க.நா.சு. ஓர் இலக்கிய இயக்கம்.

 


எழுத்தாளராகவே தன் வாழ்வைத் தொடர இளம் வயதிலேயே தீர்மானித்துவிட்ட கா.நா.சுப்பிரமணியம் கடைசி வரை முழு நேர எழுத்தாளராகப் படிப்பதிலும் எழுதுவதிலுமே நிறைவடைந்தவர். 1928_34 வரை (16 வயதிலிருந்து _ 22 வயது வரை) எதற்காக எழுதுகிறேன் என்ற சிந்தனை இல்லாமல் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதியதாகக் க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், பின்னாளில் மனைவி, ஒரே மகள் என்ற தன் சிறு குடும்பத்தின் வாழ்க்கைப் பாட்டிற்கான வருமானத்தை ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதன் மூலமே அடைந்திருக்கிறார். `தமிழில் நான் எழுத்தாளன்; ஆங்கிலத்தில் பத்திரிகையாளன்’ என்று ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு இவர் எழுதிய கட்டுரைகள் 15,000 என்று ஒரு தகவல். ஒரு நாளைக்கு 7 பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் என்று க.நா.சு. ஓரிடத்தில் கூறியிருப்பதை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாகத்தானிருக்கிறது. அவருள்ளிருந்து அவரை இயக்கிய சக்தி மகத்தானது.

ஆரம்ப காலத்தில் சூறாவளி, சந்திரோதயம் என்ற இதழ்களை நடத்திய போதிலும் `எழுத்து’ இதழின் எழுத்து முறையில் அதிருப்தியடைந்து அவர் தொடங்கிய `இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மரபில் ஒரு புத்தெழுச்சியாக அமைந்தது.
1965இல் க.நா.சு. தன்னுடைய 53ஆவது வயதில் தன் குடியிருப்பை டில்லிக்கு மாற்றினார். கடுந்தவமென முனைப்புடன் செயலாற்றியும் வணிகச் சூழலின் செல்வாக்கு தமிழில் செழித்தோங்கியதில் விரக்தியடைந்து, இந்த மாற்றத்தை அவர் மேற்கொண்டதாகத் தெரிகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் 1985இல் அவர் குடியிருப்பை சென்னைக்கு மீண்டும் மாற்றியபோது, முதுபெரும் எழுத்தாளருக்கான அங்கீகாரமும் கௌரவமும் அவரை வந்தடைந்தன. பிற்கால 3 ஆண்டு சென்னை வாழ்க்கையில் பெரும் பத்திரிகைகள் அவர் எழுத்துகளைக் கேட்டு வாங்கி வெளியிட்டன.
குங்குமம், முத்தாரம், தினமணிக்கதிர், துக்ளக் போன்ற பெரும் பத்திரிகைகளில் அவருடைய கட்டுரைத் தொடர்கள் வெளிவந்தன.
சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியர் பதவி கிடைத்தது. அச்சமயத்தில் அவரைப் பார்த்தபோது, 75ஆவது வயதில் முதல் முதலாக மாதச் சம்பளம் வாங்கப் போவது பற்றி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
1988இன் மத்தியில் மீண்டும் டில்லி சென்ற க.நா.சு. அவ்வாண்டின் இறுதியில் மறைந்து விட்டார். க.நா.சு. ஓர் இலக்கிய இயக்கம்.
- சி.மோகன்
நன்றி: அழியாச்சுடர்கள்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,