போயஸ் கார்டன் இல்லம்
1972-ம் வருடம் மே மாதம் 15-ந்தேதியன்று போயஸ் கார்டன் இல்லம் கிரகப்பிரவேசம் நிகழ்ந்தது. மகளோடு மகிழ்ச்சியாக அந்த நாளை கொண்டாடியிருந்திருக்கவேண்டிய சந்தியா வீட்டின் சுவரில் புகைப்படமாக தொங்கிக்கொண்டிருந்தார்.
வீட்டிற்கு தாயின் நினைவாக அவரது இயற்பெயரான வேதா என்பதை சூட்டினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் தவிர, தமிழகத்தின் பிரபலங்கள் பலரும் ஆஜராகியிருந்தனர். ! அப்போது எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்குமிடையே ஏதோ பிரச்னை எனப் பேசப்பட்டது. ஆனால் உதவியாளர் மூலம் விலையுயர்ந்த பரிசுகளை அனுப்பிவைத்திருந்தார் எம்.ஜி.ஆர். கோபத்தில் அவற்றைத் திருப்பியனுப்பினார் ஜெயலலிதா.
விழாவில் வீணை வித்வான் சிட்டிபாபு நிகழ்த்திய சிறப்புக் கச்சேரியின்போது ‘வேதா நிலையத்தின்’ பெயரிலேயே ஒரு பாடலை புனைந்து பாடி ஜெயலலிதாவை மகிழ்வித்தார். வேதங்களையும், வேதங்களின் ஆகம சூத்திரங்களையும் கொண்டு புனையப்பட்ட அப்பாடலை கேட்டு உருகிநின்றார் ஜெயலிதா.
ஜெயலலிதாவுக்கு இந்த கிரகப்பிரவேசத்தின்போது இன்னொரு மறக்கமுடியாத சம்பவமும் உண்டு. அது விழாவை சோ புறக்கணித்தது. ஜெயலலிதாவின் இளமைக்கால நண்பரான சோ, குடும்ப நண்பரும்கூட. தனது வீட்டு நிகழ்ச்சிகளை சோ இன்றி நடத்தியதில்லை சந்தியா. அதனால் கிரகப்பிரவேசத்தில்
சோவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார் ஜெயலலிதா. உள்ளுரில் இருந்தும் சோ விழாவுக்கு வரவில்லை. காரணம் கேட்டதற்கு 6 பக்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார் சோ. பத்திரிகையை நேரில் தராமல் தன்னை அவமதித்துவிட்டதாக அக்கடிதத்தில் குறிப்பிட்ட சோ, கர்வத்தினால், தான் செய்த தவறுக்கு வருந்துவதாக கூறியிருந்தார்.
தென்னகத்தின் புகழ்மிக்க நட்சத்திரமாக ஜெயலலிதா நூறாவது பட கொண்டாட்டத்தைக் கண்டது, நம்பிய மனிதர்களால் நம்பிக்கைத்துரோகத்துக்கு ஆளானது, உறவினர்களால் நடுவீதிக்கு கொண்டுவரும் நிலை உருவானது, வாய்ப்புகள் குறைந்து பொருளதாரப் பிரச்னைக்காக நாட்டியக்குழுவை நடத்தி சிரமப்பட்டது, அதிமுகவில் சேர்ந்தது, அடுத்தடுத்து அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்தது என ஜெயலலிதா என்ற பெண்மணி சினிமாவில் வெளிப்படுத்திய சோகம், ஆனந்தம், துக்கம், விரக்தி வெறுமை என அத்தனை உணர்ச்சிகளையும் நிஜமாய் அனுபவித்தது இந்த வீட்டில்தான்.
எத்தனை பெரிய பிரச்னைகளோடு அந்த அறையில் நுழைந்தாலும் மீண்டும் கதவு திறக்கப்படும்போது புது மனுஷியாக முகத்தில் தெளிவோடு வெளியே வருவார். இப்படி அவரின் கோபதாபங்கள், சாந்தம், கொண்டாட்டம் என அந்தந்த நேர உணர்வுகளின் ஜெயலலிதா வெளிப்படுத்திய உஷ்ணங்களை சுமந்துகொண்டிருக்கிற இல்லம் போயஸ் கார்டன்
நன்றி: தமிழ்மித்ரன்
Comments