“மாட்டி வண்டி போகாத ஊருக்குக் கூட எங்க பாட்டுவண்டி போயிருக்கு”

 “மாட்டி வண்டி போகாத ஊருக்குக் கூட எங்க பாட்டுவண்டி போயிருக்கு” என்று இளைய ராஜா குறிப்பிட்டிருப்பது பாவலரின் உழைப்புக்கு ஒரு சான்றிதழ்.





“தன் வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப் பணித்த ஒரு உன்னதமான கலைஞனின் கடைசிக் காலம் கல் நெஞ்சத்தையும் கரைக்கும். ஒரு கலைஞரின் ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில் எந்தக் கட்சிக்காக அவர் பாடினாரோ, அந்தக் கட்சியிலிருந்து அவருக்கு ஜாமீன் கொடுக்க எந்தத் தலைவரும் வரவில்லை; எந்தத் தொண்டரும் வரவில்லை...” என்று இளையராஜா தமது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
“கலைஞனுக்கு வாழ்க்கை எவ்வளவு நீள மானது என்பது கணக்கல்ல. அது எவ்வளவு கூர்மையாய் இலக்கை நோக்கி வேகமாய்க் குறிதவறாமல் சென்று தாக்கி அழித்தது அல்லது அழிந்தது என்பதுதான் சிறப்பு. அத்தகைய சிறப்புக்கு முற்றிலும் பொருந்தி நெருப்பாய்ச் சுடர்விட்டு நின்றவர் தோழர் வரதராசன்...” என்று த.ஜெயகாந்தன் அவரது ஆற்றலை நினைவு படுத்துகிறார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு அறக் கட்டளை சார்பாக ‘பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’ என்ற தலைப்பில் 1986 அக்டோபர் 8,9,10 ஆகிய நாட்களில் சிறப்பான ஆய்வுரையை தோழர் நல்லகண்ணு நிகழ்த்தியுள்ளார்.
“கவிஞன் காலத்தின் கண்ணாடியாகவும் இருக்கிறான். அதே நேரத்தில் காலத்தை உருவாக்கவும் செய்கிறான். பாவலர் வரதராசன் தன்னைப் பெற்றெடுத்த மதுரை மாவட்டத்தின் மலையடிவார மக்கள் வாழ்க்கையின் சின்னமாக விளங்கினார். அதே பொழுதில் அந்த மக்களின் வாழ்க்கை மாற்றத்திற்கான கருத்துகளைப் பாடித் திரிந்தார், எழுச்சியை உருவாக்கினார்...” என்பது அந்த உரையில் ஒரு பகுதி.
“வெள்ளைக்காரங் காலத்திலே
விலைவாசியைப் பாத்தியா?
கொள்ளைக்காரன் ஆட்சியிலே
கூடிப் போனதைப் பாத்தியா?”
என்று சுதந்திர நாட்டின் அவலத்தை அவர் சுட்டிப் பாடுவது இப்போது மட்டுமல்ல, எப்போதும் பொருந்தும்.
“பள்ளிப் படிப்பறிந்தேன்
பல தொழிலும் நான் புரிந்தேன்
பொதுவுடைமைக் கட்சிக்காகப்
பொன்பொருளை நான் இழந்தேன்
ஆடு வித்தேன்; மாடு வித்தேன்;
அழகான வீடு வித்தேன்;
ஆத்தா, அப்பன் தேடித்தந்த
அசோக வனத் தோட்டம் வித்தேன்”
என்பது கவிதையல்ல; ஒரு தியாகியின் வாக்கு மூலம்.
அரசியலுக்கு வந்து வீடும், தோட்டமும் வாங்கிக் குவிக்கிற இந்தக் காலத்தில், எல்லா வற்றையும் இழந்து கட்சிக்காகவும், மக்களுக் காகவும் வாழ்ந்த - வாழ்ந்து வருகிற மனிதர்களைப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கும். பாவலரின் இறுதிக் காலம் மிகவும் சோகமானது என்பது சொல்லாமலேயே விளங்கும்.
மக்களுக்காக இறுதிவரை வாழ்ந்தவரை மக்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்க வேண்டும். துன்பம் வந்தபோது தோள் கொடுத்திருக்க வேண்டும். நன்றி மறந்த சமுதாயம் என்ற அவப்பெயரை நாம் எப்படித் துடைக்கப் போகிறோம்?
இணையத்தில் படித்தது
thanks :

Kandasamy R

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,