ஒரு செப்புக்காசு


 கைராட்டை சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காகப் பல நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நடையாக நடந்துகொண்டிருந்தார் காந்தி. அப்படிச் சென்ற காந்தி ஒருநாள் ஒடிசாவுக்கு (அன்றைய ஒரிஸ்ஸா) வந்தார். அங்கே ஒரு நகரத்தில் அவர் பேச ஏற்பாடாகியிருந்தது. அன்றைக்கு நல்ல கூட்டம். காந்தி தன் மெல்லிய குரலில் பேசினார். கதராடை, கைராட்டை, அது அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் எவ்வளவு அவசியம், அந்நியத் துணிகளை ஏன் புறக்கணிக்க வேண்டும், கைராட்டை சங்கம்... அனைத்தையும் மெள்ள மெள்ள எல்லோருக்கும் புரியும் மொழியில் விளக்கினார். கூட்டம் காந்தியின் வார்த்தைகளை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தது.

தன் உரையை முடிக்கவிருந்த நேரம், காந்தி கூடியிருந்த மக்களிடம் ஒரு கோரிக்கையைவைத்தார். “அன்புக்குரியவர்களே... நான் என்ன காரியமாக இங்கே வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். கைராட்டை சங்கத்துக்கு நிதி திரட்டிக்கொண்டிருக்கிறேன். உங்களால் இயன்ற உதவியை தாராளமாகச் செய்யுங்கள்!”
கூட்டத்தில் இருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடினார்கள். சிலர் தொண்டர்களிடமே கைராட்டை நிதிக்காகப் பணத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தின் ஓர் ஓரமாக இருந்த ஒரு மூதாட்டி எழுந்தார். நரைத்த தலை, முதுமையில் சுருங்கிப்போன தோல், கூன் விழுந்த முதுகு, உடலைச் சுற்றிக்கட்டியிருந்த பழம் புடைவை... தோற்றமே அவரின் ஏழ்மையையும் முதுமையையும் பறைசாற்றிக்கொண்டிருந்தது. அவர் மேடையில் இருந்த காந்தியை நோக்கிப் போனார். சில தொண்டர்கள் அவரை வழிமறித்தார்கள். “பாட்டி... கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. மேடைகிட்ட உன்னால போக முடியாது” என்று சொன்னார் தொண்டர் ஒருவர்.
அந்த முதிய பெண் யார் சொல்வதையும் கேட்கத் தயாராக இல்லை. தடுத்தவர்களை மூர்க்கமாக விலக்கினார். “நான் பாபுஜியைப் பார்க்கணும்... பாபுஜியைப் பார்க்கணும்” என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். என்ன இருந்தாலும், ஒரு மூதாட்டியுடன் வெகு நேரத்துக்கு மல்லுக்கட்ட முடியாதுதானே! தொண்டர்கள் அவருக்கு வழிவிட்டார்கள். மூதாட்டி, கூட்டத்தை விலக்கிக்கொண்டு மெள்ள மெள்ள நடந்து காந்திஜியிடம் போனார். காந்தி மேடை விரிப்பில் அமர்ந்திருந்தார். மூதாட்டி, காந்தியின் காலைத் தொட்டார். காந்தியைப் பார்த்த பரவசம் அவருக்கு உற்சாகத்தை வரவழைத்திருந்தது. நேருக்கு நேர் பார்த்துச் சிரித்தார்.
“பாபுஜி... ரொம்ப நல்ல காரியம்லாம் பண்றீங்க. நீங்க நல்லா இருக்கணும். நீங்க நடத்துற எல்லாப் போராட்டமும் வெற்றி பெறணும். இங்கே வந்திருக்குறவங்க நிறையக் குடுப்பாங்க. எனக்கும் நிறையத் தரணும்னு ஆசையிருக்கு. ஆனா, என்கிட்ட நிறையப் பணம் இல்லை. நான் குடுக்குறதை வாங்கிப்பீங்களா?’’
காந்தி புன்முறுவலோடு தலையசைத்தார். அந்த மூதாட்டி, தன் புடைவை முந்தானையில் எதையோ தேடினார். அதன் முனையில் எதையோ முடிந்துவைத்திருந்தார். அதில் ஒரு செப்புக்காசு இருந்தது. அதை எடுத்து, தன் தளர்ந்த கரங்களில் வைத்து காந்தியிடம் நீட்டினார். காந்தி அந்தக் காசை வாங்கும்போது அவர் விரல்கள் நடுங்கின. பிறகு அந்தப் பெண்மணி காந்தியை வணங்கிவிட்டுத் திரும்பி நடந்தார். கண்ணிலிருந்து மறையும் வரை அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார் காந்தி. அவர் கண்பார்வையில் இருந்து மறைந்ததும், அந்தச் செப்புக்காசை எடுத்துப் பத்திரப்படுத்தினார்.
கைராட்டை சங்கத்தின் நிதியை வசூலித்து, கணக்குப் பார்த்து வைக்கும் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் காந்தியிடம் வந்தார். “பாபுஜி... அந்தக் காசைக் கொடுங்கள்... கணக்கில் சேர்க்க வேண்டும்” என்றார். காந்தி பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
திரும்பத் திரும்ப எத்தனை முறை கேட்டும், காந்தி அதைத் தர மறுத்துவிட்டார். பொறுப்பாளருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘என்ன இது... ஒரு குழந்தையைப்போல அடம்பிடிக்கிறார் பாபுஜி?!’ என யோசித்தார். “பாபுஜி... பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள செக்கெல்லாம் என்கிட்ட இருக்கு. ஒரு செப்புக்காசுக்கு என்னை நம்ப மாட்டேங்கிறீங்களே?’’ என்றார்.
“இது வெறும் செப்புக் காசில்லை. விலை மதிப்பில்லாதது. லட்சக்கணக்கான ரூபாய் வைத்திருக்கும் ஒருத்தர், ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய் கொடுக்குறது பெரிய விஷயமில்லை. ஆனா, அந்த முதிய பெண்கிட்ட இந்தக் காசைத் தவிர வேற எதுவுமே இல்லை. ஏன்... நல்ல ஆடையைக்கூட அவங்க போட்டிருக்கலை. அவங்க நல்ல சாப்பாடு சாப்பிடுறாங்கனுகூட நம்ப முடியாது. ஆனாலும் அவங்ககிட்ட இருந்த மொத்தத்தையும் என்கிட்ட குடுத்துட்டாங்க. இதுவரைக்கும் எனக்குக் கிடைச்சதுலயே பெரிய பொக்கிஷம் இதுதான். இதை நான் யாருக்கும் குடுக்க மாட்டேன்’’ என்றார் காந்தி.
காந்தி தன் இறுதிக்காலம் வரை அந்தச் செப்புக்காசை பத்திரமாக தன்னுடனேயே வைத்திருந்தார்.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,