புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 131-ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா ..!

 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 131-ஆம் ஆண்டு  பிறந்தநாள் பெருவிழா ..!இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர்.  'ஒடுக்கப்பட்ட  மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர்!' என்கிற பொதுப் பிம்பத்தில் பலர் இருப்பது வருத்தத்துக்குரியது.


அம்பேத்கர், குடும்பத்தின் பதினான்காவது பிள்ளையாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்வியின் வெளிச்சம், சமத்துவத்தின் மீதான நம்பிக்கை, உரையாடலுக்கான ஜனநாயக பண்பு ஆகியவற் றின் மூலம், இந்தியாவின் சமூக வரலாற்றில் மிகத் தனித்துவமான ஓர் இடத்தைப் பெற்றார். 


அமெரிக்காவில் சாதியமைப்பை பற்றித் தன்னுடைய உயர்கல்வி ஆய்வையும், ஆங்கிலேயரின் மாகாண நிதியமைப்பை பற்றி முனை வர் பட்ட ஆய்வும் செய்தவர், அங்கே பொருளாதார மேதை செலிக்மான் மற்றும் தத்துவ மேதை ஜான் டூவி ஆகியோரின் தாக்கத்தில் அறிவுத் தளத்தை விரிவாக்கி கொண்டார். நியூயார்க் நகரத்தில் அண்ணல் சேர்த்த ஒரே சொத்து இரண்டாயிரம் புத்தகங்கள். 


பரோடா மன்னரின் நிதி தீர்ந்த நிலையில், மன்னரின் அவையில் வேலை பார்க்க வந்தார். அங்கே அவரின் கல்வியோ, தகுதியோ சுற்றியிருந்த யாரின் கண்ணுக்கும் தெரியவில்லை. அவர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்று சொல்லி அவரைத் தொடக்கூட மறுத்தார்கள். தங்க இடம் கிடைக்காமல், அருந்த நீர் கூடக் கிடைக்காமல் அவர் அவமானங்களை சந்தித்தார். 


லண்டனில் போய்  ஆய்வுப்படிப்பை முடித்து பார்-அட் -லா பட்டம் பெற்ற பின்னர் இந்தியா திரும்பினார். பம்பாயில் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தும், பம்பாய் சட்டக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றிய அம்பேத்கர், சட்டப்பயிற்சியில் நல்ல வருமானம் ஈட்டியும்,  சொகுசான வாழ்க்கையை விரும்பாமல் தன்னைப் போன்ற சக சகோதரர்களின் கண்ணீரைத் துடைக்க, தன்மான உணர்வைத் தர அரசியல் களம் புகுந்தார். 


எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாகி இருட்டில், துன்பத்தில், அடக்குமுறையில் உழன்று கொண்டிருந்த சூழலிலும் சக மக்களின் துயரத்துக்கு என்ன காரணம் , சாதிகள் எப்படித் தோன்றின , சாதியம் எப்படி சக மனிதனை சமமானவனாகக் கருதாத துயர் மிகுந்த போக்கை வளர்த்தது என்பதைப்பற்றி அவர் செய்த ஆய்வு, அதைத்தொடர்ந்து எழுதிய நூல்கள் எல்லாமும்  அசாத்தியமானவை.


எந்த இடத்திலும் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது என்பதற்காக, வரிக்கு வரி அவர் கொடுத் திருக்கும் அடிக்குறிப்புகள், எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் உண்மையை மட்டும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் தீனக்குரலாக எழுப்பிய அற்புதம் அவரால் செய்யப்பட்டது. வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆங்கிலேயருக்கு  அவர் எடுத்துக்காட்டும் புள்ளி அற்புதமானது. அது சமூ கத்துக்கு எதிரானது அல்ல,பணம் பெற்றால் ஒருவர் முன்னேறி வர்க்க அடுக்கில் மேலே போய் விடலாம். இங்கே அது சாத்தியம் இல்லை என்று தெளிவாகப் பதிவு செய்தார் அண்ணல்.


