தெய்வம் தந்த வீடு ..வீதியிருக்கு

 


அவள் ஒரு தொடர்கதை”திரைப்படத்தின் கதாசிரியர் திரு.எம்.எஸ்.பெருமாள். அமரர் சுகி.சுப்பிரமணியன் அவர்களின் புதல்வர்.திரு.சுகி.சிவம் அவர்களின் மூத்த சகோதரர். சென்னை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், வெவ்வேறு மாநிலங்களில் நிலைய இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது “தெய்வம் தந்த வீடு” பாடல் பற்றி அபூர்வமான தகவல் ஒன்றைச் சொன்னார். தன் சம்பாத்தியத்தால் குடும்பத்தைத் தாங்குகிற இளம்பெண், ஊதாரியாகவும், ஊர்சுற்றியாகவும் குடிகாரனாகவும் இருக்கும் அண்ணனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறாள்.அண்ணன் கதாபாத்திரம் ஆர்ப்பாட்டமாக வெளியேறுவதுதான் கதை. அங்கே ஒரு பாடல்வைக்க வேண்டுமென இயக்குநர் கே.பாலசந்தர் சொன்னதும் கடுமையாக எதிர்த்தவர் எம்.எஸ்.பெருமாள். அந்த இடத்திற்கும் சரி, கதாபாத்திரத்திற்கும் சரி, பாடல்காட்சி பொருந்தாது என்பது அவருடைய கட்சி. வாதங்களைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு பாலசந்தர் சொன்னாராம், “பெருமாள்! பாட்டெழுதப் போறது நீங்களோ நானோ இல்லை. கவிஞர் எழுதப் போறார்.சரியா வந்தா வைச்சுக்குவோம் .இல்லேன்னா விட்டுடுவோம்”

தயாரிப்பாளர் இராம.அரங்கண்ணல் அலுவலகத்தில் பாடல் கம்போஸிங் தொடங்கியது. நேரம் போய்க் கொண்டிருந்ததே தவிர அன்று கவிஞர் விளையாட்டுப் பேச்சிலும் வேடிக்கையிலும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்குமேல் பொறுமையிழந்த எம்.எஸ்.வி. கவிஞருடன் ஊடல் கொண்டு கிளம்பிப் போக “போறான் போ” என்று தன் வேடிக்கைகளைத் தொடர்ந்தார் கவிஞர். அவரது மற்றொரு நெருங்கிய நண்பரான இராம.அரங்கண்ணல்,”கண்ணா! இப்படியே பண்ணிகிட்டிருந்தா கதையிலே வர்ற பொண்ணு மாதிரி நானும் உன்னைத் தூக்கி வீதியிலே வீசச் சொல்லிடுவேன்” என்றதும்,”டேய்! வீதின்னா கேவலமாடா? உன் ஆபீஸ் இல்லாட்டி என்ன? அது தெய்வம் தந்த வீடுடா!தெய்வம் தந்த வீடு ..வீதியிருக்கு” என்று பொழியத் தொடங்கிவிட்டார்.
எம்.எஸ்.வி.புறப்பட்டு சிலநிமிஷங்கள்தான் ஆகியிருந்தன. செல்ஃபோன் வசதிகள் இல்லாத காலம்.எம்.எஸ்.வி. வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து, “கார் வந்தால் ஆர்மோனியத்தை இறக்க வேண்டாம்.பாடல் வந்டுவிட்டது. திரும்பி வரச்சொல்லுங்கள்”என்று சொல்லி கம்போஸிங் தொடர்ந்ததாம்.
வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட விட்டேத்தியான மனிதனின் அலட்சியக் குரலிலேயே அடர்த்தியான தத்துவங்களைப் பொழிந்திருப்பார் கண்ணதாசன்.
“கள்ளிக்கென்ன முள்ளில் வேலி”, “காட்டுக்கேது தோட்டக்காரன்” என்பது போன்ற கேள்விகளும், “வெறுங்கோயில் இதிலென்ன அபிஷேகம்?என் மனமென்னும் தெருக்கூத்து பகல்வேஷம் என்பது போன்ற கேலிகளும், “தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்” போன்ற தெறிப்புகளும் நிறைந்த பாடல் அது.
நன்றி: மரபின்மைந்தன்.காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,