சட்டுன்னு மசால் வடை செய்ய 1 கப் கடலை பருப்பை காலையில் எழுந்ததும் ஊற வைத்தால் சுடச்சுட

 சட்டுன்னு மசால் வடை செய்ய 1 கப் கடலை பருப்பை காலையில் எழுந்ததும் ஊற வைத்தால் சுடச்சுட



மெது வடையை விட, மசால் வடையை விரும்புபவர்கள் அதிகம் உண்டு. செய்வதற்கும் மெது வடையை விட, மசால் வடை ரொம்பவே சுலபமானது. யார் வேண்டுமானாலும் எளிதாக மசால் வடையை சட்டென செய்து அசத்தி விட முடியும். காலையில் எழுந்து ஒரு கப் கடலைப்பருப்பு ஊற வைத்தால் சட்டு சட்டுன்னு காய்கறிகளை நறுக்கிப் போட்டு இட்லியுடன் சுடச்சுட மசால் வடையை பரிமாறிக் கொள்ளலாம். மசால் வடை எளிதாக செய்வது எப்படி?

மசால் வடை செய்ய தேவையான பொருட்கள்: கடலைப் பருப்பு – 150 கிராம், தோல் உரித்த பூண்டு பல் – 3, காய்ந்த மிளகாய் – 1, சோம்பு – ஒரு டீஸ்பூன், துருவிய இஞ்சி – கால் டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

மசால் வடை செய்முறை விளக்கம்: மசால் வடை செய்வதற்கு முதலில் காலையில் எழுந்த உடனேயே நீங்கள் கடலைப்பருப்பு 150 கிராம் அளவிற்கு எடுத்து நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். நீங்கள் மற்ற வேலைகளை எல்லாம் பார்த்து முடிப்பதற்குள் கடலை பருப்பு நன்கு ஊறி இருக்கும். மூன்று மணி நேரத்திற்கு பிறகு கடலை பருப்பை கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விட வேண்டும். தண்ணீர் எல்லாம் வெளியேறிய பின்பு உலர்வாக இருக்கும் இந்த கடலைப் பருப்பை ஒரு பெரிய மிக்ஸி ஜாரை கழுவி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அதனுடன் தோலுரித்த பூண்டு பற்கள், காரத்திற்கு ஒரு காய்ந்த மிளகாய், வாசனைக்கு சோம்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் நைசாக அரைத்து விட்டால் வடை நன்றாக வராது. அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை இலைகள் சேர்த்து, பச்சை மிளகாய் ஒன்றை பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். - 


பின்னர் தோலுரித்து மிகவும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழை இலைகள் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். கெட்டியாக இருக்கும் இந்த மாவை உருட்டினால் அழகாக உருண்டை பிடித்து விடலாம். இப்போது அடுப்பில் சட்டியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு உருண்டை பிடித்து வைத்துள்ள மாவை வடை போல தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக இருபுறமும் சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதாங்க நொடியில் செய்து அசத்த கூடிய இந்த மசால் வடை கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காமல் வெளியில் மொறு மொறுவென்றும், உள்ளே சாப்டாக நல்ல சுவையுடனும் இருக்கும். காலையில் டிபன் மட்டுமல்லாமல், மாலையில் டீயுடன் வைத்து சாப்பிட்டால் அபாரமான ருசியாக இருக்கும்





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,