மேலும் ஜாதிமுறையைக் கண்டு யாரும் வருத்தப்படுவது இல்லை, தங்களுக்குக் கீழே அடிமைப்படுத்த வேறு சிலர் இருக்கிற குரூர மகிழ்ச்சியில் அவர்கள் கட்டுண்டு கிடப்பதை அம்பேத்கர் எடுத்துக் காட்டினார். அக மண உறவுகளின் மூலம் சாதியமைப்பு தொடர்ந்து இங்கே நிலை பெற்றிருப்பதை அவர் சுட்டிக்காட்டி னார். இறுக மூடிய பல்வேறு மாடிகளை மட்டும் கொண்ட படிகள் இல்லாத அடுக்குமாடி போல, இந்துமதம் திகழ்கிறது. எதுவும் புக முடியாத இறுகிய அடுக்குகளாக அவை திகழ்கின்றன எனவும், ஏற்றத்தாழ்வுகளைப் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கி, சுரண்டல் அமைப்பாகவும் சாதியமைப்பு திகழ்வதை அவர் ஆணித்தரமாக நிறுவினார். 


எப்படிக் கல்விக்கூடங்கள், அரசின் கவுன்சில்கள், வேலை செய்யும் இடங்கள், வர்த்தகம் என்று பல்வேறு புள்ளிகளில் ஜாதியின் அடிப்படையில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு அவர் ஆங்கில அரசின் கமிட்டிகளின் முன் அடுக்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை மீட்டு எடுத்தார். 


பலருக்கு தெரியாத தகவல்- இந்தியாவின் ரிசர்வ் வங்கி உருவானது அண்ணலின் வழிகாட்டுதலில்தான். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ்-ல் தன்னுடைய பொருளாதார ஆய்வுப்பட்டத்தைப் பெற்றார். உலகப் போர் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், ஒரு தனி வங்கியை இந்தியாவுக்கு என்று துவங்க வேண்டும் என ஆங்கிலேய அரசு யோசித்து, அதற்கான 'ஹில்டன் எங்' குழுவை அமைத்தது. அக்குழுவின் உறுப்பினர்கள் எல்லோரது  கையிலும் இருந்த நூல் அண்ணல் அம்பேத்கர் எழுதிய 'The Problem of the Rupee– It’s origin and it’s solution எனும் நூல் .அதன் வழிக்காட்டுதலில் ரிசர்வ் வங்கி உருவானது . 


முப்பதுகளில் இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை  வடிவமைக்க ஆரம்பிக்கப்பட்ட நேரு குழு,  தாழ்த்தப்பட்ட மக்களின் சிக்கல்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. காங்கிரசிலும் அதே மனோபாவம் இருந்தது. அம்பேத்கர் சைமன் கமிஷனிடம் எல்லாருக்கும் வாக்குரிமை என்கிற பட்சத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ரிசர்வ் தொகுதிகள் வழங்க வேண்டும் என்று வாதிட்ட அதே காலத்தில், காங்கிரஸ் வெறுமனே உரிமை பிரகடனத்தோடு திருப்திபட்டுக்கொண்டது. 


முதலாம் வட்ட மேசை மாநாட்டைக் காங்கிரஸ் புறக்கணித்து இருந்தது. அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஆங்கிலேய அரசு அழைத்திருந்தது. அங்கே அண்ணல், எல்லாருக்கும் வாக்குரிமை சாத்தியமில்லை என்கிற ஆங்கிலேய அரசின் நிலைப்பாட்டைப் பார்த்து, தனித்தொகுதிகளைக் கேட்டார். ஆனால், காங்கிரஸ் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாததும், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் ஒற்றுமை வராததாலும் அவரின் கோரிக்கை கிடப்பில் கிடந்தது. 


முதலாம் வட்டமேசை மாநாட்டுக்குப் பின்னர் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி, பொதுத்தொகுதிகளையே வலியுறுத்தியது. ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு குழுவுக்கு மறுயிர்ப்பு தருவதோடு காங்கிரஸ் திருப்தி பட்டுக்கொண்டது. இந்தச் சூழலில்தான் காந்தியும், அம்பேத்கரும் சந்திக்கிறார்கள். காங் கிரஸ் அதுவரை மத மற்றும் சமூகப் பிரச்னையாகவே ஒடுக்கப்பட்டோர் சிக்கலை பார்த்து வந்தது; அதைக் காங்கிரஸ் திட்டத்தில் சேர்க்கவே தான் கஷ்டப்பட்டதைக் காந்தி அம்பேத்கரிடம் விவரித்தார். “இருபது லட்சம் உங்களின் மேம்பாட்டுக்கு செலவும் செய்திருக்கிறது காங்கிரஸ்” என்றார்.


