தமிழ் ஹைகூ நூற்றாண்டு நிறைவு விழா - கும்பகோணம் - நினைவில் மறையாத நிகழ்வு.

 தமிழ் ஹைகூ நூற்றாண்டு நிறைவு விழா - கும்பகோணம் - நினைவில் மறையாத நிகழ்வு.

*
பேராசிரியர் இராம. குருநாதன் அவர்கள் கும்பகோணம் சிவகுருநாதன் நூலகத்தில் ஏற்பாடு செய்த ஹைக்கூ நூற்றாண்டு விழா 2018 ஏப்ரல் 8- ஆம் தேதி நடைபெற்றது.

கவிஞர் #ஈரோடு_தமிழன்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராக் கலந்துகொண்டு மிகச் சிறந்த ஒரு தலைமை உரையாற்றினார்.
சாகித்திய அகாதமி செயல் அலுவலர் இளங்கோவன், #பேசும்_புதிய_சக்தி கவிதா ஜெயகாந்தன், பேராசிரியர் சங்கர நாராயணன் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஒரு திருவிழாவுக்கு வருவதுபோல் ஹைக்கூ கவிஞர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது.
அன்று நூலகம் இருக்கும் தெருவே ஒரு திருவிழாக்கோலம் கண்டது. கோவில் நகரமான கும்பகோணத்தில் அன்று ஓர் இலக்கியத் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான கவிஞர்கள் ஹைகூ கவிதைகளை வாசித்தனர்.
எத்தனைக் கவிஞர்கள்? எத்தனைப் பார்வை?
என் கல்லூரிக் கால நண்பர் கவிஞர் ஆடலரசன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்களின் நூல்கள் நிகழ்வில் வெளியிடப்பட்டன. அவற்றில் என் 'மீன்கள் உறங்கும் குளம்' நூலும் ஒன்று.
அந்நூல் தயாரானதும் உடனடியாக நான் வசனகர்த்தாவாகப் 'சண்டைக்கோழி-2' படப்பிடிப்பு இடைவேளையில் வெளியிடப்பட்டது.
அப்போது இயக்குனர் லிங்குசாமி வெளியிட நடிகர் விஷால் பெற்றுக்கொண்டார். ஆகவே இந்த நிகழ்ச்சியில் முறையான ஒரு வெளியீடாக கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் கரங்களால் மீண்டும் வெளியிடப்பட்டது. ஏராளமான ஹைக்கூ நூல்களுக்கு அணிந்துரைகளும், 'ஜப்பானியக் கவிதையும் தமிழ் கவிதையும்' எனும் தலைப்பில் கட்டுரைகளும் நூல்களும் எழுதிய பேராசிரியர் இராம குருநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நிறைவாகக் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஒருமணிநேரம் ஹைக்கூ இலக்கணம், அதன் வரலாறு, தத்துவம் இவற்றைச் சார்ந்து உலகளாவிய ஹைக்கூக்கள் சிலவற்றை மேற்கோள்காட்டி தலைமை உரையாற்றினார்.
ஜப்பானிய ஹைக்கூ முன்னோடிகள், பிற மொழிகளில் எழுதப்படும் ஹைக்கூக்கள், தமிழில் ஹைக்கூவை தொடங்கிவைத்த பாரதி என்று அவர் பேசியபோது அந்த ஒருமணிநேரமும் ஒரு கவிப்பேரருவியை என் காதுகளால் கண்டேன்.
உரையின் இடையே,
'நதியில் மிதந்து செல்கிறது
பழுத்த இலை
நிறைவான பயணம் '
என்ற கவிதையை அவர் விரித்துரைத்துப் பேசியது என் வாழ்நாள் பேறு.
பழுத்து உதிரும் இலையின் பயணம் மட்டும் அல்ல , அது மிதந்து செல்லும் நதியும் கூட ஒரு நிறைவான பயணத்தை நோக்கியே செல்கிறது என்றும் அவர் கூறி முடித்தபோது உண்மையிலேயே எனக்குப் புல்லரித்தது. ஏனென்றால் நான் இலையின் பயணத்தைக் குறித்தே கவிதை எழுதியதாக நினைத்திருந்தேன். ஆனால் அக்கவிதை நதியின் பயணத்தையும் குறிக்கிறது என்று அவர் கூறியது நான் எண்ணாத ஒரு பொருள்.


அது என் சிறப்பல்ல... ஹைக்கூவின் சிறப்பு. வாசிப்பவர்களின் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப அதன் பொருள் விரிவடையும்.
நிகழ்ச்சி நிறைந்த பின்பும் அங்கிருந்து விடைபெற இயலாமல் நூலக வாசலிலேயே நெடுநேரம் கால் கடுக்க நின்று பேசிக்கொண்டிருந்தோம்.
நினைவில் நீங்காத அற்புதமான நிகழ்ச்சி.

*
பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி