பிரியா வில்லேஜ் ரோடு ஷோ’ஐ பெரிய பிராண்டா மாத்துன அந்த சம்பவம் தெரியுமா
PVR - INOX தான்; ஆனா, PVR-ஐ பெரிய பிராண்டா மாத்துன அந்த சம்பவம் தெரியுமா? - திருப்புமுனை - 5
இந்தியாவில் 9,000 திரையரங்குகள் உள்ளன. (இதில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் பங்கு 1,546 ) ஆனால், அமெரிக்காவில் 40,000 திரையரங்குகளும், சீனாவில் 70,000 திரையரங்குகளும் உள்ளன. இதுபோன்ற பெரிய வளர்ச்சியை அடைய வேண்டும் எனில், பி.வி.ஆர் - ஐநாக்ஸ் இணைவது அவசியம்தான்!
கோவிட் மிகச் சில துறைகளுக்கு ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறது. சில துறைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், சில துறைகளுக்கு மொத்த வருமானத்தையே பூஜ்ஜியமாக மாற்றி இருக்கிறது. அப்படிப்பட்ட துறைதான் தியேட்டர் பிசினஸ். இந்தத் துறையின் பெரிய நிறுவனம் பி.வி.ஆர். மற்றொரு முக்கிய நிறுவனம் ஐநாக்ஸ். இந்த இரு நிறுவனங்களும் இணைந்து பி.வி.ஆர் ஐநாக்ஸ் என மாறி, பொழுதுபோக்குத் துறையில் புதிய திருப்புமுனை உருவாகப் போகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு படம் பார்க்க வேண்டும் எனில், தியேட்டருக்குதான் போயாக வேண்டும். தற்போது நேரடியாக சாட்டிலைட் சானல், ஒ.டி.டி எனப் பல வடிவங்களில் பார்க்கும் பழக்கம் மாறி இருக்கிறது. இந்த நிலையில், மற்ற பிரிவு (ஓ.டி.டி, டிவி) போட்டி போட வேண்டும் எனில், ஒருங்கிணைந்த பெரிய நிறுவனமாக மாற வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம். அதனால் பி.வி.ஆர் - ஐநாக்ஸ் உருவாகி இருக்கிறது.
இந்த பி.வி.ஆர் நிறுவனத்தின் வரலாறு சுவாரஸ்யமானது. அதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்...
பி.வி.ஆர் குழுமத்தின் தலைவர் அஜய் பிஜிலி டெல்லியில் பிறந்தவர். இவரின் அப்பா அமிர்தசரஸ் டிரான்ஸ்போர்ட் (Amritsar) கம்பெனியை நடத்தி வந்தார். தன்னுடைய 22-ம் வயதில் 1988-ம் ஆண்டு குடும்பத் தொழிலுக்கு வந்தார். ஆனால், டிரான்ஸ்போர்ட் பிசினஸ் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அதிலிருந்து வேறு ஏதாவது செய்யலாம் என யோசிக்கவே, குடும்பத்தின் மற்றொரு பிரிவான பிரியா சினிமாஸ் பக்கம் அவரது கவனம் திரும்பியது. ஆனால், போட்டி காரணமாக அவர் குடும்பத்தின் வசம் இருந்த பிரியா தியேட்டர் நிறுவனம் பெரிய அளவில் செயல்படவில்லை. அதனால் தியேட்டர் பிரிவில் மொத்தமாக இறங்கினார்.
இந்த தியேட்டர் இவரின் குடும்பத்துக்குக் கிடைத்ததே ஒரு தற்செயல் நிகழ்வுதான். அஜய் பிஜிலியின் அப்பா டெல்லி பிசினஸ் வட்டாரத்தில் முக்கியமான நபர். சொத்து உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான பஞ்சாயத்துகள் இவருக்கு வரும். அப்படி வந்த சொத்தில் பலவிதமான யோசனைகளைத் தெரிவிக்கிறார் அஜய் பிஜிலியின் அப்பா. ஆனால், அவர் சொன்ன எந்த யோசனையும் பஞ்சாயத்துக்கு வந்த குடும்பத்தின் அனைத்துத் தரப்புக்கும் ஏற்றதாக இல்லை. அதனால் அந்தச் சொத்தை அஜய் பிஜிலியின் அப்பா வாங்கிக்கொண்டு அவர்களுக்குப் பணம் கொடுத்து, பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தார். அந்தச் சொத்துதான் பிரியா சினிமாஸ். 1978-ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த தியேட்டரில் ஒரே நேரத்தில் 1,000 நபர்கள் பார்க்க முடியும்.
அஜய்க்கு ஹாலிவுட் படங்கள் மீது அதிக ஆர்வம் என்பதால், அந்தப் படங்களைத் திரையிட்டார். ஆனால், ஹாலிவுட் படங்களைத் திரையிட வேண்டும் எனில், அதற்கேற்ற சவுண்ட் மற்றும் சூழல் இருக்க வேண்டும் என்பதால், தியேட்டரை சீரமைத்தார். டால்பி சிஸ்டம், தூய்மையான கழிவறை, பணியாளர்களுக்கு யூனிபார்ம், சுத்தமான இடவசதி என அனைத்தையும் மாற்றி அமைத்தார்.
