ஒரு கலாசாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம்தான் அளவுகோலா?''

 ஒரு கலாசாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம்தான் அளவுகோலா?''


''ஆமா, கலாசாரம்னு பேசுனா, மொதல்ல அங்கே இருந்துதானே தொடங்கணும்? ஒழுக்கம், ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ, அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும். ஒவ்வொருத்தனும் மனசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான். வெளியே பேசுறது பதிவிரதத்தனம். சென்னையிலேயே, ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு, குழாயை உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு? அட, பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது? என்னடா, இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது. இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது, இல்லையா? மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன்.''
''இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா?''
''கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும். எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும். பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும். மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விஷயமாக்கிட்டோம். பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு, அந்த ஞாபகமாகவே அலையுது. நான் கேட்குறேன்... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா, அது சிக்கலா, இல்லையா? அது அவனோட சிக்கல் மட்டும்தானா... சமுதாயத்தோட சிக்கலுமா? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே, அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி, கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க. ரெண்டு பசியுமே மோசமானது. ஆனா, இங்கே எல்லாருமே மேல் வயித்தைப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம். கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்.''
''சமூக வலைதளங்களை எல்லாம் கவனிக்கிறீர்களா?''
''சங்கதி என்ன நடக்குதுனு மட்டும் தெரியும். என்ன, முன்னே மறைச்சுவெச்சுப் படிச்சோம்... இப்பம் மறைச்சுவெச்சுப் பார்த்துக்குறீங்க, உறவாடிக்கிறீங்க.''
''இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா?''
''முதல் காதல்... ஹா... ஹா... பசிக்குது. அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு. உடனே கிடைச்சுட்டா, அதை ஒரு விஷயமா நெனைப்போமா? அப்படித்தான் இந்தக் காதலும். கிடைச்சுட்டா, அந்த நேரச் சாப்பாடு. கிடைக்காட்டி, அதுக்குப் பேர் காதல். கிடைக்கவே கிடைக்காட்டி, அது அமரக் காதல், காவியக் காதல். ஒரு விஷயம் சொல்லலாம். காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை. வந்துக்கிட்டே இருக்குறது.''
''நம் சமூகத்தில், பெரும்பாலான படைப் பாளிகள் தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.வெற்றிகரமான உதாரணங்களில் ஒருவர் என்ற முறையில் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்று சொல்லுங்களேன்..?''
''ரெண்டு காரணங்கள். ஒண்ணு, ஒரு படைப்பாளியோட நேரத்தை அவன் வீட்டுல அனுமதிக்கணும். எனக்கு ராத்திரியில எழுத வருது; அது சம்பந்தமா, முக்கியமா நான் ஒரு புத்தகத்தைப் படிக்கணும்னு வெச்சுக்குங்க. அப்போ நான் படிச்சாகணும். அப்போ பார்த்து என் பொண்டாட்டி, 'தூக்கத்தைக் கெடுக்காமப் படுங்க’னு சொன்னா வேலைக்கு ஆகாது. ஏன்னா, எழுத்து நம்ம இஷ்டப்பட்ட நேரத்துக்கு வராது. அதேபோல, அவளோட கஷ்டத்தையும் நான் புரிஞ்சுக்கணும். என்னோட அனுசரணையை அவ எதிர்பார்க்குறானு வெச்சுக்குங்க. பொய்யா யாவது சில வார்த்தைகள் ஆறுதலாப் பேசணும். நடிக்கணும். தப்பு இல்லே. மனசைக் காயப்படுத் துற மாதிரி உண்மையைப் பேசுறதைவிட இது மேல். இன்னொரு விஷயம் இருக்கு. படைப்பு சார்ந்து வர்ற உறவுகளை, குடும்பத்துக்கு உள்ளே நுழையவிடாம வெச்சுக்குறது. உங்க எழுத்தைப் படிச்சுட்டு ஒரு பொண்ணு, 'நான் உங்க அடிமை’னு சொல்லிக்கிட்டு வர்றானு வெச்சுக்குங்க. அவளை எங்கே நிப்பாட்டணும்னு உங்களுக்குத் தெரியணும். இது ரெண்டும் தெரியாததுதான் நிறையப் பேருக்குப் பிரச்னை ஆயிடுது.''
- கி.ரா. பேட்டி
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,