அம்பேத்கர் "பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் மக்களின் மனப்பான்மையில் எந்த மாற்றமும் இல்லை, ஜில்லா காங்கிரஸ் தலைவர் கூட ஆலய உள்நுழைவு போராட்டத்தை எதிர்க்கிறார்! தீண்டாமை ஒழிப்பை காங்கிரஸ் உறுப்பினராக ஒரு தகுதியாக வைத்திருக்கலாமே ?"என்று அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தி தீண்டப்படாதார் தனித்தொகுதி கேட்பதை எதிர்த்தார். அது இந்து மதத்தைப் பிளவுபடுத்திவிடும் என்றும், அப்படியே தீண்டாமை கொடுமை இப்படித் தனித்தொகுதி கொடுத்தால் தொடரும் என்றும் வாதம் புரிந்தார். தனித்தொகுதியாக 71 தொகுதிகளை ஆங்கிலேய அரசு கொடுத்தபொழுது சாகும் வரை உண்ணாவிரதத்தை எராவடா சிறையில் காந்தி நடத்தினார். 


“எங்களின் தலைவராக ஆகிவிடுங்கள் காந்தி !” என்று அம்பேத்கர் கோரிக்கை வைத்தார். "உங்களில் ஒரு வனாகவே நான் உணர்கிறேன் !" என்றார் காந்தி. இருவருமே பெரிய மனப்போராட்டத்தில் இருந்தார்கள். இறுதியில் தனித்தொகுதிகள் என்கிற கோரிக்கையைக் கைவிட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் ஓட்டுபோட்டு நான்கு பேரை தங்களில் இருந்து வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுப்பார்கள்; அதிலிருந்து பொதுத்தொகுதி வாக்காளர்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற சமரசத்துக்கு அம்பேத்கர் வந்தார். 


71 தனித்தொகுதிகள் என்று இருந்ததை 148 பொதுத்தொகுதிகள் என்று காங்கிரஸ் மாற்றிக்கொள்ளச் சம்மதித்தது. மேலும் ஆங்கிலேய அரசு வழங்கிய தனித்தொகுதி பதினைந்து வருட காலத்துக்கு மட்டுமே இருக்க இந்தப் பொதுத்தொகுதியில் இட ஒதுக்கீடு என்பதோ காலவரையின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


தொடர்ந்து சமத்துவத்துக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த அம்பேத்கர், 1935-ல் குஜராத்தின் கவிதா மாவட்டத்தில் எண்ணற்ற தலித்துக்கள் சாதிக் கலவரத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்டதும் மதம் மாறும் முடிவை எடுத்தார். வெவ்வேறு மதங்களில் தேடுதலில் ஈடுபட்ட அவர், எல்லா மதங்களிலும் ஜாதி அமைப்பு இருப்பதைக் கண்டு இந்தியாவில் காணாமல் போயிருந்த புத்த மதத்தில் தன்னுடைய தொண்டர்களோடு மரணத்துக்குச் சிலகாலம் முன்னர் இணைந்தார். பார்ப்பனியம் மற்றும் பௌத்தத்துக்கு இடையே நடந்த போராட்டமே இந்திய வரலாறு என்று அவர் முடிவுக்கு வந்தார். 


அவருக்கிருந்த பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை உண்டு செய்கிறது .பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல், புவியியல் என எண்ணற்ற துறைகளில் தனக்கான தேடலை விடாமல் செய்தவர் அவர். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில், உடனிருந்த உறுப்பினர்கள் பலர் நகர்ந்து கொள்ள, பி.என்.ராவுடன் இணைந்து உருவாக்கிய பெருமை அண்ணலையே சாரும். 


அதற்குப் பின்னும் ஒரு முன்கதை உண்டு. இந்தியாவின் முதல் அமைச்சரவை பட்டியலோடு காந்தியை பார்க்க நேரு போன பொழுது, அதில் அண்ணலின் பெயர் இல்லை. "எங்கே அம்பேத்கர் அவர்களின் பெயர்?" எனக் கண்களைக் குறுக்கி கேட்ட காந்தி, 'விடுதலை இந்தியாவுக்குத்தான்; காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமில் லை' என்பதைத் தெளிவுபடுத்தினார். நேரு அண்ணலை சட்ட அமைச்சராக ஆக்கினார். 


கிராம சுயராஜ்யம் என்கிற காந்தியின் வழியில் போனால், சாதியம் ஊற்றெடுக்கிற மண்ணாக இம்மண் போய் விடும் என்பதில் அண்ணல் தெளிவாக இருந்தார். நவீனத்துவம்,தொழில்மயம் ஆகியன இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் என்பதிலும், மையப்படுத்தப்பட்ட அரசின் பங்களிப்பே நாட்டை பிணைத் திருக்கும் என்பதை உறுதியாக நம்பினார். அவர் இயற்றிய சட்டங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக் கான இட ஒதுக்கீடு எனும் கனி கிடைக்கப்பெற்றது.


அதையும் தொடர்ந்து அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அண்ணல் சொல்லவில்லை என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும். ஒழுங்காகச் செயல்படுத்தப்படும் பட்சத்தில் வேற்றுமைகள் இம்மண்ணை விட்டு அகலும் என்பது அவரின் நம்பிக்கையாக இருந்தது. அவர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம்தான் இந்த நாட்டைச் செலுத்தும் வாகனம் என்றால் அது மிகையில்லை. இந்த நாட்டின் ஜனநாயகம் இன்னமும் உயிர்திருப்பதற்கு அண்ணலின் தொலைநோக்கு முக்கியக் காரணம். 


பொதுவான இந்து சிவில் சட்டத்தைக் கொண்டு வர அவர் எடுத்த முயற்சிக்கு, மதவாத சக்திகள் கடும் எதிர்ப்பை கிளப்பின. தேர்தல் முடிந்த பின்னர் அச்சட்டங்களை மீண்டும் கொண்டுவரலாம் என்று நேரு கருதினார். நேரு ஒத்துழைக்கவில்லை என எண்ணி  அண்ணல் பதவி விலகினார். அவர் மரணமடைந்த சில மாதங்களில் அதை நேரு ஆறு தனித்தனி சட்டங்களின் மூலம் செய்து அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார். 


கல்வி, அதிகாரம், அரசியல் செயல்பாடு,மத மாற்றம் என்று சமத்துவத்தை நோக்கி இந்திய சமூகத்தைச் செலுத்திய அவர் ,'கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் !' என்கிற வழிகாட்டும் முழக்கத்தை தந்தார். இந்தியாவில் இறப்புக்குப் பின்னால் உத்வேகம் தருகிற தலைவராக அவர் உருவெடுத்து இருக்கிறார்.  


அரசியலமைப்பு சட்ட உருவாக்க குழுவின் முன் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், "பக்தி என்பது மதத்தில் முக்திக்கு வழி வகுக்கலாம். அரசியலில் ஒரு தலைவரின் மீதான குருட்டு பக்தி சீரழிவுக்கும், சர்வாதிகாரத்துக்குமே வழி வகுக்கும்" 

என்று அண்ணல் எச்சரித்தார். 


எந்த மாதிரியான ஜனநாயகம் நமக்குத் தேவை என்பது குறித்து, அண்ணல் அம்பேத்கர் 25-11-1949 அன்று அரசியலமைப்பு சட்டத்தை சமர்ப்பித்து பேசிய இவ்வரிகள் நம் காதுகளிலும், மனதிலும் எதிரொலிக்க வேண்டும்:


“அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வரும் தினத்தன்று நாம் முரண்பாடுகளால் ஆன வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் சமத்துவத்தைப் பெற இருக்கும் நாம், சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வோடு வாழ்வோம். ஒரு மனிதன், ஒரு ஓட்டு மற்றும் ஒரு மனிதன், ஒரு மதிப்பு என்கிற கொள்கையை நாம் அரசியலில் அங்கீகரிப்போம். நாம் சமூக மற்றும் பொருளாதார அமைப்பில் ஒரு மனிதன், 

ஒரு மதிப்பு என்கிற அடிப்படையை நாம் தொடர்ந்து மறுக்கப் போகிறோம்.


எத்தனை காலம் இந்த முரண்பாடுகளோடு வாழ்வோம்? இந்தச் சமத்துவத்தை நாம் தொடர்ந்து நிராகரிக்கிறோம் என்றால் நம் அரசியல் ஜனநாயகம் அழிவை சந்திக்கும். இந்த முரண்பாடுகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதற்குள் அகற்ற வேண்டும். இல்லையேல் இந்த ஏற்றத்தாழ்வுகள் நாம் இத்தனை கடினப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பை சிதறடித்து விடும்.


அம்பேத்கர் நம் அனைவருக்குமானவர்

நம் அனைவராலும் கொண்டாடப்படவேண்டியவர் 


வாருங்கள் அம்பேத்கரை போற்றுவோம் 

அம்பேத்கர் வழி நடப்போம். 


#ஜெய்பீம்
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,