பெரியாறு அணை கட்ட காதல் கணவருக்கு உதவிய கிரேஸ் ஜார்ஜினா

 பெரியாறு அணை கட்ட காதல் கணவருக்கு உதவிய கிரேஸ் ஜார்ஜினா



தனது காதல் கணவனுக்காகத் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின், கதாநாயகனாகவும், மக்களின் வாழ்வாதாரம் காக்கத் தானும் உதவப் போகிறோம் என்று நினைக்காமல் உதவிய கர்னல் பென்னிகுவிக், கிரேஸ் ஜார்ஜினா.
கர்னல் ஜான் பென்னிகுவிக், 1879 ஆம் ஆண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதி கிழக்கிந்திய கம்பெனியின் தமிழக பொதுப் பணித் துறையில் நிர்வாகப் பொறியாளராக பணி உயர்த்தப்பட்டார்.
1879 ஆம் ஆண்டு கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கும் லண்டனைச் சேர்ந்த கிரேஸ் ஜார்ஜினா சாம்பியர் என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது.
காதல் மனைவி கிரேஸ் ஜார்ஜினாவைக் கைப்பிடித்த நேரமோ என்னவோ , தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட, தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு முல்லைப் பெரியாறு அணை கட்டும், கர்னல் ஜான்.பென்னிகுவிக்கின் செயல்திட்ட அறிக்கை அன்றைய ஆங்கிலேய உயரதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1882 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணை தொடர்பான கோப்புகள் பென்னிகுவிக்கிடம் ஒப்படைக்கப்பட்டு, 1887 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் நாள் பெரியாறு அணைக் கட்டுமானப் பொறியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
1888 ஆம் ஆண்டு ஜூலை 4-ல் சிறப்புத் தலைமை கண்காணிப்பு பொறியாளராக பணியேற்று பெரியாறு அணைக்கட்டின் முழு கண்காணிப்புப் பொறுப்பையும் கர்னல் ஜான் பென்னிகுவிக் ஏற்றுக் கொண்டார்.
அணைக்கட்டு வேலை நடைபெறும் பகுதியிலேயே தொழிலாளர் முகாமிற்கு அருகிலேயே சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டு அணைக்கட்டு வேலைகளை கண்காணிக்கத் தொடங்கினார்.
அவர் இல்லாதபோது அவரது மனைவி கிரேஸ் ஜார்ஜினாவின் மேற்பார்வையில் அணைக்கட்டு வேலைகள் தடையில்லாமல் நடைபெற்றன. சரியான சாலை வசதிகள் ஏதுமில்லாத காலத்தில் கொட்டுகின்ற மழையிலும், நடுங்குகின்ற குளிரிலும் வேலை ஆள்களோடு ஆள்களாக கலந்து நின்று தன் காதல் கணவன் பென்னிகுவிக்கின் அணைக்கட்டு வேலைகள் தொய்வடையாமல் செய்தவர் கிரேஸ் ஜார்ஜினா.
1891 ஜூன் 18ல் எதிர்பாராத தென்மேற்கு பருவமழை. வரலாறு காணாத பெரும் வெள்ளத்தால் மூன்று ஆண்டுகள் அனைவரின் கடும் உழைப்பால் கட்டப்பட்ட அணையின் அடித்தளம் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டது.
'அனைவரின் உழைப்பும் அடைமழையால் அழிந்து போனதே' என்று கர்னல் ஜான் பென்னிகுவிக் கண்கலங்கி நின்ற போதும், தன் கணவருக்கு ஆறுதல் கூறித் தேற்றிய மனைவி கிரேஸ் ஜார்ஜினா.
'இனி அணைக்காக செலவு செய்ய அரசு தயாராக இல்லை' யென்று அரசு சொன்னபோதும், கம்பம் பள்ளத்தாக்கின் பணம் படைத்தவர்கள் பணம் தர இயலவில்லை என்ற போதும், தனது அன்புக் கணவரின் அணைக்கட்டு வேலை தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக, 'அன்பரே கவலை வேண்டாம், உங்கள் வேலைக்கு நான் துணை நிற்பேன்' என்று கூறி, தன் நகைகளை கழற்றித் தந்து, அன்றைய காலகட்டத்தில் ரூ. 65 லட்சம் மதிப்புள்ள தன் குடும்பச் சொத்துகளையும் விற்று முல்லைப்பெரியாறு அணைக் கட்டுமானப் பணிகள் தொடர தன் கணவருக்கு உறுதுணையாக இருந்தவர்தான் கிரேஸ் ஜார்ஜினா சாம்பியர்.
இன்று முல்லைப்பெரியாறு அணை, காலங்களைக் கடந்தும் நிலைத்து நிற்கிறது என்றால் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் காதல் மனைவி கிரேஸ் ஜார்ஜினாவின் பெரும் பங்கும் அதில் இருக்கின்றது. கடும் குளிர், வெயில், மழை என்ற பருவ நிலையில் தனது கணவருடன் இணைந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு கிரேஸ் ஜார்ஜினா சாம்பியரின் பங்கும் உள்ளது. கணவனின் காதலை மெய்ப்பட வைத்த அந்தத் தாயை இன்று நினைவுகூர வேண்டும்.

நன்றி: தினமணி
செ.பிரபாகரன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,