இந்தச் சமயத்தில் 1992-ம் ஆண்டு அஜய் பிஜிலியின் அப்பா காலமானதால், தியேட்டர் மற்றும் டிரான்ஸ்போர்ட் பிசினஸ் இரண்டையும் பார்க்க வேண்டிய சூழல். கடுமையான நெருக்கடியான சூழல். இந்த நிலையில், டிரான்ஸ்போர்ட் பிசினஸில் தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் இழப்பு ஏற்பட்டது. இனி தியேட்டர் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்னும் முடிவெடுத்தார் அஜய்.
அப்போது ஹாலிவுட் டிஸ்ரிபியூட்டர்களுடன் நெருங்கிய தொடர்பு உருவானது. அப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த `வில்லெஜ் ரோடு ஷோ' என்னும் நிறுவனம் இந்தியாவில் தடம்பதிக்க விரும்பும் செய்தி கிடைத்தவுடன் அதற்கான பேச்சு வார்த்தையைத் தொடங்கினார் அஜய். பிரியா சினிமாஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் வில்லேஜ் ரோடு ஷோவுக்கு 40% பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பெயரும் `பிரியா வில்லேஜ் ரோடு ஷோ’ என மாறியது. சுருக்கமாக பி.வி.ஆர்.
சர்வதேச அளவில் இருப்பதைப்போல மல்ட்டிபிளெக்ஸ்களைக் கொண்டு பி.வி.ஆர் திட்டமிட்டது. அதன் தொடர்ச்சியாக 1997-ம் ஆண்டு இந்தியாவின் முதல் மல்ட்டிபிளெக்ஸ் புதுடெல்லியில் நான்கு திரையரங்குகளுடன் உருவானது. ஓர் இடத்தில் நான்கு திரைகள் என்பது அப்போது இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்பதால், மக்கள் தேடிவந்து படம் பார்த்தனர்.
இரு நிறுவனங்களும் சேர்ந்து விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டன. 2001-ம் ஆண்டு மல்ட்டிபிளெக்ஸ்களுக்கு ஐந்து ஆண்டு வரிச்சலுகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
2000-ம் ஆண்டு வரை இந்தியாவில் மால்கள் என்னும் கான்செப்ட் கிடையாது. அந்தச் சமயத்தில், பிரஸ்டீஜ் நிறுவனம் மால்களைக் கட்டமைக்க இருப்பதாவும், அதன் இறுதித் தளத்தில் தியேட்டர்களை அமைக்க முடியுமா என பி.வி.ஆர் நிறுவனத்துக்குக் கோரிக்கை வைத்தது. மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட இருந்த மால்களில் பி.வி.ஆர் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே மற்ற மால்களில் இதர நிறுவனங்கள் தியேட்டர் ஸ்க்ரீன் அமைக்க தொடங்கின. இந்த சமயத்தில், திரையரங்கப் பிரிவுகளில் பெரிய உற்சாகம் இருந்தது.
ஆனால், அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் சர்வதேச அளவிலான விரிவாக்கத்தை நிறுத்தியது மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்து வெளியேற இருப்பதாகவும் வில்லேஜ் ரோடுஷோ விரும்பியது.
வில்லேஜ் ரோடுஷோ வசம் இருக்கும் பங்குகளை வாங்க வேண்டும். அதே சமயம், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட விரிவாக்கப் பணிகளையும் மேற்பார்வை செய்ய வேண்டும் என இரட்டைச் சிக்கலில் அஜய் பிஜிலி மாட்டிக்கொண்டார்.
அப்போது ஐ.சி.ஐ.சி.ஐ வென்ச்சர் பிரிவில் முக்கியமான பொறுப்பில் இருந்த ரேணுகா ராம்நாத், வில்லேஜ் ரோடு ஷோ பங்குகளை வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டார். வில்லேஜ் ரோடுஷோ வெளியேறினாலும் பி.வி.ஆர் என்னும் பெயர் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு பி.வி.ஆர் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியானது.
பி.வி.ஆர் நிறுவனம் தியேட்டர் நடத்தியது. மற்ற தயாரிப்பாளர்களிடம் இருந்து படத்தை வாங்கி வெளியிட்டது. ஆனால், லாபம் சம்பாதிக்க வேண்டும் எனில், சொந்தமாக திரைபடத் தயாரிப்பில் ஏன் இறங்கக் கூடாது என அந்தப் பிரிவில் களம் இறங்கியது பி.வி.ஆர். `தாரே ஜமின் பர்' உள்ளிட்ட சில படங்கள் வெற்றி அடைந்தாலும், இந்தப் பிரிவு மொத்தமாக நஷ்டத்தையே கண்டது.
