காலுக்குச் செருப்புமில்லை
காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாருக் குழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா! (காலுக்குச்...)
குண்டிக்கொரு துண்டுமில்லை
கொல்வறுமை தாளவில்லை
ஒண்டக் குடிசையில்லை - என் தோழனே
உழைத்திளைத்துப் போனோமடா (காலுக்குச்...)
நோய் நொடிகள் வெம்புலிபோல்
நூறுவிதம் சீறுவதால்
தாய்தந்தையர் பெண்டுபிள்ளை - என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா! (காலுக்குச்...)
வீடுமுச் சூடுமழும்!
கையிலொரு காசுமில்லை
கடன்கொடுப்பார் யாருமில்லை
செய்யும்தொழில் கிட்டவில்லை - என் தோழனே
திண்டாட்டம் கொல்லுமடா! (காலுக்குச்...)
வாங்கிய கடன் தீர்க்க
வக்கில்லை யானாலும்
ஏங்கி இரந்துண்ணவோ - என் தோழனே
எங்கள் மனம் கூசுதடா! (காலுக்குச்...)
கொச்சைப் பிழைப்பறியோம்
கொலைதிருட்டு அறியோம்
இச்சகப் பேச்சறியோம் - என் தோழனே
எத்தும் புரட்டறியோம் (காலுக்குச்...)
கோணல்மானல் திட்டங்களால்
கோடிகோடி யாயிக்குவித்தே
வீணர்சிலர் கொழுக்கக் கண்டோம் - என் தோழனே
வெஞ்சினம் பொங்குதடா! (காலுக்குச்...)
மாடமாளி கையவர்க்கு
மன்னர்மகு டமவர்க்கு
வாடவறு மைநமக்கு - என் தோழனே
வந்திடில் வாழ்வதெற்கு? (காலுக்குச்...)
ஒன்றுபட்டு போர்புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா - என் தோழனே
இம்சை முறைகளெல்லாம் (காலுக்குச்...)
- தோழர் ஜீவா -
Comments