மணிரத்னத்தின் முதல் படத்துக்கு இசையமைத்த காரணமும் அது தான்



சில்ட்ரன் ஆஃப் ஹெவன் என்ற ஈரானிய மொழி திரைப்படம் 1998 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அந்த படம் சிறந்த படத்திற்கான விருதை டைட்டானிக் படத்திடம் இழந்தது. ஆனாலும் இந்த படம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் மஜித் மஜீதி தற்போது உலகளவில் கொண்டாடப்படும் இயக்குனராக உள்ளார். அவர் இயக்கத்தில் சமீபத்தில் இந்தியாவை மையமாகக் கொண்டு ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

இப்படி உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தை அதிகாரப்பூர்வமாக தமிழில் “அக்கா குருவி” என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். மதுரை முத்து மூவிஸ் மற்றும் ட்ரீம் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகள், தொலைந்து போன தங்களது காலணியை தேடுவதை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தை பெரிதாக மாற்றம் செய்யாமல் அப்படியே தமிழில் மறு ஆக்கம் செய்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. அதில் இளையராஜா பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரது பேச்சில் “சாதாரணமான நாட்களில் நான் உலக சினிமாக்கள் பார்ப்பது வழக்கம், நான் இசையமைக்கும் சினிமாவை பார்ப்பதோடு சரி, மற்ற சினிமாக்களை அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. ஆனால் உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். அப்படி சில்ட் ரன் ஆஃப் ஹெவன் படம் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சிறு ஷூவை வைத்து கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தை ஒரு சின்ன பிரச்சனையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக, இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக தந்துள்ளார்களே என ஆச்சர்யமாக இருந்தது.

தமிழ்நாட்டில் ஏன் இப்படி படங்கள் எடுப்பதில்லை, ஏன் வருவதில்லை என வருத்தமாக இருந்தது. ஒரு கலைஞனுக்கு உயர்வான சிந்தனை தோன்றி அவனை அது தாக்கினால் தான், உயர்வான ஒன்றை உருவாக்க முடியும். இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குநர்களிடம் இல்லை. ஆனால் நம்ம இயக்குநர் சாமி அதே படத்தை, நம்ம ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என நம்ம ஊருக்கு தகுந்தவாறு அந்த கதையை மாற்றி, ஒரிஜினல் படத்தை விட சுவாரஸ்யமாக அருமையாக எடுத்திருக்கிறார்.

நான் இந்த மாதிரி புது இயக்குநர்கள் வர வேண்டும் என்பதும் அவர்கள் படங்களுக்கு இசையமைப்பதற்கும் காரணமும் இது தான். மணிரத்னத்தின் முதல் படத்துக்கு இசையமைத்த காரணமும் அது தான். நல்ல படைப்புகள் வர வேண்டும். இந்தப்படங்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும் இது மாதிரி படங்கள் ஜெயிக்க வேண்டும். மக்களின் ரசனை வளர வேண்டும் இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி.” எனக் கூறியுள்ளார்






Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி