Monday, April 4, 2022

#ஒரு_சாமான்யனின்_நாட்குறிப்புகள்/கோவில் அனுபவம்

 #ஒரு_சாமான்யனின்_நாட்குறிப்புகள்/கோவில் அனுபவம்
எனது கோவில் அனுபவத்தில் கூறுகிறேன். மக்கள் அதீத அறியாமையில் இருக்கின்றனர். இட்டிலிக்கு தொட்டுக்கொள்ள சட்டினியா சாம்பாரா என்பதற்குக்கூட ஜோதிடம் பார்த்து முடிவெடுப்பார்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது. பலவித பத்துநாள் கோர்ஸ் படித்த ஜோதிடர்களும் பரிகாரமெனும் பெயரில் ஜனங்களைக் கண்டபடி அச்சுறுத்தி வைத்திருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.


"சாமிகிட்ட இருந்து வலதுபக்கம்  பூ விழுந்தா நல்லதா இடதுபக்கம் பூ விழுந்தா நல்லதா?" எனக்கேட்டால் என்ன பதில் சொல்ல. 


"பூ விழுந்தாலே ஆசீர்வாதம்தான்மா போங்க" என்று விடையளித்து நகர்ந்துவிடுகிறேன்.


சரி பகுத்தறிவெனும் பெயரில் கடவுள் மறுப்பைக் கையிலெடுக்கலாமா என்றால், ஏற்கனவே அழுகின்ற குழந்தையிடம், வைத்திருக்கும் பொம்மையையும் பிடுங்குவதன்மூலம் என்ன சாதித்துவிடமுடியுமென கேள்வியெழுகிறது.


எப்படியாகினும் மனிதர்களில் பலருக்கும் பிடிமானமொன்று அவசியமாயிருக்கின்றது. சிலருக்கது போதை சமாச்சாரங்கள். சிலருக்கது கடவுள். இறைநம்பிக்கை என்பதை இருவிதமாகக் காணலாம். அனுபவத்தில் உணர்ந்தால் நம்புவேன் என்பது அசலான பகுத்தறிவு. ஒரு சாரரின் கடவுளை மறுத்து பிறறது கடவுளைக் கண்டுகொள்ளாமலிருப்பது சாமர்த்தியமான போலி பகுத்தறிவு.


இன்னொருவிதம் உள்ளது. நம்புவதன்மூலம் உணர்வது. இதனால் இறைநம்பிக்கை உள்ளோர் யாவருமே நம்புவதால் உணர்கிறார்களென நான் கூறவரவில்லை. ஆயின் நம்பகத்தின்மூலமும் இறையையுணரும் சாத்தியமுள்ளதென்றே எண்ணுகின்றேன்.


எப்படியாகினும் இறைநம்பிக்கை என்பதை வாழ்வின்மீதான நம்பிக்கையாகவே நான் பார்க்கின்றேன். சிலருக்கு அப்படியான புற நம்பகங்களோ விஷயங்களோ அவசியமற்றதாக இருக்கலாம். ஆயின் பெருவாரியான ஜனக்களுக்கு ஏதேனுமொரு பற்றுதல் அத்தியாவசியமாக இருக்கையில், அதற்கான சரியான மாற்று இல்லாமல் அதை விலக்குவது சாத்தியமில்லை என்றே நினைக்கின்றேன்.


அனைவருமே தமது அன்றாடத் தேவைகளுக்காகத்தான் கடவுளை வழிபடுகின்றனரா என்றால் இல்லை. அப்படியாகின் செல்வச்செழிப்பில் திளைக்கும் பலரும் வழிபடுவதன் காரணம் என்னவாக இருக்கும் ? இருப்பவை பறிபோய்விடாதிருப்பதுகுறித்த அச்சமாக இருக்குமா ?


பொதுவாகவே பொருளீட்டலில் அறம்குறித்த குழப்பங்கள் யாவருக்கும் இயல்புதானா அல்லது என்போன்ற சிலருக்கானதா என்று யோசிக்கின்றேன். பொருளீட்டல் என்று வந்தபின் அதுமட்டுமே முதன்மையானதாக எண்ண இயலவில்லை. பொருள்வரும் வழியும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது எனக்கு.


தொழில்முறையில் அர்ச்சகன் என்று ஆனபின் அதுகுறித்த தகுதிகளையும் சரிவர வளர்த்துக்கொண்டு அதன் தன்மைகேற்றபடி என்னை வளைத்துக்கொள்வது எனக்கு எளிதாகவே இருக்கிறது. போலவே எனது தனிப்பட்ட கொள்கைரீதியான அறத்தினையும் கைவிடாது பார்த்துக்கொள்வதிலும் உறுதியாக இருக்கமுடிகிறது.


ஒரு அர்ச்சகனாக கோவிலுக்கு வரும் பக்தர்களது அறியாமையை பயன்படுத்தி பயமுறுத்தி அதைப் பொருளாக்கும் விஷயத்தை அறவே செய்வதில்லை. குடும்பமே வறுமையில் வாடுகிறதென கோவிலில் அழுது முறையிடும் ஒருவனிடம்போய், "ஒரு 5000 ரூவா ரெடிபண்ணு, கணபதிஹோமம் பண்ணு எல்லாம் சரியாயிரும்" என்பதெல்லாம் மிகப்பெரிய அயோக்கியத்தனம் என்றே நம்புகின்றேன்.


போலவே அர்ச்சகன் என்பதாலேயே தன்னைப் பெரிதாகக் காண்பித்துப் பொருளீட்டும் உத்தியினையும் நான் கைக்கொள்ளவில்லை. உள்ளிருக்கும் தெய்வத்தையே பிரதானமாக்கி நானும் உன்னைப்போலத்தான், எனக்கும் பிரார்த்திக்கமட்டுமே இயலும், உனக்காக பிராத்திக்கின்றேன் நீயும் மனதாற பிரார்த்தித்து நம்பிக்கையோடு செல் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். 


ஆயினும் அர்ச்சகனாக இருப்பதும் அப்படியொன்றும் சுலபமாக இல்லை. பத்துவயது குழந்தைக்கு புற்றுநோயென்று கதறியழும் ஐம்பது வயது மனிதரைக் காண்கையில், பத்தாண்டுகளாகக் குழந்தை இல்லையென வெம்பியழும் பெண்களைக் காண்கையிலும்,  உடலும் மனமும் அதிர்ந்துதான் போகிறது. எத்தனை உண்மையாகவும் மனமாறவும்  வேண்டிக்கொண்டும் இறந்துவிட்ட ஒரு ஐந்துவயது சிறுவனின் மரணம் என்னை வெகுவாக அசைத்துவிட்டது. 


இவையெல்லாம் கடந்து, என்னாலானவரை கோவிலுக்கு வருகிற யாவருக்கும் வாழ்வின்மீதான நம்பிக்கையை அளித்தபடியிருக்கின்றேன். ஏனெனில் இக்கணம் வரை இவ்வாழ்வும் மனிதர்களும் எனக்களித்ததும், இன்னமும் என்னிடம் எஞ்சியிருப்பதும் அந்த நம்பிக்கை மட்டும்தான். அதையே எல்லோருக்கும் கொடுத்தபடியிருக்கிறேன். வாழ்வென்பது நம்பிக்கையன்றி வேறல்ல..
#ஒரு_சாமான்யனின்_நாட்குறிப்புகள்

Madhavan Srirangam

No comments:

Featured Post

73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா.

  73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா. தாய்லாந்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், 3-0 என்ற க...