“நல்லவர்களின் அமைதி தீயவர்களின் அராஜகத்தை விட அபாயகரமானது.”
கடந்த வாரம்
ஒரு நண்பரை சந்திப்பதற்காக தென்காசியிலிருந்து ராஜபாளையம்வரை சென்று வந்தேன்.
வழியில்தான் சேத்தூர் இருக்கிறது.
சேத்தூரை கடந்த போது சமுத்திரக்கனியின் நினைவு வந்தது.
சமுத்திரக்கனியின் சொந்த ஊர் இந்த சேத்தூர்.
சமுத்திரக்கனி பற்றி எப்போதோ எழுதிய ஒரு பதிவும், அப்போது என் நினைவுக்கு வந்தது.
தொலைக்காட்சி ஒன்றில் சமுத்திரக்கனி :
“ஸ்கூல்ல பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, அப்பா பாக்கெட்டில் இருந்து 130 ரூபாய் திருடிக்கிட்டு சென்னை வந்தவன் நான். முதன் முதலா சென்னையில் மவுண்ட் ரோட்டில வந்து இறங்கிட்டேன். இரவு பத்து மணி. பயம்மா இருந்தது. எனக்கு மெட்ராஸ்ல யாரையுமே தெரியாது. எங்கே போறதுன்னு தெரியாம பிளாட்பார்மில், ஒரு ஓரமா படுத்துக்கிட்டேன்.
அப்போ ஒரு ஏட்டையா வந்தாரு...
நான் சென்னையில வந்து முதல் முதல்ல சந்திச்சது ஒரு காவல் துறை அதிகாரியைத்தான்...
அவர் ரொம்ப நல்லவர்.
என்னைப் பத்தி விசாரிச்சார். அப்புறமா, இந்த ஏரியா சரியில்லை. இங்கே நீ தூங்குனா பாதுகாப்பு இல்லை. ஸ்டேஷனுக்கு வான்னு, அவரோட சைக்கிள்ல ஏறச் சொல்லி மவுண்ட் ரோட் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாரு. ஸ்டேஷன்ல அவரோட சேருக்கு பக்கத்தில ஒரு நியூஸ் பேப்பர விரிச்சு அங்கேயே தூங்க சொன்னாரு. அடுத்த நாள் காலையில அவரே எனக்கு டீ வாங்கிக் கொடுத்து அனுப்பி வச்சாரு.
“கையில காசு வச்சிருக்கியா”ன்னு கேட்டார். வச்சிருக்கேன்னு சொன்னேன். ஒழுங்கா ஊருக்குப் போன்னு சொல்லி அனுப்பினாரு.
நான் சென்னையில சந்திச்ச முதல் மனுஷனே ரொம்ப ரொம்ப நல்லவர்.”
இப்படிச் சொன்ன சமுத்திரக்கனி
தொடர்ந்து சொன்னதுதான் இது:
“நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க .
ஆனா அமைதியா இருக்காங்க .
நல்லவங்களோட அமைதி ரொம்பவே ஆபத்தானது.
இருக்கக் கூடாது அப்படி.
நல்லவங்க எழுந்திருச்சாத்தான்,
கெட்டவங்க அடங்குவாங்க...”
சமுத்திரக்கனி சொன்னதைப் படித்தவுடன், எங்கோ படித்த ஒரு வாசகம் என் நினைவுக்கு வருகி்றது.
“நல்லவர்களின் அமைதி
தீயவர்களின் அராஜகத்தை விட
அபாயகரமானது.”
சமுத்திரக்கனி சொன்னது மறுக்க முடியாத உண்மை.
அதைப் பற்றி நாம் தீவிரமாக சந்திக்க வேண்டிய வேளை இது.
அத்தோடு சமுத்திரக்கனிக்கு, நாம் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய நல்ல நாள் இது..!
இன்று சமுத்திரக்கனி பிறந்தநாள்.
வாழ்த்துகள்..!
John Durai Asir Chelliah
Comments