படத்தைத் திரையிடுவது வேறு, படத்தைத் தயாரிப்பது வேறு என்பது அஜய் பிஜிலி அனுபவபூர்வமாகப் புரிந்துகொண்டார். ஒரு கட்டத்தில் படத் தயாரிப்பில் இருந்து வெளியேறியது பி.வி.ஆர்.
அதிகமான தியேட்டர்களை நிர்வாகம் செய்ததால், முதலிடத்தில் இருந்தது பி.வி.ஆர். ஆனால், படத் தயாரிப்பில் கவனம் செலுத்தியதால், போட்டியைக் கவனிக்கத் தவறியது. ஐநாக்ஸ் நிறுவனம் சி89 மற்றும் பேம் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களை வாங்கி முதல் இடத்துக்கு வந்தது. முதல் இடத்தில் இருந்த பி.வி.ஆர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
மீண்டும் தியேட்டர் ஸ்க்ரீன்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டத்தில் கவனம் செலுத்தியது. 2013-ம் ஆண்டு சினிமேக்ஸ் நிறுவனத்தை வாங்கியது பி.வி.ஆர். அதைத் தொடர்ந்து டி.எல்.எஃப் நிறுவனத்தின் டிடி சினிமாஸ் நிறுவனத்தை பி.வி.ஆர் வாங்கியது. 2018-ம் ஆண்டு சென்னையைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை பி.வி.ஆர் வாங்கியது. இந்தச் சமயத்தில், 1000 திரையரங்குகளைக் கொண்ட நிறுவனமாக பி.வி.ஆர் உருமாறியது. பெரும்பாலான இணைப்புகளுக்கு பிரைவேட் ஈக்விட்டி நிதி பெற்று விரிவாக்கம் செய்யப்பட்டன.
ஐநாக்ஸ் இணைப்பு...
பி.வி.ஆர் திரைப்படத் தயாரிப்பில் கவனம் செலுத்தியபோது வேகம் எடுத்த ஐநாக்ஸ் அதன்பிறகு வளர்ச்சியைக் குறைத்துக் கொண்டது. ஐநாக்ஸ் நிறுவனத்தின் சித்தார்த் ஜெயினும், அஜய் பிஜிலியும் 15 ஆண்டுக்கால நண்பர்கள் என்பதால், இந்த இரு நிறுவனங்களையும் இணைக்கும் வேலை எளிதாக முடிந்திருக்கிறது.
``கோவிட்டுக்கு முன்பாகவே இந்த இரு நிறுவனங்களையும் இணைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வந்தோம். ஆனால், கோவிட் இதை வேகப்படுத்திவிட்டது. இந்தியாவில் 9,000 திரையரங்குகள் உள்ளன. (இதில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் பங்கு 1,546 ) ஆனால், அமெரிக்காவில் 40,000 திரையரங்குகளும், சீனாவில் 70,000 திரையரங்குகளும் உள்ளன. இதுபோன்ற பெரிய வளர்ச்சியை அடைய வேண்டும் எனில், பி.வி.ஆர் - ஐநாக்ஸ் இணைவது அவசியம்தான்.
ஓ.டி.டி காலத்தில் தியேட்டர்களுக்கு எதிர்காலம் இருக்குமா என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கிறது. ஆனால், ஒரு படத்தின் மொத்த வருமானத்தையும் ஓ.டி.டி-யால் கொடுக்க முடியாது. தற்போதைய சூழலில், நஷ்டத்தைத் தவிர்க்க ஓ.டி.டி பக்கம் செல்லலாமே தவிர, தியேட்டர்களை யாரும் புறக்கணிக்க முடியாது. தியேட்டர் மூலம் கிடைக்கும் வருமானம்தான் அதிகம். அதனால் தியேட்டர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதுதான் அஜய் பிஜிலியின் வாதம்.
சிறு பங்கு போது!
பி.வி.ஆர் - ஐநாக்ஸ் என்பது ஒருங்கிணைந்த நிறுவனமாக மாறும். அப்போது பி.வி.ஆர் நிறுவனர்கள் வசம் 10.6% பங்குகளும், ஐநாக்ஸ் நிறுவனர்கள் வசம் 16.6% பங்குகளும் இருக்கும். இந்த இணைப்பினால் அஜய்யின் பங்கு குறைவதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. ``வளர்ச்சி வேண்டும் எனில், பங்குகளை இழந்துதான் ஆக வேண்டும். பலரையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டால்தான் வளர முடியும்’’ என்பது அஜய்யின் கருத்து.
இரு நிறுவனங்களும் ஏற்கெனவே தனித்தனியாக விரிவாக்கப்பணிகளை செய்துவருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் 2,000 திரைகளைக் கொண்ட நிறுவனமாக பி.வி.ஆர் மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
courtesy:https://www.vikatan.com/

Comments