சிரிக்கும் புத்தர்'

 1974 ஆம் ஆண்டு இதே மே 18ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா முதல் முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது. அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். புத்த பூர்ணிமா அன்று நடத்தப்பட்ட இந்த சோதனை, 'சிரிக்கும் புத்தர்' என்றும் அழைக்கப்பட்டது.





சிரிக்கும் புத்தர்... என்ற பெயரில், இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்ட நாள் இன்று. 47 ஆண்டுகளுக்கு முன் இந்தியா பதிவு செய்த அந்தச் சாதனை மூலம், உலகிற்கு தன் அணு ஆயுத வலிமையைப் பறைசாற்றி நிருபித்தது. அது பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை...


அகிம்சை என்னும் அமைதிப் பாதையை உலகிற்கு அறிமுகம் செய்த இந்தியா... ஆன்மிகம் செழித்து வளர்ந்த இந்தியா... ரத்தம் சிந்திய புரட்சிகளாலும்... கொத்துக் கொத்தாக உயிர்களைப் பலிவாங்கிய போர்களாலும்... உலக நாடுகள் சுதந்திரம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அகிம்சையை ஆயுதமாகப் பயன்படுத்தி 500 ஆண்டுகால அடிமைத்தளையில் இருந்து விடுபட்ட இந்தியா... அணு ஆயுத சோதனை நடத்தி, அணுகுண்டை வெடித்துக் காட்டும் கட்டாயத்தைக் காலம் ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப்போரின்போதே அணுகுண்டைத் தயாரித்து, அமெரிக்கா உலகப் பேட்டைக்காரனாக மாறிவிட்டிருந்தது. உலகின் பேட்டைக்காரன் நீ அல்ல... நான் தான் என்று அமெரிக்காவுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த, சோவியத் ரஷ்யாவும் அணுகுண்டுகளை உற்பத்தி செய்து குவித்து வைத்திருந்தது. இந்த இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் இருந்த பிரிட்டனும், பிரான்சும் தங்கள் பங்குக்கு அணுகுண்டுகளை வைத்திருந்தன. இந்தியாவின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் சீனாவும் அப்போதே அணுகுண்டுகளை வைத்திருந்தது. இந்தச் சூழலில் இந்தியாவில் இருந்து பிரிந்து போன பாகிஸ்தான், இந்தியாவிற்கு ஒவ்வொரு நாளும் முடிவில்லாத துயரங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், அணுகுண்டுகள் என்பது இந்தியாவின் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டிருந்தது.

உலக சரித்திரம்... அறிவியலின் அவசியம்... தொலைநோக்குப் பார்வை... தொழில்நுட்பங்களின் தேவை... என்பதில் கரை கண்ட இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இந்தியாவும் அணு ஆய்வில் தன்னிறைவு அடைய வேண்டும் என எண்ணத் தொடங்கினார். இதையடுத்து, இந்தியாவின் அணுசக்தி தொடர்பான பொறுப்புக்களை ஹோமிபாபா என்ற விஞ்ஞானியிடம் நேரு ஒப்படைத்தார்.

இந்திய அணு சக்தித் துறைக்குப் பொறுப்பேற்ற ஹோமிபாபா, உலக நாடுகளிடம் இருந்து அணு சக்தி தொடர்பான தொழில் நுட்பங்களைத் தேடித்தேடி வாங்கினார். பிரிட்டன் உதவியுடன், 1955-ம் ஆண்டு அப்சரா என்ற அணு உலையை இந்தியாவில் அமைத்தார். அமெரிக்கா, கனடா நாடுகளிடம் உதவியைப் பெற்று, சைரஸ் என்ற அணு உலை இந்தியாவில் அமையக் காரணமானார்.

ஓரளவுக்கு அணுசக்தி மையத்தைப் பலப்படுத்திய ஹோமிபாபாவும், ஜவஹர்லால் நேருவும், அடுத்தகட்டமாக அணுகுண்டு தயாரிப்பதற்கான ஆரம்ப வேலைகளைத் திட்டமிட்டனர். அணுகுண்டு தயாரிக்கத் தேவையான புளுட்டோனியத்தை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவெடுத்தனர். இந்திய அணு உலைகளில் யுரேனியத்தைப் பிளப்பதன் மூலம் கிடைக்கும், புளுட்டோனியத்தை சேகரிக்கும் வேலைகள் தீவிரமடைந்தன. ஆனால், துரதிருஷ்டவசமாக 1964-ம் ஆண்டு நேரு மரணமடைந்தார். அதன்பிறகு பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி அணுகுண்டுத் தயாரிப்பில் ஆர்வம் காட்டவில்லை. அதனால், வேலை மந்தமடைந்தது.

