ஓர் ஆலயமணி ஓசை ஓய்ந்தது./புகழ்பெற்ற தமிழறிஞர் கண.சிற்சபேசன் காலமானார்

 



ஓர் ஆலயமணி ஓசை ஓய்ந்தது

*புகழ்பெற்ற தமிழறிஞர் புகழ்பெற்ற தமிழறிஞர் கண.சிற்சபேசன் காலமானார்/காலமானார்

மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று ஓய்ந்தது.


ஓர் ஆலயமணி ஓசை

காற்றோடு காற்றாகக் கலந்தது.


பேராசிரியர் கண. சிற்சபேசன் மறைந்தார் என வரும் செய்தி 

இன்னிசை ஓய்ந்து

நீண்ட மௌனம் நிலவுவது போல்

ஒரு வெறுமையை உருவாக்குகிறது.

*

அறிவார்ந்த அரங்குகளை

அலங்கரித்தவர்


நகைச்சுவையால்

மன்றங்களை நிறைத்தவர் 


உள்ளம் மகிழும்

உரைகள் தந்தவர்


மறைந்தார்

பூரணமாகி நிறைந்தார்


தமிழோடு தமிழாகக் கரைந்தார்


அவர் பேச்சின் வேகத்திலேயே

வந்த இடம் நோக்கி விரைந்தார்.

*

ஐயா...

வணங்கி வழியனுப்புகிறோம் உங்கள்

பிசிறில்லாத் தமிழை.


கண்ணீர் விழுங்கிக்

கலங்கி வழியனுப்புகிறோம்

உங்கள் கணீர் குரலை.

*

மேடைத் தமிழே 

நீரோடைத் தமிழே


நினைவில் அழியாமல்

நிறைந்திருப்பீர்கள்

நெடுங்காலம் நீங்கள்.

*

தமிழரங்கு எதுவென்றாலும்

தலைமை நாற்காலியில்

நீங்கள் அமர்ந்த பிறகு 

அந்த நாற்காலி 

பூரண நிலவாய்ப் பொலிந்து நிரம்பும்.


காலி இடம் என்பதைத் துளியும் அதில் காணமுடியாது.


உங்கள் புன்னகை 

மேலும் அதற்கு

ஒளிவட்டம் போடும்.


கைதட்டல் என்னும் பட்டாம்பூச்சி

ஒவ்வொரு கணமும்  உங்களை வட்டம் போடும்.

*

இதிகாசப் பாத்திரங்கள் கூட

இடம்பிடிக்க முண்டியடிப்பார்கள் 

உங்கள் பேச்சைக் கேட்க.


நாற்காலியில் துண்டு போட்டு

வராத பாத்திரங்களுக்குத் தந்தியடிப்பார்கள்

விரைந்து வந்து சேர.

*

அந்த வசந்த காலம்  

இனிக் கடந்த காலம்.


அந்த இனிய நினைவுகள்

இனி இறந்த காலம்.

*

நல்லவேளை 

ஒளிப்பதிவுகளிலேனும்

உங்கள் 

தடையில்லாத் தமிழைக் கேட்கமுடியுமே

என ஆறுதல் கொள்கிறோம் இன்று...


வேறென்ன செய்வது?

காதில்லாக் காலன் முன்

கைபிசைந்து நிற்பது தவிர.

*

பிருந்தா சாரதி

*


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி