Tuesday, March 8, 2022

மகளிர் தினம்./மகப்பேறு மருத்துவர் பத்மாவதி அம்மையார்/கட்டுரை


 மார்ச் எட்டாம் தேதி, இன்று மகளிர் தினம்.

 இன்றைய பதிவில், 100 ஆண்டுகளைக் கடந்து, மதுரையில் வாழும் முதல் மகப்பேறு மருத்துவர் பத்மாவதி அம்மையார் பற்றி  சில தகவல்கள்.


27.04.1921ல்  மதுரையில் அக்கால கட்டத்தில் சுந்தர்ராஜன் என்னும் புகழ்பெற்ற மருத்துவர்,  தாயார் பாக்கியலட்சுமிக்கும் மூத்த மகளாய்  பிறந்த இவர், தனது தந்தையாரின் ஆசைப்படி இளம் வயதில் நன்கு கல்விகற்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட்  படித்து 1949ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார்.

1950ல் மதுரை முனிசிபல்  மருத்துவமனையில் முதல் தமிழ் நாட்டுப் பெண் மருத்துவராக பத்மாவதி அம்மையார் பணியில் சேர்ந்தார்.இவர் காந்தியவாதியான  ராமசாமி என்பவரை மணந்து கொண்டார்.


1955ஆம் ஆண்டு பத்மாவதி மதுரை முனிசிபல் மகப்பேறு மருத்துவமனையில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார் அந்த காலகட்டத்தில் மகப் பேறு என்பது மருத்துவமனையில்  மிகவும் குறைவாக இருந்தது அனேகமாக எல்லா சமூகத்தினரும் வீட்டிலேயே குழந்தை பெற விரும்பினர்.


 இத்தகைய சூழ்நிலையை கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து கண்காணித்து மருத்துவ உதவிகள் வழங்கி அவர்கள் விரும்பியபடி வீடுகளிலேயே அபாயமற்ற சுகப்பிரசவங்களை முனிசிபல் மருத்துவ நல உதவியாளர்கள்  மற்றும் செவிலியர்களுக்கும் பயிற்சி அளித்தார். அத்துடன் பத்மாவதி அம்மையார் தாமும் மகளிர் மருத்துவம் படித்த மருத்துவர் என்றும் பாராமல் வீடு வீடாகச் சென்று மருத்துவமனையில் எவ்வளவு சரியான முறையில் சுகப்பிரசவம் நடைபெறுமோ அதே முறையில் சுகப் பிரசவங்கள் நடத்தி வந்தார்.


 இதனால் பத்மாவதி அம்மையாருக்கு மிகவும் கைராசியான மகப்பேறு மருத்துவர் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார்.


மதுரை நகரின் முக்கிய பிரமுகர்களின் பிரசவங்கள்  அனைத்தும் இவரால் நிகழ்த்தப்பட்டன.ராம்கோ சிமெண்ட்ஸ் குழுமம் போன்ற செல்வந்தர்களின் குடும்ப மருத்துவராக விளங்கினார்.


 இன்று உலகின் பல்வேறு துறைகளில் உள்ள பிரபல மருத்துவர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் என எண்ணிலடங்கா மக்களை இந்த மண்ணிற்கு பத்திரமாக கொண்டு வந்தவர் டாக்டர் பத்மாவதி அவர்கள்.


1949 - 1952 வரை சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக விளங்கிய பி.எஸ் குமாரசாமி ராஜா சகோதரி காசியம்மாள், பத்மாவதியின் மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருந்த அச்சமயத்தில் பி.எஸ் குமாரசாமி ராஜா மருத்துவமனைக்கு தாமே நேரில்வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மருத்துவமனையிலிருந்து பத்மாவதியும் வாழ்த்திச் சென்றார் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.


 பத்மாவதி அம்மையார் தனது கடின உழைப்பின் மூலம் மதுரை பெருமாள் கோவில் தெருவில் பிரேமாலயா என்ற ஒரு மருத்துவமனையை உருவாக்கினார். 10 படுக்கைகள் கொண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையை சுகப்பிரசவங்களுக்கு  பிரசித்தி பெற்றதாக மாறியது.


 இவரது மூத்த மகன் குரு சுந்தர், மகள்  கீதாலட்சுமி இருவரும் மருத்துவர்கள்.இவர்கள் மதுரையில் ஜெய்ஹிந்த் புரத்தில் பத்மாலயா மருத்துவ மையத்தை தொடங்கி இன்றும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.


 1969ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் போலந்து நாட்டின் வார்சாவில் மகப்பேறு மற்றும் குழந்தை நலம் பற்றிய உயர்நிலைப் பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.   தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட  ஒரே மருத்துவர் பத்மாவதி ஆவார்.


மதுரை நகராட்சி உதவியுடன் கிராமப்புறங்களில் அவசர தேவைகளுக்காக 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.


பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை தனது 90 வயது வரை பத்மாவதி அம்மையாரும் கம்பீரமாக  இந்த மருத்துவமனையில் வலம் வந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்தார்.


 வரும் ஏப்ரல் 27 ஆம் நாள் அகவை 102 தடம் பதிக்கும் தமிழ்நாட்டின் வைர மங்கை, மகப்பேறு மருத்துவர் பத்மாவதி அம்மையார் அவர்கள்.


 மகளிர் தினம் முன்னிட்டு, தமிழ்நாட்டில் பிறந்த  மகளிரின் பெருமையை பதிவிட்டதில் பெருமை கொள்கிறேன்.


 சென்னையில் வெளிவரும் சமுதாய இலக்கிய பண்பாட்டு  மாத  " புதுகைத் தென்றல்" இதழிலிருந்து குறிப்பு எடுக்கப்பட்டது.
No comments:

Featured Post

73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா.

  73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா. தாய்லாந்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், 3-0 என்ற க...