நாதன் தாள் வாழ்க *
நாதன் தாள் வாழ்க
*
இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர் அவர்கள்.
அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம் , உழைப்பு இவற்றுக்கு ஈடாக எதைக் கொடுத்தாலும் நிறைவு செய்ய முடியாது. அதை எதிர்பார்த்தும் அவர் உழைக்கவில்லை. தமிழ் மீது கொண்ட ஆர்வம்.... காதல்....
ஒரு காலகட்டத்தின் தேவையை ஒரு மனிதரைக்கொண்டு காலம் நிறைவேற்றிக்கொண்டது. ஒரு பல்கலைக்கழகம் கூட அந்த தனி மனித உழைப்புக்கு ஈடாக பணியாற்றமுடியுமா என்பது சந்தேகமே.
90 பழந்தமிழ் நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து அச்சுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து படித்து ஒப்பிட்டு முறைப்படுத்தி அச்சேற்றி இருக்கிறார்.
அந்தப் பட்டியலை இன்று விக்கிப்பீடியாவில் படித்தபோது மலைப்பு உண்டானது.
அவரது நீண்ட வாழ்க்கையின் சுருக்கமான குறிப்பில் இந்தப் பட்டியல் உள்ளது. இயன்றவர்கள் படித்துப் பாருங்கள்.
(உ.வே.சா. அவர்கள் அச்சு பதித்த நூல்களின் பட்டியல்:
சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4.)
அதனால்தான் மகாகவி பாரதி உ.வே.சா.வை 'மகாமகோபாத்யாயர்' என்று உயரத்தில் வைத்து
'குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி
வாழ்வறியும்
காலமெலாம்
புலவோர் வாயில்
துதியறிவாய்,
அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்குவாயே.'
எனப் போற்றுகிறார்.
தமிழிருக்கும் வரை தமிழ்த் தாத்தாவின் பெயருமிருக்கும்.
மகாகவி வார்த்தையை விடவா மற்றொரு வார்த்தை நாம் கூறமுடியும்?
அவருடைய நினைவு நாள் இன்று .
அவர் பணியாற்றிய கும்பகோணம் கல்லூரியில் நான் படித்தேன்... அந்த வளாகத்தில் நானும் உலவினேன் என்பதை பெருமிதமாக இன்று நினைத்து மகிழ்கிறேன்.
தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதுண்டோ?
நன்றியோடு வணங்குகிறேன் ...
இதை எழுதும் போது நெஞ்சு விம்மிக் கண்ணீர் அரும்பி எழுத்துக்களை மறைக்கிறது.
எழுத்தறிவித்தவரே!
மகா மகா உபாத்தியாயரே!
கண்களைத் துடைத்துக் கொண்டே கைதொழுகிறேன்.
நாதன் தாள் வாழ்க!
*
பிருந்தா சாரதி
Comments