உளுந்து ஊற வைக்காமல், மாவு அரைக்காமல் சுவையான வடை
திடீரென சுடச்சுட வடை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டால் அதனை உடனே செய்து சாப்பிட முடியாது.
ஏனென்றால் எந்த வடையாக இருந்தாலும் அதற்கு கடலைப்பருப்பு அல்லது உளுத்தம்பருப்பை இரண்டிலிருந்து, மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு இதனை அரைத்து, அதனுடன் வெங்காயம், மசாலா சேர்த்து தான் வடை செய்ய முடியும். ஆனால் ஆசைபட்டவ உடனேயே இந்த வடையை சாப்பிட இப்படி வீட்டில் இருக்கும் இட்லி மாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இட்லி மாவு என்ற உடனே அது தோசை ஊற்றுவதற்கு தான் சரியாக இருக்கும், இதில் எப்படி வடை செய்ய முடியும் என்ற சந்தேகம் வரும். இந்த இட்லி மாவுடன் சில பொருட்களை சேர்த்து கலந்து கொண்டால் உடனே வடை மாவு தயாராகிவிடும்
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 5 கரண்டி, கடலை மாவு – 3 ஸ்பூன், ரவை – 2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 200 கிராம்
முதலில் 5 ஸ்பூன் இட்லி மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் 2 ஸ்பூன் ரவை, 3 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து விட வேண்டும். இவை பார்ப்பதற்கு திக்காக இருப்பது போல் தெரியாது. ஆனால் சிறிது நேரம் இவற்றை ஊற வைத்த உடன் மாவு வடை மாவு பதத்திற்கு வந்து விடும்.
பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் வடை செய்வதற்கான மாவு தயாராகிவிட்டது.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன்மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டி எண்ணெயில் சேர்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரத்தில் வடை பொன்னிறமாக மாறியதும் வடையை எண்ணெயில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். புதிதாக வடை செய்பவர்கள் கையினால் வடை தட்டி போட முடியவில்லை என்றால், ஒரு பெரிய வடிகட்டி எடுத்துக் கொண்டு அதனை பின்புறமாக திருப்பி கொள்ள வேண்டும். அதன் மீது கொஞ்சம் கொஞ்சமாக மாவை வைத்து நடுவில் சிறிய ஓட்டை செய்து எண்ணெயில் போட வேண்டும். இவ்வாறு அனைத்து மாவையும் வடை சுட்டு எடுக்க வேண்டும்.
Comments