டு வந்தது. ஆனால் தனது ஆராய்ச்சியின் போது ஹாக்கிங் போட்டு பார்த்த ஏராளமான கணக்கீடுகள் ஆச்சரியமூட்டும் முடிவினை வெளிப்படுத்தின. 

 

கருந்துளைகள் தங்களிடம் இருக்கும் சக்தியை மிக மிக நீண்ட நெடிய காலப்போக்கில் மிகவும் சிறிது சிறிதாக இழக்கின்றன. இந்த சக்தி ஆற்றல் துகள்களாகவும், வெப்ப கதிர்களாகவும் மிக நுண்ணிய அளவுகளில் வெளிப்படுகிறது என்று ஹாக்கிங் கண்டுபிடித்தார். இதற்கு ஹாக்கிங் கதிரியக்கம் என்று பெயரிடப்பட்டது.

 

அடர்த்தி, வெப்பம், அழுத்தம், காலம்வெளி ஆகிய அனைத்து பண்புகளும், ஒன்றாக சுருங்கி சின்னஞ்சிறு உள்மையமாக ஓர் ஒற்றை புள்ளியில் ஒருமை தன்மையுடன் எஞ்சி நிற்கும் கருந்துளைகளின் வினோதமான நிலை ஒற்றைத்தன்மை எனப்படுகிறது. கருந் துளைகளின் இத்தகைய நிலை பற்றி ஹாக்கிங் செய்த கணக்கீடுகள் உலக அளவில் இவருக்கு புகழைத் தேடித்தந்தன. 

 

கற்பனைக்கு எட்டாத தொலைவுகளில் இருக்கும், கண்ணுக்கு புலப்படாத கருந்துளைகளில் மிக மிக குறைவான வேகத்தில், நீண்ட நெடிய காலத்திற்கு நடைபெறக்கூடிய நிகழ்வுகளை தனது கணித ஆற்றலை கொண்டு சிந்தித்துக் கண்டவர் ஹாக்கிங்.

 

இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று சொல்லப்பட்ட போதிலும், அதற்கு பிறகு 55 ஆண்டு காலம் இவர் வாழ்ந்திருந்தார். கடுமையான நோய் இவரைப் பற்றிப் பிடித்துக்கொண்டு ஆட்டி வைத்தது. 1985-ம் ஆண்டு முதல் சக்கர நாற்காலியில் முடங்கிப்போனார். 

 

இவர் பேசுவதற்கென்று சிறப்பாக உருவாக்கப்பட்ட கணினி மென்பொருள், இவரது கன்னத்து தசைகளின் அசைவுகளை புரிந்துகொண்டு, அவற்றை சேர்த்து ஒருங்கிணைத்து, அவர் பேச முற்படும் வார்த்தைகளை திரையில் காட்டும். அவற்றில் சரியானவற்றை ஹாக்கிங் சொடுக்கியின் துணைகொண்டு தேர்ந்தெடுப்பார். இந்த கருவியின் துணை கொண்டுதான் தனது ஆராய்ச்சிகள் அனைத்தையும் இவர் வெற்றிகரமாக முடித்தார்.

 

எனக்கு ஏற்பட்டிருக்கும் உடல்குறை பற்றி வருந்திகொண்டே இருப்பது வீண் வேலை. வாழ்க்கையில் எடுத்த காரியங்களில் வெற்றி காண வேண்டும். உங்கள் நிலைமைக்காக எப்போதும் புலம்பிகொண்டும், கோபப்பட்டு கொண்டும் இருந்தீர்கள் என்றால், அதையெல்லாம் கேட்பதற்கு யாருக்கும் நேரமில்லை என்று அவர் ஒருமுறை எழுதியிருந்தார். 

 

இவரது வாழ்க்கை ஒட்டுமொத்த மனித குலத்திற்கான ஒரு பாடம். 2018-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதியன்று தனது 76-வது வயதில் கேம்ப்ரிட்ஜில் விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் காலமானார்.

 

….முனைவர் .சித்தார்த்தன், நிகழ்ச்சிப்பிரிவு முன்னாள் தலைவர், சென்னை வானொலி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,