தலைவணங்குகிறோம் உதயணன்... உங்கள் சாதனைப் பயணம் தொடரட்டும்.

 




கல்கி, சாண்டில்யன் போல் சரித்திரக் கதை எழுத்தாளராக வேண்டும் என விரும்புகிறீர்கள். கதை ஒன்றை எழுதி வெகுஜன பத்திரிகைக்கு கொடுக்கிறீர்கள். ஒரு மாதம் கழித்து அப்பத்திரிகைக்கு சென்று கேட்டபோது, ‘குப்பையில் உன் கதை இருக்கிறது... எடுத்துச் செல்...’ என்கிறார் பொறுப்பாசிரியர்.

இந்த அவமானத்தை எப்படி எதிர்கொள்வீர்கள்..? நமக்கு எழுதவே வரவில்லை போல... என்றா அல்லது எழுத்தாளராகி சாதித்து காட்டுவேன் என்றா..?
சாதித்து காட்டுவேன் என்றால்... எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது ஆண்டுகள் வைராக்கியத்துடன் இதற்காக உழைப்பீர்கள்..?
சரி. உழைக்கத் தயார் என வரலாற்று ஆதாரங்களைத் தேடித் தேடி குறிப்பெடுத்து தொடர்ந்து எழுதுகிறீர்கள். ஆனால், பிரசுரிக்க ஆளில்லை. வெகுஜன பத்திரிகைகளின் கதவுகள் உங்களைப் பார்த்ததும் மூடுகின்றன. நேரடியாக கொண்டு வரலாம் என முயற்சித்தால் பதிப்பகங்கள் ஆயிரம் கண்டிஷன்ஸ் போடுகின்றன.
என்ன செய்வீர்கள்..?
கடன் வாங்கி அல்லது நகை(களை)யை அடகு வைத்து சொந்த பதிப்பகம் தொடங்குவீர்கள். ரைட். அச்சிட்ட நூல்களை எப்படி விற்பனை செய்வீர்கள்..?
வீட்டின் பரண் முழுக்க விற்பனையாகாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உங்கள் படைப்பைப் பார்க்கப் பார்க்க உங்களுக்கு என்ன தோன்றும்..?
உறவினர்களும் நண்பர்களும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் கணம்தோறும் உங்களைப் புழுவைப் போல் காணும்போது எப்படி உணர்வீர்கள்..?
இதன் பிறகும் தொடர்ந்து எழுதுவீர்களா அல்லது முடங்குவீர்களா..?
உங்கள் பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
அதற்கு முன் நாளை (20-11-2020) வெளிவரும் 27-11-2020 தேதியிட்ட ‘குங்குமம்’ வார இதழில் வெளிவரும் உதயணனின் தன் வரலாற்றை ‘நான்’ சீரிஸில் படித்துவிடுங்கள்.
1970களில் தமிழ் வெகுஜன பத்திரிகை ஒன்றின் பொறுப்பாசிரியரால் அவமானப்படுத்தப்பட்ட காஞ்சி நரசிம்மன் Kanchi Narasimhan என்கிற உதயணன், அதன் பிறகு எந்த வெகுஜன இதழுக்கும் தன் படைப்பை அனுப்பவில்லை.
மாறாக தொடர்ந்து எழுதினார்; எழுதுகிறார்; எழுதுவார். இதுவரை 44 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். எல்லாமே எந்தப் பத்திரிகையிலும் தொடராக வெளிவராதவை. நேரடியாக நூல் வடிவம் பெறுபவை.
இந்த 44ல் - முப்பது, சரித்திர நாவல்கள். 25க்கும் மேற்பட்ட வரலாற்று புதினங்கள் குறைந்தது ஆயிரம் பக்கங்கள் கொண்டவை.
எல்லா படைப்புகளும் பல பதிப்புகள் காண்கின்றன. ஹாட் சேல் ரைட்டர். இன்றைய சரித்திர நாவல்களின் சூப்பர் ஸ்டார் சந்தேகமே இல்லாமல் இவர்தான். முன்வெளியீட்டு திட்டத்திலேயே மடமடவென புக் ஆகும் புக்ஸ் இவருடையவை.
ஆனால், முகநூலில் மட்டுமல்ல... பத்திரிகைகளிலும் - நாளிதழ்களிலும் இவரது நாவல்கள் குறித்த விமர்சனம் - அட வரப்பெற்றோம் பகுதியில் கூட - வெளிவந்ததில்லை.
என்றாலும் தனிப்பட்ட வாசகர்களின் பிரியத்துக்குரிய எழுத்தாளர். லெண்டிங் லைப்ரரியின் குபேரன். சென்னையில் மட்டுமல்ல. தமிழகம் முழுக்கவும்; கடல் கடந்தும்.
கொரோனா பொது ஊரடங்குக்கு முன் ‘பள்ளிகொண்ட பெருமாள்’, ‘மன்னன் மகன்’ என தலா இரு பாகங்கள் கொண்ட வரலாற்று நாவல்களை எழுதியவர், கொரோனா பொது ஊரடங்கு காலமான ஆகஸ்ட் மாதம் ‘கடல் நிலா’ என்கிற 2 பாகங்கள் கொண்ட சரித்திர நாவலை கொண்டு வந்தார். இதோ அடுத்த மாதம் - டிசம்பர் இறுதியில் - உதயணனின் புதிய சரித்திர நாவல் - இதுவும் ஆயிரம் பக்கங்கள்தான் - வெளிவருகிறது! 2021 மே - ஜூன் மாதத்தில் அடுத்த ஆயிரம் பக்க வரலாற்று நாவலுக்கான கள ஆய்வில் இப்பொழுது இறங்கியிருக்கிறார்!
உதயணனின் வயது அதிகமில்லை... ஜஸ்ட் 68தான்!
இந்த நொடி வரை பேனாவால்தான் எழுதுகிறார் - அடித்தல் திருத்தல் இல்லாமல்!
1970களில் வெகுஜன தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றினால் அவமானப்படுத்தப்பட்டவரின் விஸ்வரூப வெற்றிக் கதை -
2020ல் ‘குங்குமம்’ என்ற தமிழ் வெகுஜன வார இதழில் பிரசுரமாகிறது!
இடைப்பட்ட 40 + ஆண்டுகள் என்பது காலம் மட்டுமல்ல... உதயணன் என்ற எழுத்தாளரின் வைரம் பாய்ந்த வைராக்கியத்தின் - நெஞ்சுறுதியின் - தொடர் போராட்டத்தின் - நீளமும் அகலமும் ஆழமும்தான்.
தலைவணங்குகிறோம் உதயணன்... உங்கள் சாதனைப் பயணம் தொடரட்டும்...
❤ ❤ ❤
உதயணனின் தன் வரலாற்றின் Opening layout - சில் அவுட் புகைப்படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என விஷூவலைஸ் செய்து போட்டோ எடுத்த எங்கள் குழுமத்தின் ஒளி ஓவியரான ஆ.வின்சென்ட் பாலுக்கும் Vincent Paul -
கொடுக்கப்பட்ட 8 பக்கங்களுக்குள் வீரியம் குறையாமல் உதயணனின் வாழ்க்கையை எழுதிய ஷாலினி நியூட்டனுக்கும் Shalini Shalu -
என்றும் அன்பு ❤ ❤ ❤
உதயணனின் அனைத்து படைப்புகளும் கெளரா பதிப்பகத்தில் கிடைக்கின்றன. தொடர்புக்கு +91 97907 06549
கே.என். சிவராமன் முகநூல் பதிவில்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி