மனிதம் நிறைந்த கவிஞர் கவிதை நிறைந்த மனிதர்

 ஏர்வாடியார் 75

*

மனிதம் நிறைந்த கவிஞர்

கவிதை நிறைந்த மனிதர்

*நல்ல மனிதர்கள் சிறந்த கவிஞர்களாகவோ  சிறந்த மனிதர்கள்  நல்ல கவிஞர்களாகவோ  ஒன்றாக அமைவது அரிது. இந்த இரண்டுமாக இருப்பவர் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள். 


அவர் ஒரு வங்கி அதிகாரி. அவரைக் கவிஞராகப் பார்ப்பதற்கு முன் அவருக்குள் இருக்கிற மனிதரைப் பற்றி ஒரு சம்பவத்தின் மூலமாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் பணியில் சேர்ந்த ஆரம்ப வருடங்களில் வங்கியில் கடன் வாங்கிய ஒருவர் பணத்தை திருப்பிக் கட்டவில்லை. அதை வசூல் செய்து வரும் பொறுப்பை உயர் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கொடுக்கிறார். கடன் வாங்கியவருடைய முகவரிக்குச் சென்று அவரைப் பற்றி விசாரிக்கிறார். அவரை சந்திக்கிறார்.  ஒரு அச்சகம் தொடங்குவதற்காக வங்கியிலிருந்து அவர் கடன் பெற்று இருக்கிறார் என்பதை அறிகிறார்.  


கடன் வாங்கிய தொகை முழுவதும் அச்சு இயந்திரத்தை வாங்குவதற்கே செலவாகி விட்டது. மின்சார இணைப்பு கொடுப்பது, அச்சு எழுத்துக்கள் வாங்குவது , அந்த நிறுவனத்தை தொடங்குவதற்கான ஆரம்பச் செலவினங்கள் போன்றவற்றிற்கான பணம் அவரிடம் இல்லை. அச்சு இயந்திரத்தை மட்டும் வாங்கிப் பல மாதங்களாக அது அங்கேயே இருப்பதால்  அவரால் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாதது மட்டுமல்ல... அந்த இடத்துக்கு வாடகை கூட கட்ட இயலாத நிலையில் இருக்கிறார்.  வீட்டில் இருக்கிற பணம், நகை போன்றவை அனைத்தையும் இதில் முதலீடு செய்து விட்டார். அவரால் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் இருப்பது ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது.   


கடன் பெற்ற தொகைக்கு மேலும் கொஞ்சம் பணம் இருந்தால்தான் அந்த நிறுவனம் தொடங்கி செயல்பட முடியும் என்பதை உணர்ந்து தன்னுடைய கைப்பணத்தையும் தன்னுடைய நண்பர்கள் மூலமாகச் சில  உதவிகளையும் பெற்று அந்த அச்சக உரிமையாளருக்குக் கொடுக்கிறார். அதைப் பெற்று அந்த அச்சகம் செயல்படத் தொடங்குகிறது. 

அது மட்டுமல்ல...

முதல் பணியாக தன்னுடைய கவிதை நூல் ஒன்றினை அச்சிடும் பொறுப்பையும் அவரிடம் கொடுக்கிறார். சில மாதங்களில் அந்தப் பகுதியில் ஓரளவு புகழ் பெற்ற நிறுவனமாக அந்த அச்சகம் செயல்படத் தொடங்கிவிட்டது. வங்கிக் கடன் தொகையையும் அவர் மெல்ல மெல்ல செலுத்தத் தொடங்கிவிட்டார். 


வங்கி அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களைப்  பாராட்டியது மட்டுமல்ல... கடன் வாங்கியவரும் நெகிழ்ந்துபோய்  நன்றி கூறினார். வங்கிக்கும் வரவேண்டிய பணம் வந்து விட்டது. கடன் பெற்றவரும்

எதற்காக கடன் பெற்றாரோ அந்தத் தொழிலை த்

தொடங்கி நடத்த முடிந்தது.


ஒரு அதிகாரி ஒரு மனிதனாகவும் இருந்ததால் நடந்த ஒரு நல்ல நிகழ்வு இது. 


சில அதிகாரிகள் விவசாயத்திற்குக் கடன் பெற்ற ஏழை, எளியவர்களிடம் கூட மனிதாபிமானமற்ற முறையில் வீட்டை ஜப்தி செய்வது, டிராக்டரை ஜப்தி செய்வது, வீட்டிலுள்ள பண்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் ஜப்தி செய்வது, விவசாயிகளையும் அந்த குடும்பத்தில் இருக்கிற பெண்களையும் தாறுமாறாகப் பேசுவது போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை எடுப்பதை நாம் தொலைக்காட்சி மூலமாகவும் செய்தித்தாள் வாயிலாகவும் அறிகிறோம். பெற்ற கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு வசதியிருந்தால் அந்த விவசாயி ஏன் பணம் தராமல் இருக்கப் போகிறார்? இதைப் பற்றி மாதம்தோறும் கைநிறைய சம்பளம் வாங்கும் அந்த அதிகாரிகளுக்குச் சிந்திக்கத் தெரியவில்லை. அவர்களுடைய வாழ்க்கை நல்ல விதமாகப் போகிறது. ஆகவே கடன் பெற்றவரை ஏதோ பிச்சைக்காரனைப் பார்ப்பது போல் பார்க்கிறார்.


ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் எதிராளியின்  சூழலைச் சிந்திப்பார்களாக இருப்பதனால்தான் இந்த மண்ணில் இன்னும் மழை பெய்துகொண்டிருக்கிறது.


இந்த சம்பவத்தில் ஏர்வாடியார் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரியாகவும் செயல்பட்டிருக்கிறார்.

ஒரு நல்ல மனிதனாகவும் நடந்து கொண்டிருக்கிறார்


இப்படிப்பட்ட ஈரமான  இதயம் கொண்ட மனிதர் ஒரு கவிஞராக இருப்பதில் என்ன வியப்பு இருக்க முடியும்? 


அவருடைய கவிதைகள் மிகவும் எளிமையானவை. மரபுக் கவிதையோ புதுக்கவிதையோ எந்த வடிவத்தில் எழுதினாலும் படிப்பவர்களைச் சிரமப்படுத்தாத சுலபமான வாக்கியங்களில் எளிமையான சொற்களில் எழுதுகிறவர். உதாரணமாக ஓரிரு வரிகள்:


சிலர் சிறையில் இருக்கிறார்கள் 

சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் 

சிலர் சிக்காமல் இருக்கிறார்கள்.

*

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிவிட்டு விநாயகரைக் கரைப்பது போல் 

தேர்தலைக் கொண்டாடிவிட்டு ஜனநாயகத்தைக் கரைந்து விடுகிறோம்.

*

வானொலி நாடகங்கள் புகழ் பெற்றிருந்த காலத்தில் அதில் தனக்கென ஒரு தடம் பதித்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைக் கட்டுரைகள் போன்றவற்றையும் அவர் விட்டு வைப்பதில்லை.


'மனதில் நின்ற மனிதர்கள்' என்ற தலைப்பில் மாதந்தோறும் 'கவிதைஉறவு' இதழில் அவர் எழுதிவரும் கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். அவற்றின் மூலம் உயர்ந்த மனிதர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் பலவற்றை நாம் கற்றுக் கொள்ளலாம்.


கவிதை உறவு இதழின்  மூலமாகப் பல இளம் கவிஞர்களைத் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிமுகம் செய்துவரும் அரும்பணியினை எந்த ஆடம்பரமும் இல்லாமல், அதன் மூலமாக கிடைக்கும் எந்த  அங்கீகாரத்துக்கும் ஆசைப்படாமல், எவ்வித புகழ்ச்சிக்காகவும்   இல்லாமல் 'இது என் கடமை' என்பதை போல் இயல்பாகச் செய்து வருபவர். 


ஆண்டுதோறும் கல்வி உதவி தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு அவரும் நண்பர்கள் மூலமும்  இணைந்து இயன்ற உதவிகள் செய்துவருகிறார். கொரோனா காலகட்டத்தில் 'உதவிக் கூடை' என்ற ஒன்றை அமைத்து  உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கும் உதவி செய்வதற்குத் தயாராக இருக்கும் நண்பர்களையும் இணைத்து பாலமாக இருந்து உதவி வந்தார். செல்வம், புகழ் இவற்றின் மூலமாக ஒரு மனிதன் எதைச் செய்ய வேண்டுமோ  எதைச் செய்ய இயலுமோமோ அதை ஏர்வாடியார் செய்கிறார்.


பணி ஓய்வு பெற்ற பிறகும்  பரபரப்பாகச் செயல்படும் இளைஞர். தலை நரைத்தாலும் சிந்தனை  நரைக்காத அறிஞர்.


மாதம் தவறாமல் கவிதை உறவு இதழை ஒற்றை மனிதராக அலுக்காமல் கொண்டு வருகிறார். நாளிதழ்களில் வாழ்வியல் கட்டுரைகள் எழுதுகிறார். தொலைக்காட்சி உரைகளை வழங்குகிறார். 


ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளில் தமிழகத்தில் இருக்கிற  படைப்பாளிகளின் பலருக்கும் பரிசு வழங்கி ஒரு திருவிழாப் போல அதை கொண்டாடுகிறார் 


இந்தக் கோடையிலும் கூட அங்கங்கே மழை பெய்து வருகிறது . ஏர்வாடியார் போன்ற மனிதம் போற்றும்

மனிதர்கள் இந்த மண்ணில் வாழ்கிறார்கள். எனவேதான் மழை பொழிகிறது.


உடல் நலத்தோடும்  மன வளத்தோடும் உறவும் நட்பும்  சூழ ஏர்வாடியார்

நூற்றாண்டு காண்க என்று இந்த 75வது பிறந்த நாளில் அவரை அன்புடன் வாழ்த்தி

வணங்குகிறேன்.


அன்புடன் 

பிருந்தா சாரதி 


18.05.2022

*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,