அன்னையர் தின வாழ்த்துகள்
அன்னையர் தின வாழ்த்துகள் 💐
*
உயிர்த் திசை
*
கடல் பயணிகளுக்கு திசைக் குழப்பம் வருமாம்
வானில்
மேகம் சூழ்ந்த மழை நாட்களில்.
இரவை விடவும் பகல்
அச்சமூட்டும் நாட்கள் அவை
காந்தமுள் கண்டுபிடிக்கும் வரை.
இரவாவது பகலாவது
கிழக்காவது மேற்காவது
தாயின் கருவறையில் தொடங்கும்
நம் பயணங்களுக்கு
காந்த முள் எதற்கு?
நம் உயிர்த் திசையை
தன் உதிரத்தால் வரைகிறாள் அவள்.
அதனால்தான்
பிறந்ததும்
கண்திறக்கும் முன்பே
பசியாறுமிடம் தெரிகிறது நமக்கு.
நீருக்கடியில்
ஒருமுறை கூட சுவாசிக்க இயலாத நாம்
அவள் கர்ப்பப் பையில்
மீனைப் போல் நீந்துகிறோம்.
அந்த நீச்சல் பயிற்சியால்தான்
பிறவிப் பெருங் கடலையும் பின் நீந்திக் கடக்கிறோம்.
அவள்
இதயத் துடிப்புதான்
நம் திசைகாட்டி.
கருவறை தாண்டி வந்துவிட்டதாக
நாம்தான் நினைக்கிறோம்.
அப்படி நினைப்பதில்லை
அம்மாக்கள்.
நாம் உயிர்ப்பதற்கு
உடலின்
கருப்பையில்
பத்து மாதம் வைத்திருக்கிறாள்.
பின்
கண்ணுக்குத் தெரியாத ஒரு கருப்பையில்
காலமெல்லாம்
வைத்திருக்கிறாள்.
அவள் இறந்தபின்
உலகமே அவள் கருப்பையாகிறது .
அதில்தான் நாம் வாழ்கிறோம்.
*
படமும் கவிதையும்:
பிருந்தா சாரதி
*
Comments