வயது பூஜ்ஜியம்/கவிதை/ஜே.ஜே.அனிட்டா
ஓர் அறையிலிருந்து
இன்னோர் அறைக்குத் தாவினேன்.
நிரவலாய் பரவியது குதிங்கால்கள்.
தாங்கிப் பிடித்த சுவர்
தழுவிய போது முதல் முறை வீழ்ந்தேன்.
வயது ஐந்து.
விளையாட்டாய் தள்ளி விட்டேன்.
அவன் எச்சில்
வழலை நுரையில் கரைகிற அளவு அழுந்த விரவினேன்.
அந்நிய முத்தங்களுக்கு
பாதுகாப்பில்லை.
வயது பத்து.
பூப்படைந்த முதுகின் சாவியை
திருகிய நாற்பதின் நரை கிருமி.
உடைந்து வலித்த போதும்
யாரிடமும் சொல்லவில்லை.
ஆடைகளின் கதவிடுக்கில்
ஊடாடி சுகமணிந்த சாத்தான்.
வயது பதினைந்து.
நாற்பதைம்பது கடிதங்கள்.
நன்னான்கு சந்திப்புகள்.
விதிக்கொரு விளக்கம் தந்து
வீட்டுக்கு அனுப்பினேன் பிரிவுகள் இலவசம்.
வயது இருபது.
கயிறுகட்டி இழுத்தால்
உறவு கெட்டிப் படும்.
வெட்கம் துக்கம் கக்கத்தில்.
விடுதலையென்று சொல்லி
அன்பில் பூட்டினார்கள்.
வயது இருபத்தைந்து.
கடவுளுக்கு உபகாரம்.
படைத்ததில் பங்கு.
இறக்க முடியாத மடிச் சுமை.
கனத்த மார்புக்கு இச்சையற்ற கச்சை.
வயது முப்பது.
திசையற்ற மேய்ப்பனின் வேங்குழலுக்கு இசைகிற செம்மறி பிழைப்பு.
பாதைகளில் யார் விளக்கேந்துகிறார்கள்.
ஒரே இருட்டு.
கையில் தங்கச் சாவி.
வயது நாற்பது.
எங்கிருக்கிறேன்.
தேடிப் பாருங்கள்.
கண்டடைந்த கண்களுக்கு
ஆயுளில் பாதி அணிந்து கொள்ள நேசம்.
யாராகயிருந்தாலும்
இயற்பெயரைக் கூறுங்கள்.
ஜே.ஜே.அனிட்டா
Comments