1966-ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்தார். அதையடுத்துப் பிரதமரான இந்திராகாந்தி, மீண்டும் அணுகுண்டுத் தயாரிப்பில் ஆர்வம் காட்டினார். ஆனால், அந்த நேரத்தில் ஹோமிபாபாவும் மரணமடைந்தார். இதையடுத்து இந்திய அணுசக்தித் துறைக்கு விக்ரம்சாராபாய் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் நடந்த, புளுட்டோனியம் சேகரிப்பு 1969-ம் ஆண்டு நிறைவு பெற்றது. இப்போது இந்தியாவிடம் அணுகுண்டு தயாரிப்பதற்கான புளுட்டோனியம் இருந்தது.

இதையடுத்து, அணுகுண்டு தயாரிக்கும் பொறுப்பு விஞ்ஞானி ராஜா ராமண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழுவில், பி.கே.அய்யங்கார், ஆர்.சிதம்பரம், பிரணாப், வி.சி.ராய் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றினர். அவர்களின் அயராத உழைப்பில் இந்தியாவின் அணுகுண்டு வடிவம் பெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டது. அதனால், இடையில் சிலகாலம் அணுகுண்டு தயாரிக்கும் பணி மீண்டும் மந்தமானது. ஆனால், அந்தப் போரில் வெற்றி பெற்ற இந்திரா காந்தி, புதிய உற்சாகத்தோடு, மீண்டும் அணுகுண்டு தயாரிக்கும் பணிகளை வேகப்படுத்தினார்.

உலக நாடுகளின் உளவுத்துறைகள் அத்தனைக்கும் தெரியாமல், அவை மிக ரகசியமாக, இந்தியாவின் தார் பாலைவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. 1974 மே 16 மற்றும் 17 தேதிகளில் அவை அங்கு வைத்தே ஒன்றாகப் பொருத்தி முழுமை அடையச் செய்யப்பட்டது.

பிரதமர் இந்திராகாந்தியின் உத்தரவுப்படி, உலகிற்கு அகிம்சையைப் போதித்த புத்தரின் பிறந்தநாளான பூத்தபூர்ணிமா அன்று, காலை 8 மணி ஐந்தாவது நிமிடத்தில், அந்த அணுகுண்டு வெடித்துப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின், தார்பாலைவனத்தில் உள்ள பொக்ரானில் நடைபெற்ற அந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

வெற்றிச் செய்தியை பிரதமர் இந்திராகாந்திக்குத் தெரிவித்த விஞ்ஞானிகள், புத்தர் சிரித்துவிட்டார் என சங்கேத மொழியில் அதைத் தெரிவித்தனர்.

அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா என்ற 5 அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. உலக நாடுகளின் பிரதானப் பத்திரிகைகள் அனைத்தும், இந்தியாவின் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையைத் தலைப்புச் செய்தியாக்கின. வல்லரசு நாடுகள் கோபமடைந்தன.

ஆனால், அனைத்தையும் எதிர்கொள்ளத் தயராக இருந்த பிரதமர் இந்திரகாந்தி, இந்தியா அணுகுண்டுகள் தயாரித்தது, எந்த நாட்டிற்கு எதிராகவும் அதைப் பயன்படுத்துவதற்கு இல்லை. மாறாக, தனது வலிமையை உலகிற்குக் காட்டவும், இந்தியாவை அச்சுறுத்த நினைக்கும் நாடுகளை எச்சரிக்கவுமே அணுகுண்டுகளைத் தயாரித்தது என்று சொல்லி இந்தியாவின் பெருமையை உலகிற்கு பிரகடனம் செய்தார்.

முதல் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு, இந்தியா தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை, வாஜ்பாய் பிரதமராக இருந்த 1998-ம் ஆண்டு மே 11 மற்றும் 13-ம் தேதிகளில் செய்து முடித்தது. ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் நடைபெற்ற அந்தச் சோதனைக்குப் பிறகே பாகிஸ்தான் தன் முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது.

அகிம்சையைப் போதித்த இந்தியா, அணு ஆயுத நாடாகவும் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டதற்கு காரணமாக இரண்டு அணு ஆயுத சோதனைகளும் மே மாதத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. 47 ஆண்டுகள் கடந்துவிட்ட அந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னால், 28 ஆண்டு கால உழைப்பும், போராட்டமும் உள்ளது என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,