`உலகத்துல உள்ள மதுவையெல்லாம் குடிச்சே ஒழிச்சிடணும்னுதான்

 


சென்னை எல்லீஸ் சாலை அருகாக ஓர் உடுப்பி ஹோட்டல். மதிய நேரம் நானும் நா.பா. வும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உரிமையுடன் எதிரே வந்து உட்கார்ந்து கொண்டார் அவர். மனமெல்லாம் மகிழ்ச்சி பூக்க நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்பும் கனிவும் சொந்தமும் உரிமையுமாக எங்களைப் பார்த்தார் அவர். கண்ணதாசன்போல் அன்பு மயமாகப் பிறரைப் பார்க்க மிகச் சிலரால் தான் முடியும்.
புகழ்க் கிரீடங்களைத் தலையில் சுமந்து கர்வத்துடன் திரிந்தவர் அல்ல அவர். அவற்றைக் காலடியில் போட்டு மிதித்து மேல் நடந்தவர். வாழ்நாள் முழுவதும் வளர்ந்த குழந்தையாகவே வாழ்ந்தவர்.
நா.பா.வும் கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் ஸ்தாபன காங்கிரஸுக்கு ஆதரவாக பெருந்தலைவரை ஆதரித்து ஒன்றாக மேடையில் பேசியவர்கள்.
நா.பா. கண்ணதாசனிடம் கொஞ்சம் உரிமையோடு சொன்னார்:
`கொஞ்சம் இந்தக் குடிப் பழக்கத்தையெல்லாம் குறைத்துக் கொள்ளக் கூடாதா? உடம்பு தளர்ந்திருக்கிறதே?`
கண்ணதாசன் என்னைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டாத வெள்ளைச் சிரிப்பு.
அப்படிச் சிரித்தால் அடுத்து ஏதோ சுவாரஸ்யமாக அவர் சொல்லப் போகிறார் என்று அர்த்தம். நான் காதைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தேன்.
`தம்பீ! நா.பா. ஏதோ நான் மதுவிலக்குக் கொள்கைக்கு விரோதி மாதிரியில்ல பேசறாரு? மதுவை ஒழிக்கணும்கிறதே என் நோக்கமும்.`
`எப்படி?`
திகைப்புடன் கேட்டேன் நான்.
`உலகத்துல உள்ள மதுவையெல்லாம் குடிச்சே ஒழிச்சிடணும்னுதான் முயற்சி பண்றேன். முடியலியே?`
இப்படி ஜிலுஜிலுவென்று எதையாவது சிரிக்கச் சிரிக்கச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவரைச் சுற்றியிருக்கும் சூழல், இறுக்கம் தளர்ந்து நெகிழும். அவர் அருகே இருப்பவர்களுக்கு ஒரு பாதுகாப்புணர்ச்சியும் வாழ்க்கை இன்னும் ரசிக்கத் தக்கதாகத்தான் இருக்கிறது என்கிற பிடிப்பும் ஏற்படும்.
உதட்டில் ஒரு மெல்லிய முறுவலாவது இல்லாமல் கண்ணதாசனுடன் யாரும் பேச முடியாது.
`என் அப்பாவுக்கு மது மங்கை மாமிசம் முதலிய எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் நிறையச் சீட்டாடுவார். நான் சீட்டு மட்டும் ஆடமாட்டேன்!`
`ஞாபக சக்தியை வளர்க்க ஒரு மாத்திரை இருக்கிறது. அதை நானே பலமுறை சாப்பிட்டிருக்கிறேன். அந்த மாத்திரையின் பெயர்..அடடா! அதுதானே மறந்துவிட்டது!`
`மகனே! மீன் தண்ணீரிலேயே உயிர் வாழ்கிறதே, உனக்கு ஆச்சரியமாக இல்லையா?` - `இல்லையப்பா! அதே தண்ணீரிலேயே அது கொதித்துக் குழம்பாகிறதே, அதுதான் ஆச்சரியம்!`
இதெல்லாம் கண்ணதாச வரிகள்...
நன்றி =திருப்பூர் கிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,