தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும் 7 வயது சிறுமி
தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும்
7 வயது சிறுமி
காரியாபட்டி --கராத்தே, சிலம்பம், நீச்சல் என பல்வேறு தற்காப்பு கலைகளை கற்றதுடன், தென்னை மரத்தில் அசால்டாக ஏறி இளநீர் பறித்து போடும் 7 வயது சிறுமி அசத்தி வருகிறார்.
காரியாபட்டி மாந்தோப்பைச் சேர்ந்த பார்த்தசாரதி மகள் சியாமளாதேவி 7, அச்சங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலே கராத்தே, சிலம்பம், நீச்சல் என பல்வேறு தற்காப்பு கலைகளை ஆர்வமுடன் கற்றதோடு, 50, 70 அடி தென்னை மரத்தில் 2, 3 நிமிடங்களில் அசால்டாக ஏறி இளநீரை பறித்துப் போட்டு அசத்தி வருவதுடன், கிளைகளை பிடித்து லாவகமாக இறங்கி வருவது காண்போரை வியக்க வைக்கிறது.
சியாமளாதேவி, கூறுகையில், எனது தாத்தா தான் தற்காப்பு கலைகளை கற்றுத் தந்தார். எந்த ஒரு பயமும் இல்லாமல் மரத்தில் ஏறி இளநீர் பறித்து விடுவேன். விருந்தினர் வந்தால் இளநீர் கொடுத்து உபசரிப்போம். நான் மரம் ஏறுவதைக் கண்டு ஆச்சரியப் படுவர். என்னை பாராட்டி ஊக்கப்படுத்தும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்தடுத்த கலைகளை ஆர்வமாக கற்று வருகிறேன்.
அவரது தாத்தா ராமச்சந்திரன்,கூறியதாவது.எனது தந்தை முன்னாள் ராணுவ வீரர். மிகவும் கட்டுக்கோப்பாக எங்களை வைத்திருப்பார். அதே பாணியில் எனது பேரன், பேத்திகளை கொண்டு வர வேண்டும் என எண்ணினேன். நாங்கள் தோட்டத்தில் வசித்து வருகிறோம். அவசரத் தேவைக்கு யாரையும் எதிர்பார்க்க முடியாது. பிள்ளைகளுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுத் தரவேண்டும் என நினைத்தேன்.
பேத்தி சியாமளாதேவிக்கு கராத்தே, சிலம்பம், நீச்சல் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுத் தந்தேன். எளிமையாக கற்றுக் கொண்டார்.அடுத்து. மரம் ஏற கற்றுக் கொடுத்தேன். எவ்வளவு உயரமான மரமாக இருந்தாலும், லாவகமாக ஏறி இளநீர் பறித்து போட்டுவிடுவார். அடுத்து கரடு முரடாக இருக்கும் பனைமரத்தில் ஏறுவதற்கு பயிற்சியை அளித்து வருகிறேன்
விவசாயத்தில் இயற்கை உரங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து பேரனுக்கு கற்றுத் தருகிறேன். அடுத்த தலைமுறையினரும் விவசாயத்தை தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம், என்றார். இவர்களை ஊக்கப்படுத்த நினைத்தால்: 99446 76515.
thanks
https://m.dinamalar.com/
Comments