*அம்பேத்கரை ஏன் கொண்டாட வேண்டும்?*

 *அம்பேத்கரை ஏன் கொண்டாட வேண்டும்?* 




பாபாசாகேப் என்று கொண்டாடுகின்றனர். அண்ணல் என்ற அடைமொழியால் விளித்து இன்புறுகிறோம். 'ஏழைகளின் தோழர், ஏகலைவன் பேரர் அவர் தான் அம்பேத்கர்' என்ற நவகவியின் இசைப்பாடல் பல்லவியை உயிராக அனுபவித்துச் சிலிர்ப்புறப் பாடுகிறார் கரிசல் குயில் கிருஷ்ணசாமி. தாம் பிறந்த 130 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் உலகளாவிய அளவில் நினைக்கப்படும் மாமேதை என்று எழுதுகின்றனர்.  சட்ட மேதை மட்டுமா, பொருளாதாரம், நீர் மேலாண்மை, தாவரவியல், தொழிலாளர் உரிமை, பெண்களுக்கான சொத்துரிமை ....என விரிகிறது அவரது பங்களிப்பு என்று அவரைப் பேசும் இந்த வரியில் எங்கேனும் குறிப்பிட்ட சாதிக்கான வரையறுப்போ, சுருக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலோ, சுய சாதிக்கு மட்டுமான முன்னுரிமையோ  தட்டுப்படுகிறதா? 


'சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா: என்று பூரிப்போடு விளிப்பாரே மகாகவி, அங்கே சுடர் விட்டு ஒளி வீசுகிறது அம்பேத்கர் வாழ்க்கையின் உள்ளடக்கம். எது மறுக்கப்பட்டதோ, அதைப் பெறுவதற்காக அல்ல, அது எங்களுக்குமானது என்று நிறுவிப் பேசும் விதத்தில் உரக்க ஒலிக்கிறது அவரது நெஞ்சுரம்.


மனித வாழ்க்கை மிதிபட்டு வீழ அல்ல, மானுடம் உன்னதமான உயரம் தொடத் தான் என்ற கொடியைப் பறக்க விட்டவர் அவர். தம் மீது வாரி இறைக்கப்பட்ட வசைச் சொற்கள் எதையும் பொருட்படுத்தாது எழுந்து நடந்த புத்தரைப் பின் தொடர்ந்து போய் உங்களை அவை பாதிக்கவில்லையா என்று கேட்டோரிடம் அவை எனக்கு உரித்தானவை அல்ல, அங்கேயே புறக்கணித்து விட்டு என் கடமைகளை நோக்கி நடக்கிறேன் என்ற அபாரமான விஷயத்தை அண்மையில் ஒரு சிறுகதையில் வாசித்தது நினைவுக்கு வருகிறது, அம்பேத்கர் புத்தரை நோக்கி ஈர்க்கப் பட்டதில் வியப்பு இல்லை.


மிக எளிய மக்கள் நெஞ்சில் அவர் கடவுள். சாதீய புத்திக்கு அவர் நெஞ்சில் நெருடிக் கொண்டு இருக்கும் முள். எல்லாம் மாறி விட்டது, அதே கொடுமைகளை இப்போது எதற்குப் பேச, சாதியாவது ஒன்றாவது என்று சொல்லத் துணியும் எவரும் தப்பித்துக் கடக்க முடியாத சந்திப்புகள் ஒவ்வொன்றிலும் அவர் சிலையாக நின்று மறிக்கிறார். 


வாசிக்கவும் விவாதிக்கவும் உரையாடவும் மாற்றத்திற்கான கிளர்ச்சி மன நிலைக்குள் பயணிக்கவும் தூண்டிக்  கொண்டே இருக்கிறது ஆர்ப்பாட்டமும் அகந்தையும் அற்ற அமைதி தவழும் அவரது முகம். ஆனால், பார்ப்பவரை உணர்ச்சி பெற உந்திக் கொண்டே இருக்கும் முகம்.

எஸ் வி வேணுகோபாலன்

பகிர்வு

இளங்கோ

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி