இளையராஜா இசையில் வைரமுத்து

 வைரமுத்து


பாரதிராஜா இயக்கி இளையராஜா இசையமைத்த நிழல்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார் வைரமுத்து. எண்பதுகளில் தமிழ்த் திரைப்பாடலின் நகர்திசை மாற்றங்களில் முக்கியமான விளைதலாக இரண்டு சரணங்களுடன் பெரும்பாலும் முற்றுகிற பாடலின் அமைப்பைச் சொல்ல முடியும். அந்த நேரத்தில் ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் தன் தனித்துவமிக்கப் பாடல் வரிகளால் தனியே ஒளிரத்தொடங்கியவர் வைரமுத்து. ஸ்ரீதரின் நினைவெல்லாம் நித்யா, நிழல் தேடும் நெஞ்சங்கள், கவிதாலயா தயாரித்த புதுக்கவிதை, பாரதிராஜாவின் காதல் ஓவியம், ரவிசங்கர் இயக்கத்தில் ஈரவிழிக் காவியங்கள், பேராசிரியர் பிரகாசத்தின் ஆயிரம் நிலவே வா, ராஜசேகர் இயக்கத்தில் மலையூர் மம்பட்டியான், மேஜர் சுந்தரராஜன் உருவாக்கிய இன்று நீ நாளை நான் என வைரமுத்துவைத் தன் பல படங்களில் தொடர்ந்து பாடல்களை எழுதச் செய்தார் இளையராஜா. கவித்துவம் மிகுந்த வரிகள், தனியே ஒளிர்ந்த சொல்முறை, புத்தம் புதிய சிந்தனை, காதலின் பாடல்களுக்குள் பலவித சேதி சொல்லக்கூடிய கவி முனைப்பு ஆகியவை வைரமுத்தின் பாடல்களில் இயல்பாக அமைந்தன.
இளையராஜா இசையில் வைரமுத்து மொத்தம் 130 படங்கள் வரை பணியாற்றியிருக்க முடியும். அவற்றில் 300 பாடல்கள் வரை அவர் எழுதியிருக்கக்கூடும். மொத்தம் 16 படங்களில் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. எண்பதுகளின் பேரொளிப் பாடல் கூட்டு இளையராஜா வைரமுத்து இருவர் இணை.
இளமைக் காலங்கள், கொக்கரக்கோ, மண் வாசனை, ஒரு ஓடை நதியாகிறது, எனக்குள் ஒருவன், கைராசிக்காரன், புன்னகை மன்னன், சிந்துபைரவி, நல்லவனுக்கு நல்லவன், நீங்கள் கேட்டவை, பூவிலங்கு, உன்னை நான் சந்தித்தேன், வாழ்க்கை, உயர்ந்த உள்ளம், உன் கண்ணில் நீர் வழிந்தால், பூவே பூச்சூடவா, தென்றலே என்னைத் தொடு, பிள்ளை நிலா, ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, ஜப்பானில் கல்யாணராமன், அந்த ஒரு நிமிடம், ராஜபார்வை, கீதாஞ்சலி, விக்ரம், உனக்காகவே வாழ்கிறேன், தாய்க்கு ஒரு தாலாட்டு, நட்பு போன்ற படங்களில் வைரமுத்து பாடல்கள் முழுவதையுமோ அல்லது பெருவாரிப் படல்களையோ எழுத முடிந்தது. பேசப்பட்ட எண்பதுகளின் பாடல்கள் பலவற்றை வைரமுத்து எழுதினார். நேரடித் தமிழ்ப் படங்கள் போலவே தெலுங்கில் இருந்து தமிழ்ப்படுத்தப்பட்ட சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சலங்கையில் ஒரு சங்கீதம், மர்ம மனிதன், காதல் ஓய்வதில்லை, பாடும் பறவைகள் போன்ற படங்களிலும் காலத்தால் மறக்கடிக்க முடியாத பல பாடல்கள் இடம்பெற்றன.
பாடலின் துவக்க வரிக்கு பெரும்பாலும் மெனக்கெடுவது பாடல் உருவாக்கத்தின் இயல்பு. பாடலின் ஆரம்பம் என்பது பாடலுக்கான வரவழைப்பு. பன்னீர் தெளித்து பூ கொடுத்து வரவழைப்பதைப் போலவே சட்டென்று கன்னம் கிள்ளி தோள் பற்றி இழுத்து பாடலுக்குள் நுழைப்பதும் நடந்தேறும். “என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்” என்று ஒரு ஆவேசப் பாடல் தொடங்கும். “அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே” என்று ஒரு அணுக்கப் பாடல் நீவும். “சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்” என்று அடுத்தது அட்டகாசம் புரியும். “தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ” என்று ஏகாந்தத்தில் எதிர்வாதிடும். “அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது” என்று காதல் பேசும். இதெல்லாம் பாடலின் அமைப்பு. அப்படித்தான் பாடல் என்றால் முதல் வரி முகவரி பகிரும் முத்தான வரியாக இருக்கும். ஆனால் வைரமுத்து எழுதிய பாடல்களில் கவனம் திருப்பும் இன்னும் ஒரு அல்லது சில அல்லது பல அபாரமான வரிகள் அமைந்தது தற்செயலல்ல. “மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டித் தேரு” என்று எழுதும்போது அயர்த்திவிடுகிறதல்லவா? “மீதியை நான் உரைப்பதும் நீ இரசிப்பதும் பண்பாடு இல்லை” என்றெழுதுவது சுலபமா என்ன..?
எண்பதுகளின் காலகட்டம் ஸ்டீரியோஃபோனிக் இசையும் பிரிந்தொலிக்கும் ஆடியோ சிஸ்டங்களின் பேரொலிப் பரவலும் முந்தைய காலத்தில் சாத்தியமற்ற வேறொரு துல்லியத்துடனான பாடல் கேட்பு அனுபவத்தைச் சாத்தியம் செய்துகொடுத்தன. ரேடியோ என்பதைத் தாண்டியும் பாடல்கள் கேட்பதற்கான சந்தர்ப்பங்கள் பெரிதாய் வளர்ந்ததும் அப்போதுதான். அந்தக் காலத்தின் ராஜபாட்டையில் இளையராஜா முதலிடத்தில் நடைபோட்டார். அவர் உருக்கொடுத்த பாடல்கள் காற்றை ஆண்டன. வைரமுத்தும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் தமிழ் சினிமாவின் ஜரிகைக் கனாக்கள். இன்றும் வென்றொலிக்கும் சந்தோஷக் கூட்டொன்றின் சங்கீத சாட்சியங்கள். “பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்” என்று குழைகையில், “பாடி வா தென்றலே” என்று உருகுகையில், “சிரிச்சா கொல்லிமலைக் குயிலு” என்று மந்திரம் பகிர்கையில், “ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்” எனத் தூறுகையில், “வாலிபமே வா வா” என்று உற்சாகம் பொங்குகையில், “தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்” என்று ஆரவாரம் செய்கையில், “நான் பாடும் மௌன ராகம்” என்று வீழ்கையில் எல்லாம் ரசிகன் ராஜாவின் இசையாலும் வைரமுத்தின் வரிகளாலும் கிறங்கிக் கண் கசிந்தான். ஆறாண்டு காலம் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்களில் பெரும்பாலானவை ஹிட் பாடல்களே. காதலின் புத்தம் புதுத்தன்மை குன்றாத பல பாடல்களை, எண்பதுகளின் இறவா கானங்களை, இளையராஜா இசையமைப்பில் வைரமுத்து எழுத்தில் திளைத்து இரசிக்கிற பெருங்கூட்டம் இன்றும் உண்டு. ஒரு உதாரணப் பாடலை இங்கே நோக்கலாம்.
“ஒரு ஜீவன் அழைத்தது” என்று தொடங்கும் கீதாஞ்சலி படப்பாடல், இளையராஜா இசைத்து தன் குரலில் பாடிய பாடல்களில் இன்றும் காற்றை ஆளும் தாக நேரத் தேன் மழை.
முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாய்
நீயில்லை என்றால் என் வானில் என்றும்
பகலென்று ஒன்று கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிரிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்த நாள்
என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இளையராஜா வைரமுத்து இணை அளவுக்குக் காதல் பாடல்களை நெய்தவர்கள் இல்லை என்று வழக்காடித் தீர்ப்பெழுதுகிற எண்பதுகளின் இசை இரசிகர்கள் பெருமதம் ஒன்றின் உப-மதம் ஒன்றாகவே தொடர்ந்து நிகழ்ந்து தொடர்கிறது.
- ஆத்மார்த்தி
நன்றி: தமிழினி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,