தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்

 தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் நினைவு நாள்

*எத்தனை அரங்குகளில் சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் உரையைக் கேட்டிருக்கிறேன்!
தங்குதடையற்ற அடைமழை போல் அசராமல் பல மணிநேரம் உரையாற்றுவார் . அமைதியான அழுத்தமான குரல்.
தமிழின் தொன்மை இலக்கியங்களிலிருந்து அண்மைக்காலப் புதுக்கவிதை வரை அவரது பேச்சில் சரளமாகப் பாய்ந்துவரும்.
இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கியதின்
வரலாறும் அதன் செழுமையான கவிதைகளும்
அவரது பேச்சின் ஊடே அனாயசமாக விளையாடும்.
மனதில் ஒரு மென்பொருள் நூலகத்தையே வைத்திருந்தார்.
சிலப்பதிகாரத்தின் மீது காதல் கொண்டதால் அப்பெயரில் அழைக்கப்பட்டாலும் சங்க இலக்கியம், பிற காவியங்கள், திருக்குறள், நீதி இலக்கியங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள் , வள்ளலார், பாரதி, பாரதிதாசன் என விரிந்த இலக்கியப் புலமை கொண்டவர்.
இக்கால இலக்கியவாதிகளுடன் அவரளவு தொடர்புடைய அறிஞர்கள் குறைவே. அணிந்துரை வழங்குவதில் அவர் போல் அக்கறை கொண்டவர்களும் இனி காண்பதரிது. தனிநூல் காணும் அளவு வழங்கியிருக்கிறார்.
நூற்றுக்கணக்கான மேற்கோள்கள் பொங்கிப் பிரவாகமெடுத்து வரும் அவருடைய உரையில். உரையாசியர்களை மேற்கோளுக்கு நினைவிலிருந்தே அழைப்பார்.
ஒருமுறை ஒரு விழாவிற்கு யாரோ தாமதமாக வர இடையில் அந்த நேரத்தை நிரப்புவதற்காக சிலம்பொலியார் பேசுவார் என்று அறிவித்தார்கள். அதில் கூட சிக்ஸர் அடித்தார்.
அரங்கினரின் மனநிலையை அறிந்து பேசும் உரை வல்லுனர் சிலம்பொலியார். அதே சமயத்தில் ஆழமான உரையாகவும் இருக்கும்.
அவருடைய சங்கத் தமிழ் உரைநூல்கள் மற்றும் அவருடைய அணிந்துரைத் தொகுப்புகள் பல வெளிவந்துள்ளன.
உலகத் தமிழ் மாநாட்டு மலர்களைத் தயாரித்தவர்.
கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர்
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ,
தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர்
எனப் பல உயர் பதவிகளை அடைந்து அவற்றிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
தூய்மையானவர்.
தாய்மையானவர்.
அறிஞர்களின் எண்ணிக்கை அருகிவரும் காலமிது.
இப்படி ஒரு பெரும் அறிஞரைத் தமிழ் இழந்துவிட்டது பெரும் சோகம். ஆனாலும் அவருடைய உழைப்பின் காரணமாக அவருடைய அறிவுச்செல்வம் ஏராளமான நூல்களில் பதிவாகியுள்ளது ஓரளவு ஆறுதல்.
கவிதை உறவு ஆண்டு விழா ஒன்றில் எனது 'மீன்கள் உறங்கும் குளம்' ஹைக்கூ நூல் பரிசு பெற்றபோது அந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அவருக்கு அந்நூலின் ஒரு படியை அளித்தேன்.
அந்த அறிஞரைப் போற்றி வணங்கும் வாய்ப்பைப் அவரது அவர்களின் 94-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை கவிக்கோ அரங்கில் 24.09.21 மாலை கொண்டாடப்பட்டபோது அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன்.அண்ணன் கவிஞர் அறிவுமதி அவர்கள் நினைவுச் சொற்பொழிவு ஆற்றினார்.
அரசியல் , இலக்கியம், கல்வி முதலான பல்துறையினரும் வருகைபுரிந்திருந்தனர்.
விழாவில் கலந்து கொண்டு அந்த மாபெரும் அறிஞருக்கு நானும் அஞ்சலி செலுத்தினேன்.
இன்று அவரது நினைவு நாள். தமிழாக வாழ்ந்தவர். தமிழுக்காக வாழ்ந்தவர். தமிழோடு
நிலைபெற்ற அவர் நினைவில் நானும் சில நிமிடங்கள் நீந்துகிறேன்.
*
பிருந்தா சாரதி

*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,