- ஸ்ரீபெரும்புதூர் -ஆவடி கூடுவாஞ்சேரி ரயில் பாதை உயிர்ப்பிப்பு!

 


ஆவடி- ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் பாதை உயிர்ப்பிப்பு!ஆவடி -- ஸ்ரீபெரும்புதுார் -- கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் அமைய உள்ள புதிய ரயில் பாதைக்கான, இறுதிக்கட்ட சர்வே பணிகள் விரைவில் துவக்கப்படும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் பெருக்கத்தால், இவ்வழித்தடத்தில் சிறப்பு கவனம் செலுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதற்கு ஏற்ப அப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஏதுவாக, தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகியவை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.

இதனால், அப்பகுதிகளில், சாலை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருவது மட்டுமின்றி, அவர்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய ரயில் போக்குவரத்து வசதியை உருவாக்குவது அவசியமாகிறது. பயணியர் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்துக்காக, ஆவடி -- ஸ்ரீபெரும்புதுார் -- கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 60 கி.மீ., துாரம் புது ரயில் பாதை அமைக்கப்படும் என, 2013ல் அறிவிக்கப்பட்டது.
திட்டப்பணியை நிறைவேற்ற, மொத்தம் 839 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டது. எனினும், அப்போது, போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் இருந்தது.தற்போது, மேற்கண்ட பகுதிகளில் முன்பை விட வேகமான வளர்ச்சியை கண்டுள்ளதுடன், அப்பகுதியில் ரயில் சேவை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த புதிய ரயில் பாதை திட்டத்துக்கு 'இறுதிக்கட்ட சர்வே' பணிகள் மேற்கொள்ள தெற்கு ரயில்வே, 'டெண்டர்' வெளியிட்டுஉள்ளது. இனியும் தாமதிக்காமல், இத்திட்டத்தை செயல்படுத்த, ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கையால், புதிய ரயில் பாதை திட்டம் உயிர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ஆவடி -- ஸ்ரீபெரும்புதுார் -- கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கியமான திட்டமாக உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ஆரம்ப நிலை 'சர்வே' பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, இறுதிக்கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டத்துக்கான இறுதிக்கட்ட சர்வே பணிகளை விரைவில் துவக்கவுள்ளோம். முதற்கட்டமாக, ரயில் பாதை செல்லும் இடங்களில் வரும் நிலம் குறித்தும், அதன் உரிமையாளர்கள் குறித்தும் கணக்கெடுக்கப்படும்.அதன்பின், சம்பந்தப்பட்டோருடன் பேச்சு நடத்தி, நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கும்.

இப்பாதைக்கு, 2013ம் ஆண்டு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டு கோட்டை இடையே, 7 கி.மீ., பாதைக்கு சர்வே விபரங்கள் மாற்ற வேண்டியிருந்தது. தற்போது, ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை இடையே, 7 கி.மீ., பாதை சர்வேயுடன், 60 கி.மீ., பாதைக்கு தேவையான இடங்கள் குறித்து, இறுதிக் கட்ட சர்வே அறிக்கை சமர்ப்பிக்க, 81 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வே பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,