நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் பாடுவேன் உனக்காகவே...

 சற்று முன் இளையராஜா தானே பாடிய ஒரு ஆடியோ வெளியிட்டிருக்கிறார். அது நறுக்கென்று எடிட் செய்யப்பட்ட Loop Cut. 



”நான் உனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

பாடுவேன் உனக்காகவே...!


இந்த நாள் நன்னாள் என்று பாடு

என்னதான் இன்னும் உண்டு கூறு!”


சஞ்சலத்தில் இருக்கிறார் என நினைக்கிறேன். தனக்கும், பலகோடி இரசிகர்களுக்கும் இடையே இருந்த பந்தம் சோதனைக்குள்ளாகியிருப்பதை அவர் உணர்ந்திருக்கிறார் எனத் தோன்றுகிறது.


தளபதி படத்தில் வரும் ”சுந்தரி கண்ணால் ஒரு சேதி” பாடலின் மெட்டைத் தேர்ந்தெடுத்து அதில் மேலே உள்ள வரிகளைப் பாடி, இரசிகர்களுடன் உரையாட முயற்சித்திருக்கிறார். இதைக் கேட்டால் அவரை உயிராக நினைப்பவர்கள் நிச்சயம் கலங்கித்தான் போவார்கள்.


இரகுமானின் வீச்சு மிக மிக அகலமானது, உலகின் பல எல்லைகளில் வசிக்கும் தமிழ் மனங்களை தொட்டிருக்கிறது. ஆனால் இளையராஜாவின் வீச்சு மிக மிக ஆழமானது. தமிழ் மண்ணின் உயிர்வரை ஊடுருவியிருக்கிறது. அதற்கு ஈடு இணையே இல்லை.


வேர்கள் போலவும், விழுதுகள் போலவும் தன்னைப் பற்றியிருக்கும் இரசிகர்களில் சிலர் தன்னை இந்த அளவுக்கு ஏசவும், தூற்றவும் கூடிய ஒரு நிலை வரும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.


ஆனால் பாழாய்ப் போன ஈரமில்லாத அரசியல், அவருக்காக இத்தனை கோடி மக்களிலிருந்தும், அவரை தனியனாக ஆதரவற்றவனாக கலங்க வைத்திருக்கிறது.


இதிலிருந்து அவர் மீண்டும் ஸ்வரங்களை மீட்டுவரா? அல்லது அரசியல் புழுதிக்குள்ளேயே சிக்கிக் கொள்வாரா என்பது பிரபஞ்ச இரகசியம்.


இது வரை அவரது ஆர்மோனியம் கலங்கிய இதயங்கள் கலக்கத்திலிருந்து விடுபட பாடியது. இன்று அவரது இதயத்தையே கலக்கத்திலிருந்து விடுபட பாடியிருக்கிறது.


எது எப்படியோ? அவரது ஆர்மோனியம் தொடர்ந்து இசைக்க வேண்டும். அதிலிருந்து யாருக்காகவும், எதற்காகவும் பிரச்சாரம் செய்யாத பாடல்கள் பிறக்க வேண்டும். 


”நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்...”

சில நடிகர்களின் அரசியல் ஆசைக்காக தனது இசைத்திறமையை வாடகைக்கு கொடுத்தாலும், தன்னையும், தன் இசையையும் அடகு வைத்துவிடாத எம்.எஸ்.வியின் பாணி ஒன்று உண்டு.


அவரை குருவாக நினைக்கும் இளையராஜாவும் அதைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.


”மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்”


தற்போது இளையராஜா இந்தப் பாடலைக் கேட்டால், இசைதான் தனது சுயம் என்பதை உணர்ந்து நல்ல முடிவெடுப்பார்.#Ilayaraja



ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,