எங்கிருந்தோ சிரிக்கிறார் ஜே.கே. என்கிற ஜெயகாந்தன்.

 மிக அழகான ஒரு சித்தரிப்பு –


கௌசல்யா, சீத்தாம்மா, ஜெயகாந்தன்…
” அம்மாவில் ஆரம்பித்து ஆண்டவன் வரைக்கும்
எத்தனை உறவுகள் உண்டோ, அத்தனை
உறவுகளாகவும் அவர் இருந்தார்.”
ஜெயகாந்தன் அவர்களின் குடும்பத்தைப் பற்றி
திரு.John Durai Asir Chelliah -எழுதிய ஒரு கட்டுரை
————————————————————————ஒரு நடிகை வருகிறாள்.
அந்த எழுத்தாளரின் வாசகியாக முதலில்
அறிமுகம் ஆகிறாள்.
அதன் பின் தோழியாக தோளில் சாய்ந்து
கதைகள் பேசுகிறாள்.
நாளடைவில் அவருக்கு மனைவியாகவும் மாறுகிறாள்.
இதுதான் ஜெயகாந்தனின் இரண்டாவது
மனைவியின் கதை.
கௌசல்யா –
“எப்படி இது நிகழ்ந்தது கௌசல்யா ?”
“அடிப்படையில் நான் ஒரு நாடக நடிகை.
இங்கிலீஷ் நாடகங்கள் நிறைய எழுதி நடிச்சுருக்கேன்.
‘கல்கி’யில் ‘உறங்குவது போதும்’னு ஒரு கதை
எழுதியிருந்தார் ஜே.கே. அந்தக் கதை படிச்சுட்டு
அதிர்ந்துட்டேன். அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகம்.
அந்தக் கதை பத்தி நிறைய பேசினேன்.
அவரும் பேசினார். அப்புறம் ஜே.கே. கதைகளை
சொல்லச் சொல்ல, நான் எழுத ஆரம்பிச்சேன்.
இப்படித்தான் ஆரம்பமானது எங்கள் நட்பு.”
”அது சரி கௌசல்யா,
ஜே.கே.யோடு இணைந்து வாழணும்னு
எப்ப முடிவு பண்ணீங்க ?”
“எதையும் திட்டமிட்டுப் பண்ணலை.
அதுவா நடந்தது. நாடகம், வாசிப்புனு என்
குடும்பத்தைவிட்டு நான் விலகி இருந்தேன்.
தனியா இருக்கிறதுல நிறைய சிரமங்கள் இருந்தன.
அதை ஜே.கே-கிட்ட சொன்னப்ப, ‘பேசாம என்கூடவே,
எங்க வீட்டுக்கே வந்துடு’னு சொன்னார்.
அதை நான் விரும்பினாலும், எதிர்பார்க்கலை.
போக கொஞ்சம் யோசிச்சேன்.
ஆனா, எனக்கு வேற வழி இல்லை.
அவர் குடும்பமும் என்னை ஏத்துக்கிட்டதுதான்
ஆச்சர்யம்.”
“சரி கௌசல்யா, ஜெயகாந்தன் உங்களை
மற்றவர்களிடம் எப்படி அறிமுகம் செய்வார் ?”
“உண்மையை சொல்லப் போனால் நான் அவரோட
மனைவினு ஜே.கே. எங்கேயுமே சொன்னது இல்லை.
குழந்தைங்கதான், ‘எங்க அப்பாவோட
செகண்டு வொய்ஃப்’னு எல்லார்கிட்டயும் சொல்வாங்க.
நானும் அவரை கணவர்னு நினைச்சது இல்லை.
நல்ல தோழன்.
அவ்வளவுதான்.
அவரும் என்கிட்ட அப்படித்தான் நடந்துகிட்டார்.
அம்மாவில் ஆரம்பித்து ஆண்டவன் வரைக்கும்
எத்தனை உறவுகள் உண்டோ, அத்தனை
உறவுகளாகவும் அவர் இருந்தார்.”
இதை சொல்லும்போது கண்ணீர் வருகிறது
கௌசல்யாவுக்கு.
திடீர் என ஒரு சந்தேகம்.
ஜெயகாந்தன்- கௌசல்யா தம்பதிக்கு குழந்தைகள்
உண்டா ?
இதை கேட்க நினைக்கும் முன்னரே பதில் வருகிறது
கௌசல்யாவிடமிருந்து.
“நீயும் ஜே.கே.வும் ஏன் குழந்தை பெத்துக்கலை? னு
நிறையப் பேர் கேட்பாங்க.
நான் யாருக்கும் பதில் சொன்னது இல்லை.
குழந்தைங்க பிறக்காததுகூட நல்லதுக்குத்தான்.
எனக்குத்தான் அவர் குழந்தைங்க,
அந்த குழந்தைங்களோட குழந்தைங்கனு
அன்பு செலுத்த நிறையப் பேர் இருக்காங்களே.”
இருக்கட்டும்.
இந்த இரண்டாவது மனைவியை எப்படி
ஏற்றுக் கொள்ள முடிந்தது முதல் மனைவி
ஞானாம்பிகைக்கு ?
“கணவருக்கு இன்னொரு பெண்ணைப் பிடிக்குதுனா,
எந்த ஒரு மனைவிக்கும் வருத்தம் இருக்கத்தானே
செய்யும்?
ஆனால் கௌசல்யாவின் குணத்தைப் பார்த்ததும்,
எனக்கும் என் குழந்தைகளுக்கும் எந்த ஆபத்தும்
வராதுனு சமாதானம் பண்ணிக்கிட்டேன்.
அவங்க என் இடத்துக்கு வரணும்னு ஆசைப்படலை.
என் குழந்தைங்க மேல ரொம்ப அன்பா இருந்தாங்க.
நான் வேலைக்குப் போகும்போது குழந்தைங்களைப்
பார்த்துக்க எனக்கும் ஆள் வேணும். அந்த
அண்டர்ஸ்டாண்டிங்ல பிரச்னை இல்லாமப் போச்சு.”
என்ன ஒரு மெச்சூரிட்டி இந்த
ஞானாம்பிகைக்கு ?
ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவராம்
ஜெயகாந்தனின் முதல் மனைவி ஞானாம்பிகை.
முதல் திருமணமே காதல் கல்யாணம்தானாம்.
அது பற்றி சொல்கிறார் ஞானாம்பிகை.
“13 வயதில் இருந்தே அவர்மேல காதல்.
அதை காதல்னு சொல்ல முடியுமானு தெரியலை.
பிடிக்கும் அவரை.
நாங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்கதான்.
ஒரே வீட்லதான் இருந்தோம். அவங்க குடும்பச்
சூழ்நிலை காரணமா அஞ்சாம் வகுப்புக்கு மேல
அவரால படிக்க முடியலை. ஆனா, உலகத்துல
நடக்கிற எல்லா விஷயங்களைப் பத்தியும் பேசுவார்.
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’னு எல்லாம்
நாங்க சொல்லிக்கிட்டது இல்லை. ரெண்டு பேருக்கும்
விருப்பம் இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு, அவங்க
அம்மாதான் எங்களுக்குக் கல்யாணம் பண்ணி
வெச்சாங்க.”
ஜெயகாந்தன் ஞானாம்பிகை
தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். முதலாவது மகள்
காதம்பரி அரசு ஆசிரியர்.
இரண்டாவது மகன் ஜெயசிம்மனுக்கு ஒரு
பத்திரிகையில் வேலை.
மூன்றாவது மகள் தீபலெஷ்மி.
ஸாப்ட்வேர் துறை.
“அப்பா உங்களிடம் எப்படி நடந்து
கொண்டார் தீபலெஷ்மி ?”
“அப்பாவுக்கு எங்க மேல நிறைய அன்பு இருந்தாலும்
அதை செயலில் வெளிப்படுத்த அவருக்குத் தெரியாது.
நாங்க எதைக் கேட்டாலும் அதை
எல்லாத்தையும் அப்பா வாங்கி கொடுத்திருக்கார்.
ஆனாலும் பக்கத்துல உட்கார்ந்து பேசுகிற,
தோளில் சாய்ந்து கொஞ்சுகிற, சைக்கிள்
ஓட்டக் கத்துக்கொடுக்கிற அப்பாவா
ஏன் இல்லை னு நிறைய ஏங்கியிருக்கோம்.
அவர் எங்களுக்கான ஆளா இருந்ததைவிட,
அவரோட நண்பர்களுக்கான ஆளாத்தான் இருந்தார்.”
தீபலெஷ்மி இதை சிரித்துக் கொண்டே சொன்னாலும்,
அந்த சிரிப்புக்குள் சின்னதொரு வலியும் தெரிந்தது.
பெருமூச்சுடன்
ஒரு கடைசிக் கேள்வி.
“ஜே.கே.யின் அந்த கடைசி நாட்கள்..?”
இதற்கு பதில் சொல்கிறார் கௌசல்யா :
“கடைசிக் காலங்கள்ல பேச முடியாம,
நினைவு இல்லாம ரொம்பக் கஷ்டப்பட்டார்.
திடீர்னு ‘கௌசல்யா’னு கூப்பிட்டார்.
பிரமையா, உண்மையானு பதறிப் போய்
பக்கத்தில வந்து பார்த்தேன். உண்மையிலே
கூப்பிட்டிருந்தார். கையைப் பிடிச்சுட்டு
அமைதியா இருந்தார்.
மரணம் அவருக்கு விடுதலைதான்.
அவர் இல்லைனு எனக்கு இப்ப கூட
தோணவே இல்லை.”
இதற்கு மேல் பேச முடியாமல் கௌசல்யா
வேறு பக்கம் திரும்பிக் கொள்ள,
தீபலெஷ்மி பேசுகிறார் :
“யாரோட மரணத்துக்கும் அப்பா அழ மாட்டார்.
‘நீங்களும் அழக் கூடாது’னு சொல்வார்.
அப்பா இறந்தப்ப நாங்க யாரும் அழலை.
அந்தப் பக்குவம் அப்பா சொல்லிக்கொடுத்தது.
ஆனாலும் அப்பாவின் தோளுக்கு ஏங்கின
ஒரு சின்னப் பெண்ணை எனக்குள்ள இருந்து
துரத்த முடியலை.
அப்பா இறந்த மறுநாள் அவரின் அஸ்தியைக்
கரைக்கிறதுக்காக பெசன்ட் நகர் கடற்கரைக்குப்
போனோம். அதுதான் அப்பாவோடு வெளியில,
பீச்சுக்குப் போற முதல் தடவைனு தோணுச்சு.
அதுதான் கடைசித் தடவையும்கூட.
அப்பா பத்தி வேறென்ன சொல்ல?”
சிரிக்கிறார் தீபலெஷ்மி.
அவர் அருகிலிருந்து
சிரிக்கிறார் கௌசல்யா.
எங்கிருந்தோ சிரிக்கிறார்
ஜே.கே. என்கிற
ஜெயகாந்தன்.
( நன்றி -திரு.John Durai Asir Chelliah )
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,