Friday, April 29, 2022

பாவேந்தர்" பாரதிதாசன்

 பாவேந்தர்" பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அம் மாமனிதனை நினைவு கொள்வோம்.
" தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"


 என்று தேன்சுவை சொட்டும், வைர வரிகளை எழுதியவர்

 பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.


 இவர் 1891 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள் புதுவையில் பிறந்தார், இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் இருந்ததால், பிரெஞ்சு பள்ளியிலே ஆரம்பக் கல்வி பயின்றார். 


தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், தமிழ் இலக்கணம்,  இலக்கியம் மற்றும் சைவ சித்தாந்த வேதங்களை முறையாக கற்றுத் தேறினார். 


 தனது 16வது வயதில், புதுவை கல்லூரியில் தமிழ் படித்தவர், பின்னர் காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனார். 


 தனது மானசீக குருவாக, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை ஏற்றுக்கொண்டதால் அதன் அன்பு அடையாளமாக, தனது பெயரை பாரதிதாசன் என  மாற்றிக் கொண்டார். 


 தமிழ் மொழிக்கு அருந்தொண்டாற்றி கவிதை, கட்டுரைகளை எழுதுவதில்  தனித் திறமை பெற்றுத் திகழ்ந்தார். 


 தனது இளம் வயதில், காங்கிரஸ் தொண்டராகவும் இருந்து, கதர் துணிகளை தோளில் சுமந்து தெருத்தெருவாக விற்றார்.


 தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை களால் ஈர்க்கப்பட்டு புரட்சிகரமான பாடல்களை இயற்ற ஆரம்பித்தார். தன்மான இயக்கத்தின் சிறந்த "பாவலர்" என பெரியார் அவர்களால் பாராட்டப் பெற்றும்,  அறிஞர் அண்ணா அவர்களால் புரட்சிக் கவிஞர் எனப் பாராட்டையும் பெற்றார்


 "புதியதோர் உலகம் செய்வோம் "


 "சங்கே முழங்கு சங்கே முழங்கு எங்கள் வாழ்வும் வளமும் மங்காத புகழ் என்று சங்கே முழங்கு"


 என்ற பாடல்களை எழுதி  , மக்களின் மனதில் இடம்பிடித்தார்.


 சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மறைய புரட்சி ஒன்றுதான் வழி என்றார். நம் குரல் ஓங்கி ஒலித்தால்- முழங்கினார் முதலாளிகளின் ஆணவம் குறையும். ஏற்றத்தாழ்வு மறையும் என்பது இவர் கூற்று. அதற்கென ஒரு பாடல் எழுதினார். ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால் ஓர் நொடியில் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ


 சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு மறைய புரட்சி ஒன்றுதான் வழி என்று கவி எழுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.


 பாரதிதாசன் அவர்கள். அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, பெண்ணின் விடுதலை, முல்லைக் காடு, என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்


 இவரது பிசிராந்தையார் நாடகம் இலக்கிய உலகில் சாகித்திய அகாடமி பெற்றது

  

1954 ல் புதுவை யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.


 தமிழ் கவிதை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்து ஏராளமான தமிழ் கவிஞர்களை உருவாக்கினார்.


 தம் வாழ்நாள் முழுவதும், தமிழ் மொழிக்கு தொண்டாற்றி, தேச விடுதலைக்காக சிறை சென்றும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வழியில்  

 பாவேந்தர் பாரதிதாசனார், அவர்கள் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு,  என்றென்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துவருகிறார்.


 முருக. சண்முகம்

 சென்னை 86


No comments:

Featured Post

பன்னாட்டு பல்லுயிர் பெருக்க தினம்

  பன்னாட்டு பல்லுயிர் பெருக்க தினம் மனிதர்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசி...