'இரவின் நிழல்' : உலக சாதனை

'இரவின் நிழல்' : உலக சாதனை

*


வித்தியாசமாக எதையாவது செய்பவர் இயக்குனர் பார்த்திபன். அவரது ஒவ்வொரு செயலிலும் அது தெரியும். 


அவரது பாதை புதிய பாதை. அவரது பார்வை பதிய பார்வை. 


முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பெயரை ஒருவர் குறையாமல் காப்பாற்றுவது சாதாரண விஷயமல்ல. அதற்கான அறிவும் அர்ப்பணிப்பும், உழைப்பும் கவனமும், விழிப்புணர்ச்சியும் தேடலும் கொஞ்சம் நஞ்சமாக இருக்கமுடியாது.

 

'ஒத்த செருப்பி'ல் ஒற்றை நடிகனாக முழு சினிமாவையும் தாங்கியவர் 'இரவின் நிழலில்' ஒரே ஒரு ஷாட்டில் முழு சினிமாவையும் எடுத்திருக்கிறார். சாத்தியம் இல்லாததைச் சாத்தியமாக்கி இருக்கிறார்.


ஒரு ஷாட் என்பது ஒரு காட்சித் துண்டு. நூற்றுக்கணக்கான காட்சித் துண்டுகளால் இணைக்கப்படுவதுதான் ஒரு திரைப்படம். அதன் ஒவ்வொரு ஷாட்டை எடுப்பதும் ஒரு பிரசவம் போல மிக கவனமாக இருக்கவேண்டிய ஒரு அக்னிப் பரீட்சை. கதை, முதன்மைக் கதாபாத்திரங்களின் தன்மை, கதைச்சூழல், அதற்கான கலை வடிவமைப்பு, உடை, ஒவ்வொரு  காட்சித் துண்டிலும் பங்கு பெறும் பொருட்கள்,  வசனம், நடிப்பு,  ஒளிப்பதிவு, துணைக் கதாப்பாத்திரங்களின் பங்களிப்பு, தொடர்ச்சி என அனைத்து அம்சங்களும் ஒரே நேரத்தில் கவனத்தில் இருக்கவேண்டும். ஒன்று பிசகினாலும் அந்தக் காட்சித் துண்டை மீண்டும் எடுக்க வேண்டும். அப்போதும் சரியாக வராவிட்டால் மறுபடி எடுக்க வேண்டும். இப்படி மறுபடி-மறுபடி எடுக்கப்பட்ட பல சரியான காட்சித் துணுக்குகளின் தொகுப்பே ஒரு திரைப்படமாக வருகிறது. அதனால்தான் திரைப்பட உருவாக்கத்தின்போது இயக்குனர்கள் டென்ஷனாக இருக்க நேர்கிறது.  


ஏறக்குறைய ஒன்றே முக்கால் மணிநேரத் திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு அர்ப்பணிப்பு தேவை என்பதைச் சொல்லத் தேவையில்லை.   

ஆச்சரியத்திற்கே ஆச்சரியம் வந்துவிடும். 


குறுக்கும் நெடுக்குமாக, முன் பின்னுமாகக் கதை சொல்லும் நான் லீனியர் உத்தி வேறு. இந்த உத்தியில் ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுப்பது உலகிலேயே இதுதான் முதன் முறையாம். 


கேன்ஸ் திரைப்பட விழாவில் 'இரவின் நிழலை'த் திரையிட்டபோது அது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதை ஜூரியில் இருந்த ஒரு பெண்மணி நம்பவில்லையாம். அப்படி நம்பமுடியாத அளவுக்கு ஒரு உண்மையாக இருக்கிறது இத்திரைப்படம் .  


உண்மையில் கேன்ஸ் விருதை விடவும் சிறந்த பாராட்டு இதுதான். உண்மையை சந்தேகிப்பதுதான் அதன் உயர்வுக்கான உரைகல். 


கதையில் ஒரு மனிதனின் வெவ்வேறு காலகட்டங்கள் அலசப்படுகின்றன. அவனது வாழ்க்கை முழுவதுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவனது குழந்தை பருவத்தில் இருந்து ஐம்பது வயது வரையான வாழ்க்கையில் அவன் சந்தித்த மனிதர்கள், அவனது காதல், அவனது போராட்டம் எல்லாமே சொல்லப்படுகிறது. இடையில் மூன்று பாடல்கள் வேறு. சுவாரஸ்திற்கும் குறைவில்லை.


ஒரு ஷாட் டில் எடுப்பதற்காக ஒரு கதையைத் தேர்ந்தெடுக்காமல் எடுத்துக் கொண்ட கதையை ஒரு ஷாட்டில் உருவாக்கி இருக்கிறார். ஒரு சவாலை உருவாக்கிக் கொண்டு அதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.


இருண்ட உலகினை படம்பிடித்தாலும் அதில் ஓர் அழகியல்.  ஒளிப்பதிவு , கலை இயக்கம் எல்லாம் அவ்வளவு அருமை. திரைக்கதையும் வசனமும்  

பார்த்திபனுக்கே உரிய புதுமையோடு உள்ளன. 


முக்கியமாக இசை. முள்பாதையில் நடக்க நேர்கையில்  சிராய்ப்புகளுக்குக் களிம்பு தடவிக் கடினமான பாதையைக் கொஞ்சம் இலகுவாகக்குகிறது.  கதாபாத்திரத்தின் வலியை உணர்த்தும் அதே நேரம் பார்வையாளனுக்கு பாரத்தை மட்டும் கடத்துகிறது. இப்படத்தை இதமாகக்கொண்டு செல்வதில்  ஏ. ஆர். ரகுமானின் பின்னணி இசை பெரும் பங்காற்றி இருக்கிறது.


கதையை இப்போது விவரிக்கவோ விவாதிக்கவோ இயலாது. வெளியான பிறகு பேசலாம். பேசுவார்கள். பேசப்படும்.


ஒளிப்பதிவு ஆர்தர் ஏ. வில்சன். நண்பர், இயக்குனர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்த'த்திற்கும் என்னுடைய 'தித்திக்குதே' திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர். இப்படத்தில் பணியாற்றியதன் மூலம் உலக சினிமா வரலாற்றில் இடம் பெறுகிறார். ஆம்... இத்திரைப்படம் உலக சினிமா வரலாற்றில் இடம் பெறும் தமிழ் திரைப்படம் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. வில்சனுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும். உங்களோடு நானும் பயணித்திருக்கிறேன் என்பதில்  அளவற்ற பெருமை கொள்கிறேன்.


இயக்குனர் பார்த்திபன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. உலகத் திரைப்பட வல்லுனர்களையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் சாதனையைச் செய்திருக்கிறார். 

அந்தப் படத்தின் உருவாக்கத்தைப் பற்றிய டாக்குமெண்டரியைப் பார்த்தபோதுதான் சாத்தியம் இல்லாததைச் சாத்தியமாக்கி இருக்கிறார் என்பதே புரிந்தது.  ஒரு திரைப்பட ரசிகனாக 

அவரை ஆரத் தழுவி முத்தமிடுகிறேன். 


படம் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது இயக்குனர் லிங்குசாமியும் நானும்  திரைப்படம் பற்றி ஒரு நீண்ட உரையாடலை  நிகழ்த்திருந்தோம். இரவு வீட்டுக்கு வந்தும் உறக்கமில்லை. பாகுபலி சிலையின் உயரத்தோடு போட்டி போடுகிறது 'இரவின் நிழலி'ன் நீளம் . இந்த நிழல் ஆஸ்கர் வரை நீளும் என நம்புகிறேன்.


தமிழ் சினிமாவை அல்ல... தொழில்நுட்ப ரீதியாக உலக சினிமாவையே வியக்கவைத்திருக்கிறது இந்த 'இரவின் நிழல்'. இப்படத்தில் பங்குபெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் என்

வாழ்த்துக்கள் 💕

*

அன்புடன்,


பிருந்தா சாரதி

*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,