இரண்டு கவிஞர்களும் ஒருவரையொருவர் காதலித்தார்கள்
கண்ணதாசனுக்கு போட்டிதான் வாலி. ஆனால், இருவரும் முட்டிக்கொண்டதில்லை. திடீரென்று இரவு 11 மணிக்கு கவியரசர் போன் பண்ணுவார் வாலிக்கு. ‘யோவ், அந்தப் பாட்டைக் கேட்டேன்யா. என்னவோ செய்யுதுய்யா. நல்லா எழுதிருக்கே. உனக்கு விஸ்கி அனுப்பிச்சிருக்கேன்யா. நிறைய எழுதுய்யா’ என்பார். இப்படித்தான் இரண்டு கவிஞர்களும் ஒருவரையொருவர் காதலித்தார்கள்.
எம்ஜிஆருக்கு மட்டுமா... சிவாஜிக்கும்தான் ஏராளமாக எழுதினார். ‘இதோ... எந்தன் தெய்வம் முன்னாலே’ முதலான பாடல்களையெல்லாம் எழுதினார்.
‘தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை - கண்டு
தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டான் - அந்த
சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்’ என்ற பாடல் வரிகளை கண்ணதாசன் பாட்டு என்று இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும்.
சிவாஜியுடன் ஜெயலலிதா முதன்முதலாக நடித்த படம் ‘கலாட்டா கல்யாணம்’. ‘யோவ் வாலி, அந்தப் பொண்ணு இப்பத்தான் முதல்ல நம்ம கூட நடிக்குது. அப்படியொரு பாட்டை எழுதுய்யா’ என்றாராம் சிவாஜி. வாலி எழுதினார்... ‘வந்த இடம் நீ நல்ல இடம் வரவேண்டும் காதல் மகாராணி’ என்று எழுதினார்.
‘’சர்வர் சுந்தரம்’ படத்தில் ஒரேயொரு பாடலைத் தவிர எல்லாப் பாடல்களும் கண்ணதாசன். திடீரென வாலியை அழைத்து ஒரேயொரு பாட்டு கொடுக்கப்பட்டது. வந்தார். டியூனைக் கேட்டார். கையோடு எழுதிக் கொடுத்தார்.
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ளவரை தொடர்ந்துவரும்’
என்கிற இந்தப் பாடல்தான் படத்தின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது’’ என்று படத்துக்கு கதை, வசனம் எழுதிய பாலசந்தர் சொல்லியிருக்கிறார்.
பாட்டுப் பயணம்... ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா வரை நீண்டது.
’கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ என்று முருகனை உருகி உருகிப் பாடுவார். ‘காதல் வெப்சைட் ஒன்று’ என்று ஹைடெக் பாட்டெழுதுவார். ‘இந்தியநாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு’ என்று தேசப் பக்தி முழங்குவார். ’சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ என்று ரயில்விடுவார். ‘முக்காலா முக்காபுலா’ என்று டீன் ஏஜ் குறும்புகளை தெறிக்கவிடுவார். ‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ என்றும் எழுதுவார். ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்று தாய்மையைக் கொண்டாடுவார். வெண் தாடியும் விபூதியுமாக வலம் வந்தாலும் அவர் எல்லோருக்கும் வாலிபக் கவிஞராகவே திகழ்ந்தார். ’சுந்தரி கண்ணால் ஒருசேதி’யில் சொக்கிப் போனார்கள் ரசிகர்கள்.
‘பொய்க்கால் குதிரைகள்’ படத்தில் பாலசந்தர் வாலியை நடிகராக்கினார். பிறகு, ‘சத்யா’, ஹேராம்’ என்று பல படங்களில் நடித்தார்.
வாலியின் இன்னொரு ஸ்பெஷல். கண்ணதாசன் வாலியைப் புகழ்ந்தது போலவே, அடுத்த தலைமுறை கவிஞர்களை கொண்டாடினார் வாலி.
நன்றி: இந்து தமிழ் திசை
Comments