எல்லாமே என் ராசாதான்

 


இன்று பிறந்த நாள் காணும் இயக்குனர்  ராஜ்கிரண் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் . 💐

*

சில மனிதர்களைப் பார்த்தவுடன் எழுந்து நின்று வணங்கத் தோன்றும். தோற்றத்தில் அப்படி கம்பீரம் இருக்கும். அதற்கு வெறும் ஆஜானுபாகுவான உடல் இருந்தால் மட்டும் போதாது.  மனதில் உருவாகும் உருவத்தைத்தான் உடல் பிரதிபலிக்கிறது. உள்ளத்தில் ஒளி, அறிவில் தெளிவு, இதயத்தில் கனிவு எல்லாம் ஒன்றுசேர்ந்து வார்க்கப்படும் வடிவு அது. அது பணத்தாலோ புகழாலோ வருவதல்ல. அன்பால் வருவது. நம்பிக்கையால் வருவது. அதை ராஜ்கிரண் அவர்களிடம் பார்க்கலாம். 


திரையில் அவர் வந்தால் போதும். சட்டகம் முழுவதும் நிரம்பிவிடும்.


நாம் பார்க்கும் கதாபாத்திரத்தின் பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து, கல்வித் தகுதி முதலியவை மாறுபட்டாலும் ராஜ்கிரண் அவர்கள் ஏற்கும் கதாபாத்திரம் ஒரு கண்ணியத்தோடு இருக்கும். 


அது இல்லாத பாத்திரங்களை அவர் ஏற்கமாட்டார். கோடி கோடியாக சம்பளம் கொடுத்தாலும் அவர் மனதிற்குப் பொருந்தாத கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார். தனக்கென ஓர் இலக்கணத்தோடு வாழ்பவர்.


தனித்துவம் மிக்க நடிகர். 


அவரது நடிப்புக்கு முன்னுதாரணம் என்று ஏதும் இல்லை. அவரது மனோதர்மமே அவரது நடிப்பு.


 "எந்த நடிப்புக் கல்லூரியில் படித்தாலும் இப்படி ஒரு நடிப்பைக் கற்றுவிட முடியாது" என்று ராஜ்கிரண் அவர்களின் நடிப்பு பற்றிசா சொல்வார் நண்பர் இயக்குனர் என். லிங்குசாமி . 


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அறிந்த நடிகர். பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் இருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படியே கொடுப்பவர். அவரது மௌனமும் பேசும். அவரிடம் வசனம் சொல்லச் செல்கையில் நான் கற்றவை அதிகம். 


'புதுமையை விட தெளிவு முக்கியம் தம்பி' என்றார் ஒருமுறை. மனதில் பச்சை குத்திக் கொண்டேன் அதை.


என் ராசாவின் மனசுல... , எல்லாமே என் ராசாதான், அரண்மனைக் கிளி ஆகிய படங்களின் வெற்றியைத் தமிழ் சினிமா என்றும் மறக்காது. அவரது முரட்டுத்தனமான தோற்றத்துக்கு அவர் நடிக்க வந்ததே ஓர் ஆச்சரியம். ஆனால் அத்தோற்றத்திற்கு ஏற்ற பாத்திரங்களை ஏற்றார். வென்றார். அடுத்தடுத்து வெற்றி. பின் ஒரு தொய்வு. கலங்காமல் காத்திருந்தார்


சிறிது இடைவெளிக்குப் பிறகு நந்தா, தவமாய்த் தவமிருந்து, 

சண்டக்கோழி, பவர் பாண்டி, மஞ்சப்பை என அவர் ஏற்ற பாத்திரங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மனதைவிட்டு என்றும் விலகாத பாத்திரங்கள். அப்படங்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பவர்.


இவை எல்லாம் ஒரு நடிகராக அவரிடம் நான் கண்டவை.

தனிமனிதராகச் சொல்லவும்  நிறைய உண்டு.


முதன்மையாக நேரந் தவறாதவர்.  பெரியவர் சிறியவர் வித்தியாசம் இன்றி ஒவ்வொருவரையும் மதிப்பவர். எல்லாவற்றை விடவும்  படப்பிடிப்புத் தளத்தில் அவர் இருந்தால் அந்தச் சூழலே அவ்வளவு ஒழுங்கோடு இருக்கும். இதுதான் முதலில் சொன்ன உள்ளத்தில் ஒளி. 

அவரோடு இணைந்து  பணியாற்றியதும்

பழகியதும் எனக்குக் கிடைத்த பெருமை என்று மகிழ்கிறேன். 


உடல் ஆரோக்கியத்தோடும் மன நிம்மதியோடும் பல்லாண்டுகள் வாழ்ந்து இன்னும் பல கதாபாத்திரங்களுக்கு உயிர்தர வேண்டும் என அவரது இந்தப் பிறந்த நாளில் என் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


மெகாஸ்டார் மம்முட்டி அவர்களோடு அவர் நடித்து அவரது 'ரெட்சன்' நிறுவனம் மூலம் விரைவில் வெளிவர இருக்கும் 'குபேரன்' திரைப்படம் வெற்றிபெறவும் என் இனிய வாழ்த்துக்கள்.

**

அன்புடன்,

பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,